தவெகவும் உள்ளே வருதா? கூட்டணிக்கு வந்தால் நல்லதாம்.. அதிமுக லீடர் ஆசையை பாருங்க!
சென்னை: அதிமுக கூட்டணியில் தவெக இணைந்தால் நல்லதுதான் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். அதிமுக - பாஜக கூட்டணி அண்மையில் உறுதி செய்யப்பட்ட நிலையில், அதிமுகவின் முன்னணி தலைவரான ஆர்பி உதயகுமாரின் இந்தக் கருத்து சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. அண்மையில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து 2026 சட்டசபை தேர்தலைச் சந்திக்கும் என்றும், 2026ல் என்.டி.ஏ கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். சென்னையில் எடப்பாடி பழனிசாமி உடனான ஆலோசனைக்குப் பிறகு அவர் இதனைத் தெரிவித்தார்.

தவெக நிலைப்பாடு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பாஜகவையும், திமுகவையும் கடுமையாக எதிர்த்துப் பேசி வருகிறார். மாநாட்டிலும் சரி, அண்மையில் நடந்த பொதுக்குழு கூட்டத்திலும் சரி விஜய், திமுக, பாஜகவை சரமாரியாக விமர்சித்து வருகிறார். சித்தாந்த எதிரி பாஜக என்றும், அரசியல் எதிரி திமுக என்றும் கூறியுள்ளார்.
முன்பு, அதிமுக - தவெக கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டது. இரு கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது அதிமுக - பாஜக உடன் கூட்டணியை உறுதி செய்துவிட்டதால் இனி அதிமுக உடன் தவெக கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என்ற சூழலே நிலவுகிறது.
தவெக இணைந்தால் நல்லது
இந்நிலையில் தான் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தவெகவும் கூட்டணியில் இணைந்தால் நல்லது என்கிற ரீதியில் பேசி இருக்கிறார். இது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தைக் கிளப்பி விட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இணைய வாய்ப்பு இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதில் அளித்த சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், "உங்கள் எண்ணம் நல்ல எண்ணம். நல்ல எண்ணத்தோடு கேட்கிறீர்கள். நல்லதாகவே நடக்கட்டும்" என பதில் அளித்துள்ளார்.
சென்னை பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடி பகுதியில் அதிமுக வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
ஆர்பி உதயகுமார்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "வாரந்தோறும் திண்ணை பிரச்சாரத்தின் மூலமாக துண்டு பிரசுரங்களை வழங்கி வருகிறோம். 11வது வாரமாக திண்ணை பிரச்சாரம் தொடர்ந்து வருகிறது. ஜனநாயக படுகொலை செய்யப்படுவதை தோலுரித்துக் காட்டும் வகையிலும் இன்று விண்ணை மூட்டுகின்ற விலைவாசி மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டமன்ற சீரழிவு, போதைப்பொருள் நடமாட்டம், பாலியல் வன்கொடுமைகள் இதுபோன்று அவலங்களிலிருந்து தமிழக மக்களை மீட்டெடுப்பதற்காக உரிமைகளை காப்பாற்றுவதற்காக திண்ணைப் பிரச்சாரம் நடத்தி வருகிறோம்.
இந்த திண்ணை பிரச்சாரத்தின் மூலமாக 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான வெற்றி கூட்டணி மாபெரும் வெற்றியடையும் வகையில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வெல்வதுதான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் லட்சியம். 200 தொகுதிகளில் அதிமுக வெல்வது நிச்சயம்.
காட்டு தர்பார்
சட்டசபையில் நேரலையில் அவர்கள் பேசினால் தொழில்நுட்பக் கோளாறு வருவதில்லை. எதிர்க்கட்சித் தலைவர் பேசினால் உடனே தொழில்நுட்பக் கோளாறு வருகிறது. பாரபட்சமான நடவடிக்கை, இது ஜனநாயக படுகொலை. எதிர்க்கட்சித் தலைவர் என்ன கேள்வி கேட்கிறார் என்ன மக்கள் பிரச்சனை பேசுகிறார்? முதலமைச்சர் என்ன பதில் சொல்கிறார்? என்று மக்களுக்கு புரியும். ஊமைப் படம் போன்று அவர்கள் பேசுவதை மட்டும் காட்டுகிறார்கள்.
வடக்கு எது, கிழக்கு எது தெற்கு என்று தெரியாத நிலைதான் சட்டசபையில் நிலவுகிறது. இது முழுக்க முழுக்க ஜனநாயக படுகொலை, சர்வாதிகாரம், காட்டு தர்பார். எடப்பாடி முதல்வராக வருவார், அப்போது சட்டசபை ஜனநாயகம் காப்பாற்றப்படும்." எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications