திமுகவில் அதிரடி மாற்றம்! மீண்டும் செஞ்சி மஸ்தான் என்ட்ரி! புதிய பதவி கிடைத்தது எப்படி?
சென்னை: விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத் தலைவராக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த அவரது பதவி பறிக்கப்பட்ட நிலையில் புதிய பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்து வந்தவர் அமைச்சர் செஞ்சி மஸ்தான். இவர் கடந்த வாரம் அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

அவருக்கு பதிலாக புதிய மாவட்ட பொறுப்பாளராக சேகர் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
அமைச்சர் செஞ்சி மஸ்தானின் பதவி பறிக்கப்பட்டது திமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத் தலைவராக இருந்த சேகர் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவைத் தலைவர் பதவிக்கு உள்கட்சி தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த தேர்தலில் செஞ்சி மஸ்தான் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். செஞ்சி மஸ்தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்திலிருந்தே கட்சியிலும் ஆட்சியிலும் முக்கிய பதவிகளில் இருந்து வருகிறார்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இருந்து வருகிறார். அமைச்சராக பொறுப்பேற்றது முதல் அவர் மீது பல புகார்கள் வருவதாக சொல்லப்படுகிறது.
கடந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தலின் போது மாற்றுக் கட்சியில் இருந்து வந்தோருக்கு சீட் கொடுக்கப்பட்டது. பெரும்பாலான பொறுப்புகள் தன் குடும்ப உறுப்பினர்களுக்கே மஸ்தான் வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
சாராய வியாபாரி மரூர் ராஜாவுடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு திண்டிவனம் நகராட்சியின் நிர்வாக செயல்பாடுகளைக் கண்டித்து நகர்மன்றக் கூட்டத்திலிருந்து 13 திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். அது மட்டுமல்லாமல் அமைச்சர் மஸ்தான் குறித்து திமுக தலைமைக்கு அந்த 13 கவுன்சிலர்களும் புகார் அளித்துவிட்டதாக தெரிகிறது.
நகர்மன்றக் கூட்டத்தில் பேசிய திமுக அதிருப்தி கவுன்சிலர்கள் 13 பேரும் தங்கள் வார்டுகளுக்கு அடிப்படை வசதிகளை செய்யவில்லை. அதனால் பொதுமக்கள் மத்தியில் எங்களுக்கு அவமானமாக இருக்கிறது. முதல்வர் ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நகர்மன்றம் செயல்படுகிறது.
அமைச்சர் மஸ்தானுக்கு உதவியாளராக இருந்து வரும் மருமகன் ரிஸ்வான் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட துணை அமைப்பாளராகவும் இருந்து வந்தார். அது போல் விழுப்புரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த மஸ்தானின் மகன் கே.எஸ்.எம். மொக்தியார் அலி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். மேலும் மஸ்தானுக்கும் பொன்முடி தரப்புக்கும் ஏதோ பிரச்சினை என கூறப்படுகிறது. இது குறித்து பொன்முடி தரப்பினர் அல்லாமல் வேறு யாரோ தலைமைக்கு புகார் கூறியதால்தான் மஸ்தான் பதவிநீக்கம் செய்யப்பட்டார் என விழுப்புரம் மாவட்ட திமுகவினர் தெரிவித்தனர். தற்போது மஸ்தானுக்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications