திருவள்ளூர் ரயிலில் அதிசயம்! 15 நிமிடத்தில் ரூ.9 லட்சம் தங்கம் நகை மீட்பு! ஆர்பிஎஃப் போலீஸ் மீனா செம
சென்னை: இன்றைய அவசர உலகில் மனிதர்களுக்கு இடையே மனிதாபிமானம் என்பது அரிதாகி வருகிறது. அதிலும், அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாத நேர்மை என்பது இந்த காலத்தில் ஒரு பேரதிசயமாகவே பார்க்கப்படுகிறது.. மொத்தமும் பணம்தான் வாழ்க்கை என்று ஓடிக்கொண்டிருக்கும் பலருக்கு மத்தியில், வறுமையிலும் நேர்மையாக வாழக்கூடியவர்கள் நம்மிடையே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு அதிசய சம்பவம் திருவள்ளூரில் நடந்துள்ளது...!!
சமீப நாட்களாகவே தவறவிட்ட நகைகளை நேர்மையானவர்கள் ஒப்படைக்கும் செயல்கள் அதிகரித்து வருகின்றன, அதற்கான வெகுமதிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

தங்கம் நகைகள்
இத்தகைய செய்திகள் சமூகத்தில் நம்பிக்கையை விதைக்கும் வகையில் வந்தவண்ணம் உள்ளன.,, கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருவாரூர் மாவட்டம் ஆலத்தம்பாடியில் உள்ள உறவினர் வீட்டில் மகளின் திருமணத்திற்காகச் சேர்த்து வைத்திருந்த நகைகளைப் பத்திரப்படுத்த, செங்கல்பட்டைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் - முத்துலட்சுமி தம்பதியினர் ரயிலில் வந்து ஆட்டோவில் சென்றுள்ளனர்.
அப்போது, 20 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள் அடங்கிய மஞ்சள் நிறக் கட்டைப் பையை ஆட்டோவில் மறந்து வைத்துவிட்டு கீழே இறங்கி விட்டார்கள்..
கட்டைப் பை - ஆட்டோ
பையை தொலைத்ததை உணர்ந்து தம்பதியினர் கண்ணீர் விட்டு கதறிய நிலையில், விருப்பாச்சி தெருவில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த நகராட்சி ஊழியர் துரை, சாலையில் கிடந்த அந்தப் பையைக் கண்டெடுத்து உடனடியாக திருவாரூர் நகர போலீசில் ஒப்படைத்தார்.
காவல் துறையினர் சிசிடிவி காட்சிகள் மூலம் ஆட்டோ டிரைவரை கண்டறிந்து, தம்பதியினரை வரவழைத்து நகைகளை ஒப்படைத்தனர். வறுமையிலும் நேர்மையுடன் செயல்பட்ட தூய்மைப் பணியாளர் துரையை காவல் துறையினர் பாராட்டியதுடன், உள்ளூர் நகைக்கடை உரிமையாளர் ஒருவர் அவருக்கு பொன்னாடை போர்த்தி 15 ஆயிரம் ரூபாய் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களைப் பரிசாக வழங்கி கௌரவித்தார். இந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது..
ரயில் பெட்டிகள் - தவறவிட்ட நகைகள்
இதோ இப்போதும் திருவள்ளூர் மாவட்டத்தில் அதே போன்ற நேர்மை சம்பவம் நடந்துள்ளது.. கேசவபுரம் பகுதியைச் சேர்ந்த அருண் என்ற தனியார் நிறுவன ஊழியர், கடந்த 13-ம் தேதி மீஞ்சூரில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மின்சார ரயிலில் பயணம் செய்துள்ளார்.. அப்போது நகைகளை வைத்திருந்த பையை, ரயில் பெட்டியிலேயே தவறவிட்டுள்ளார்.
விம்கோ நகர் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கிய பிறகு பை தொலைந்தது குறித்து உணர்ந்த அருண், உடனடியாக ரயில்வே நிலைய அதிகாரியிடம் புகார் அளித்தார்.
சபாஷ் மீனா
தகவலின் பேரில் விரைந்து செயல்பட்ட ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் ராம் கில்லாடி மீனா, திருவொற்றியூர் ரயில்வே ஸ்டேஷனில் ரயிலை சோதனையிட்டார்.. சல்லடையாய் தேடிய நிலையில், இறுதியில் அருண் தவறவிட்ட பையை மீட்டார். அதில் சுமார் 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான 8 பவுன் தங்க நகைகள் பத்திரமாக இருந்தன. தகவலறிந்து வந்த அருணிடம் நகைகள் ஒப்படைக்கப்பட்டன.
வெறும் 15 நிமிடங்களில் திறம்படச செயல்பட்டு நகைகளை மீட்ட ஆர்பிஎஃப் காவலர் மீனாவை, உயர் அதிகாரிகள் பாராட்டினர். தொடர்ச்சியாக நடைபெறும் இத்தகைய நேர்மையான செயல்கள், சமூகத்தில் நல்ல மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகின்றன. தவறவிட்ட பொருட்களை உடனுக்குடன் மீட்டுக் கொடுக்கும் இந்த நேர்மையான உள்ளங்களுக்கு சமுதாயத்தின் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன..












Click it and Unblock the Notifications