நேரம் முடிய போகுதுங்க.. சீக்கிரமா ஆதார் கார்டை எடுத்துக்கிட்டு போங்க.. மக்களுக்கு போன முக்கிய தகவல்
சென்னை: ஆதார் அட்டையில் மாற்றங்களை செய்ய மத்திய அரசு இலவச ஆன்லைன் வசதியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. இதை மேற்கொள்ள இன்னும் ஒரு வாரம் மட்டுமே அவகாசம் உள்ளது.
ஆதார் கார்டு தற்போது நாட்டில் முக்கியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. பல சேவைகளுக்கு இந்தியாவில் ஆதார் கார்டு முக்கியம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியதும் அவசியம் ஆகிவிட்டது.

மத்திய அரசு சேவைகள், மாநில அரசு சேவைகளை பெற ஆதார் கார்டு முக்கியம் ஆகி உள்ளது. முக்கியமாக மின்சார எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்து உள்ளது.
இதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டது. தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவச மின்சாரம் பயன்படுத்தும் மின் நுகர்வோர்கள் 2.90 கோடி பேர் இருக்கின்றனர். இதில் 10 ஆயிரம் பேரை தவிர மற்ற எல்லோரும் ஆதாரை இணைத்துவிட்டனர். அதேபோல் நாடு முழுக்க பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. தற்போது இதற்கான அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது
ஆதார் மாற்றம்: இந்த நிலையில்தான் ஆதார் அட்டையில் மாற்றங்களை செய்ய மத்திய அரசு இலவச ஆன்லைன் வசதியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. 10 ஆண்டுகளாக ஆதார் கார்டை அப்டேட் செய்யாதவர்கள், விலாசம் மாறியவர்கள், ஆதார் கார்டில் தவறான விவரங்கள் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.
உதாரணமாக உங்களின் பெயர் தவறாக இருந்தால் அல்லது வேறு விவரங்கள் தவறாக இருந்தால் ஆன்லைன் மூலம் அதை எளிதாக மாற்ற முடியும். இதற்கான வசதிகளை ஆதார் அமைப்பு ஏற்படுத்தி கொடுத்து உள்ளது.
UIDAI ஏற்படுத்தி கொடுத்துள்ள வசதிகள் மூலம் எளிதாக இந்த விவரங்களை மாற்ற முடியும். செப்டம்பர் 14ம் தேதி வரை இந்த மாற்றங்களை செய்ய கட்டணம் இல்லை. ஆன்லைன் மூலம் எளிதாக செய்ய முடியும். நேரில் ஆதார் மையத்தில் செய்வதற்கு மட்டும் 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
myAadhaar பக்கம் மூலம் எளிதாக இவர்கள் விலாசத்தை மாற்றும் வசதி உள்ளது. செப்டம்பர் 14க்கு பின் அந்த அவகாசம் நிறைவிற்கு வரும். அதன்பின்இனி விலாசத்தை மாற்ற கட்டணம் செலுத்த வேண்டும். இன்னும் 8 நாளே இருப்பதால் மக்கள் பலரும் உடனே ஆன்லைன் பக்கத்திற்கு சென்று ஆதார் விவரங்களை மாற்ற வேண்டும்.
வேறு குழப்பம்: அதே சமயம் ஆன்லைன் மூலம் ஆதார் விவரங்களை இலவசமாக மாற்றும் மக்கள் பலர் ஒரே மாதிரியான பிரச்சனை ஒன்றை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த சேவை இப்போது இலவசம் என்பதால் பலரும் ஆன்லைன் மூலம் விவரங்களை மாற்றுகின்றனர். ஆனால் விவரங்களை மாற்றியதும்.. பலரும் அவர்களின் பிறந்த வருடம் தானாக மாறுவதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது. அதாவது பிறந்த தேதி அல்லது வருடம் தானாக மாறும் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. இது எதுவும் bug ஆ அல்லது வேறு ஏதாவது தவறா என்று தெரியவில்லை. ஆனால் சமீபத்தில் ஆன்லைன் மூலம் இலவசமாக விவரங்களை மாற்றிய பலர் இந்த சிக்கலை எதிர்கொண்டு உள்ளனர்.
அவர்கள் உதாரணமாக தங்களின் விலாசத்தை மாற்றுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதில் அப்டேட் ஆகி வரும் விவரத்தில் தானாக பிறந்த நாள் தவறாக வந்துவிடுகிறது. பிறந்த நாள் போன்ற விவரங்களை மாற்ற நேரில் செல்ல வேண்டும் என்பதால் அவர்கள் ஆதார் மையத்திற்கு மீண்டும் செல்ல வேண்டியதாக உள்ளது. அங்கே அவர்கள் 50 ரூபாய் பணம் கொடுத்து மீண்டும் அப்டேட் செய்ய வேண்டியதாக உள்ளது. எனவே இனி ஆன்லைனில் உங்கள் ஆதார் கார்டை அப்டேட் செய்தால், பிறந்த தேதி, வருடம் சரியாக இருக்கிறதா என்பதையும் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்.












Click it and Unblock the Notifications