ராஜேந்திர பாலாஜிக்கு புது சிக்கல்.. லஞ்ச ஒழிப்புதுறை ஹைகோர்டில் சொன்ன முக்கிய தகவல்
சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாக 73 சதவீதம் அளவுக்கு சொத்து குவித்து உள்ளார் என லஞ்ச ஒழிப்புத் துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது குறித்து மேல் விசாரணை நடைபெற்று வருவதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மதுரையை சேர்ந்த மகேந்திரன் என்பவர் அதிமுக முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாக 7 கோடி ரூபாய் சொத்து சேர்த்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததால் ராஜேந்திர பாலாஜி மீது சொத்து குவிப்பு வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.

மாறுபட்ட தீர்ப்பு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நீதிபதி ஹேமலதா அடங்கிய அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. வழக்கு பதிவு செய்ய வேண்டும் என நீதிபதி சத்தியநாராயணனும், வழக்கு பதிவு செய்வதால் எந்த பயனும் இல்லை என கூறி நீதிபதி ஹேமலதா, வழக்கை தள்ளுபடி செய்தும் தீர்ப்பளித்தனர்.

வழக்கு விசாரணை
இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், இதனால் மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக எம்.நிர்மல்குமார் நியமனம் செய்யப்பட்டார். அண்மையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

கைவிட்ட காவல்துறை
அப்போது ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக 10 சதவீதத்திற்கும் குறைவாகவே சொத்து சேர்த்து வைத்தால் அந்த வழக்கை கைவிட காவல்துறை முடிவு செய்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

லஞ்ச ஒழிப்பு துறை
ராஜேந்திரபாலாஜி தரப்பில் வாதம் முடிவடைந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா தனது வாதத்தை முன் வைத்தார். அப்போது அவர், ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான புகார் குறித்த ஆரம்பகட்ட விசாரணையில், வருமானத்தில் 10 சதவீதத்துக்கும் குறைவாக சொத்து சேர்த்ததாக கூறி வழக்கை கைவிட முடிவெடுக்கப்பட்டதாகவும், ஆனால், வருமானத்துக்கு அதிகமாக 73 சதவீதம் அளவுக்கு ராஜேந்திர பாலாஜி சொத்து சேர்த்துள்ளது தெரிய வந்துள்ளதாக தெரிவித்தார்.

வழக்கு கைவிடப்படாது
வழக்கை கைவிடுவதை பொறுத்தவரை முழுமையான நீதிமன்ற விசாரணைக்கு பிறகே முடிவு செய்ய முடியும் எனவும், ஆரம்பகட்ட விசாரணையை வைத்து முடிவெடுக்க முடியாது எனவும் தெரிவித்த லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கறிஞர், தற்போது மேல் விசாரணை துவங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.இறுதி அறிக்கை தாக்கல் செய்த பிறகும் கூட, மேல் விசாரணை நடத்தலாம் என உயர் நீதிமன்ற முழு அமர்வு தீர்ப்பளித்துள்ளதாகவும் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

வழக்கு தள்ளிவைப்பு
இந்த வாதத்திற்கு பதிலளிக்கவும் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய ராஜேந்திர பாலாஜி தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை ஏற்ற நீதிபதி நிர்மல்குமார், விசாரணையை செப்டம்பர் 8ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications