ஊதிய உயர்வு + போனஸ் + அகவிலைப்படி.. அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி அறிவிப்பு.. ஸ்டாலின் வேகம்
சென்னை: தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு என்று கடந்த சில நாட்களில் மட்டும் ஏகப்பட்ட முக்கியமான அசத்தலான அறிவிப்புகளை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார். அரசு ஊழியர்களை கவரும் விதமாக.. அவர்களின் பல நாள் கோரிக்கைகளை ஏற்று பல முக்கியமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. இந்த அறிவிப்புகள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.

தமிழ்நாடு அரசு போனஸ் அறிவிப்பு
தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்குப் போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தீபாவளியை முன்னிட்டு இந்த போனஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம், அரசு போக்குவரத்து கழகம் தமிழ்நாடு நுகர்பொருள் வாரிய கழகம், தமிழ்நாடு வளத்துறை உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை ஊழியர்களுக்கு இந்த போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தீபாவளியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் போனஸ் வழங்கப்படும். அதன்படியே இந்த ஆண்டும் அரசு சார்பாக போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது. 2.95 லட்சம் ஊழியர்களுக்கு மொத்தமாக இந்த போனஸ் வழங்கப்படும். உபரித்தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்களுக்கு 8.66% வரை போனஸ் வழங்கப்படும். 20 சதவீதம் போனஸ் வழங்க ரூ.376 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். 20 சதவீதம் ஊதியம் மற்றும் கருணைத் தொகை போனஸாக வழங்கப்படும்; நிரந்தர பணியாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8400 மற்றும் அதிகபட்சம் ரூ.16,800 போனஸாக பெறுவார்கள் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
டாஸ்மாக் ஊதிய உயர்வு
டாஸ்மாக் விற்பனைப் பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இது குறித்து அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதில் 1000 ரூபாய் எல்லா வகையான ஊழியர்களுக்கும், கூடுதல் 1000 ரூபாய் ஊழியர்களின் வேலை திறன் அடிப்படையிலும் வழங்கப்படும். இதில் பாட்டில்களுக்கு ரூ.10 கூடுதல் விற்ற விவகாரத்தில் சிக்கிய ஊழியர்களுக்கு அடிப்படை சம்பள உயர்வான ரூ.1000 மட்டுமே வழங்கப்படும். திறன் அடிப்படையிலான ரூ.1000 வாங்கப்பட்டது.
இந்த ஊதிய உயர்வு தொடர்பான அறிவிப்பு, டாஸ்மாக் நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது. உயரதிகாரிகள் இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் பணியாளர்கள் பயனடைவார்கள். ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பை அடுத்து, பணியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த நடவடிக்கை டாஸ்மாக் நிர்வாகத்தின் நேர்மறையான அணுகுமுறையை பிரதிபலிக்கிறது. மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இது ஒரு முக்கியமான அறிவிப்பாகும்.
போக்குவரத்து கழக 6% ஊதிய உயர்வு
தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கும் 6% ஊதிய உயர்வு வழங்கப்படும் என முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட்டு வந்தது. கடைசியாக 14வது ஊதிய ஒப்பந்தம் கடந்த 2023ம் ஆண்டு முடிவடைந்தது.
அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு குறித்து முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார். ஆயுள் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீட்டை கட்டணமின்றி வழங்க, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக, அரசு ஊழியர்களுக்கு இலவசமாக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அகவிலைப்படி உயர்வு
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்த்தப்பட்டது. கடந்த முறை அரசு சார்பாக 2% உயர்வு செய்யப்பட்டதால் நிலை 1 அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் ரூ. 360 ஆக இருக்கும். அதாவது ரூ.360 சம்பளத்தில் உயரும் என்று அறிவிக்கப்பட்டது. 7வது ஊதியக் குழுவின் கீழ், அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் (நிலை 1) ரூ.18,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இவர்களுக்கு 360 ரூபாய் அகவிலைப்படி உயர்வு இருக்கும். இந்த முறை இவர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று தகவல்கள் வருகின்றன.
மகப்பேறு விடுமுறை அறிவிப்பு
அரசு ஊழியர்களுக்கான 1 ஆண்டுகால மகப்பேறு விடுப்பு அவர்களின் தகுதி காண் பருவத்திலும் (Probation Period) கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். முன்பு இருந்த விதிகளின்படி மகப்பேறு விடுப்பு காலமானது தகுதிகாண் பருவத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படாததால் பெண் ஊழியர்களின் பதவி உயர்வு பாதிக்கப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications