பெண்களுக்குத் தமிழகத்தில் பாதுகாப்பில்லை.. உங்களுக்கு உறுத்தவில்லையா முதல்வரே.. அண்ணாமலை கேள்வி
சென்னை: தமிழ்நாட்டில் பெரியவர்கள் முதல் சிறு குழந்தைகள் வரை பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சமூக விரோதிகளுக்கு சட்டத்தின் மீதும் காவல்துறையின் மீதும் பயமில்லாமல் போய்விட்டதாக கூறியுள்ள அண்ணாமலை, பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை பட்டியலிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன. அண்ணாமலை பல்கலைக்கழக விவகாரம், ஈசிஆர் விவகாரம் தொடங்கி கிருஷ்ணகிரியில் 8ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை, திருச்சியில் 4ஆம் வகுப்பு மாணவி பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

அதேபோல் நேற்று நள்ளிரவில் வேலூரில் ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு, தள்ளிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தில் ஈடுபட்ட நபரை வெளியிலேயே விடக் கூடாது என்று பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் விளக்கம் கேட்டிருக்கிறது.
இந்த நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் வெளியாகும் செய்திகளைப் படிக்கும்போது மனம் பதைபதைக்கிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறாத நாளே இல்லை என்னும் அளவுக்கு, நமது சமூகம் பாதுகாப்பற்றதாக மாறி வருகிறது.
பாலியல் துன்புறுத்தல்
கிருஷ்ணகிரி அரசுப் பள்ளி மாணவி, மூன்று ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செய்தி தந்த அதிர்ச்சி நீங்கும் முன்னரே, இன்று ஒருநாள் காலையில் மட்டும், மணப்பாறையில் நான்காம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி நிர்வாகிகள், வேலூரில் ரயிலில் பயணித்த கர்ப்பிணி பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்து ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட அவலம் நடந்திருக்கிறது.
பெண்களுக்கு பாதுகாப்பில்லை
இதுமட்டுமல்லாமல் சேலத்தில் அரசுப் பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர், திருப்பத்தூரில் வீடு புகுந்து ஊராட்சி துணைத் தலைவரின் மனைவி வெட்டி படுகொலை என பெண்களுக்கு எதிரான குற்றச் செய்திகள் வரிசையாக வருகின்றன. எங்கு சென்று கொண்டிருக்கிறது தமிழகம்?
திமுக மீது விமர்சனம்
மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்பதற்கேற்ப கையாலாகாத ஆட்சியை நடத்திக் கொண்டு, குற்றவாளிகள் திமுகவினராக இருந்தால், அவர்களைக் காப்பாற்ற அரசு எந்திரத்தை எந்த எல்லைக்கும் சென்று பயன்படுத்தும் திமுகவின் வழக்கத்தால், இன்று சமூக விரோதிகளுக்கு சட்டத்தின் மீதும் காவல்துறையின் மீதும் பயமில்லாமல் போய்விட்டது.
உறுத்தவில்லையா முதல்வரே?
பெரியவர்கள் முதல் சிறு குழந்தைகள் வரை பெண்களுக்குத் தமிழகத்தில் பாதுகாப்பில்லை என்பது உங்களுக்கு உறுத்தவில்லையா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே? என்று கேள்வி எழுப்பி உள்ளார். ஏற்கனவே அதிமுக தரப்பில் இந்த விவகாரம் தொடர்பாக கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பாஜக தரப்பில் தமிழக அரசு மீது கடுமையான விமர்சனம் முன் வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications