"எகிறுதே தங்கம்.." ஒரு கிராம் ரூ.5700 தாண்டியாச்சு.. எப்போது குறையும்? ஆனந்த் சீனிவாசன் நறுக் பதில்
சென்னை: தங்கம் விலை சமீப காலமாக மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், அதற்கான காரணத்தைப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
தங்கம் விலை கடந்த சில காலமாகவே தொடர்ந்து குறைந்து வந்தது. அதாவது எப்போது அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்க ஆரம்பித்ததோ.. அப்போது முதலே தங்கம் விலை குறையத் தொடங்கியது.

22 கிராட் தங்கம் ஒரு கிராம் ரூ. 5400க்கு கீழ் கூடப் போனது. பல்வேறு பொருளாதார வல்லுநர்களும் கூட தங்கம் விலை மேலும் குறையும் என்றே கூறினர். இருப்பினும், அதற்கு நேர்மாறாக தங்கம் விலை திடீரென அதிகரிக்கத் தொடங்கியது.
தங்கம்: நேற்றைய தினம் தலைநகர் சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 5700 ரூபாயைத் தாண்டியுள்ளது. இன்று ஒரு கிராம் தங்கம் விலை மேலும் 50 ரூபாய் உயர்ந்து, இப்போது 5755 ரூபாயாக இருக்கிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்குத் தங்கம் தான் முதல் சேமிப்பு கருவியாக இருக்கும் நிலையில், திடீரென அது அதிகரிப்பது பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. சில காலமாகக் குறைந்த தங்கம், மீண்டும் அதிகரிக்கிறது. இந்த நேரத்தில் தங்கத்தை வாங்கலாமா.. இல்லை இன்னும் கொஞ்சம் காத்திருந்தால் தங்கம் விலை குறையுமா என்பதே இப்போது பொதுமக்கள் கேள்வியாக இருக்கிறது.
கடந்த சில மாதங்களாகக் குறைந்து வந்த தங்கம் இப்போது ஏன் திடீரென அதிகரிக்கிறது என்பது குறித்து ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது வீடியோவில் கூறுகையில், "தங்கம் விலை இப்போது அதிகரிக்க ஒரே காரணம் இஸ்ரேல் ஹமாஸ் போர் மட்டுமே காரணம். போர் சீக்கிரம் முடிவுக்கு வந்தால் தங்கம் விலை குறைந்துவிடும். போர் முடியாமல் தொடர்ந்து கொண்டே போனால் தங்கம் விலை இதே ரேஞ்சில் இருக்கும்.
விலைவாசி: இதை விட மற்றொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. அமெரிக்காவுக்குப் போதியளவில் கச்சா எண்ணெய் இருப்பு இருக்கிறது. அவர்களுக்கு மற்ற நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் தேவையில்லை. அமெரிக்காவிலேயே போதியளவில் கச்சா எண்ணெய் இருக்கிறது.
அதேநேரம் மற்ற நாடுகளுக்குக் குறிப்பாக இந்தியா பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்தே கச்சா எண்ணெய் வாங்குகிறது. எனவே, போர் விரிவடைந்தால் கச்சா எண்ணெய் விலை உயரும் வாய்ப்பு இருக்கிறது. இது விலைவாசி உயர்வுக்குக் காரணமாக இருக்கும்" என்றார்.

அமெரிக்க மத்திய வங்கி: மேலும், அமெரிக்க மத்திய வங்கியின் கூட்டம் அடுத்த வாரம் நடைபெறுகிறது. இதில் அவர்கள் வட்டி விகிதத்தை உயர்த்தவில்லை என்றாலும் கூட டிச. மாதம் நடைபெறும் கூட்டத்தில் வட்டியை உயர்த்தியே ஆக வேண்டும். ஏனென்றால் அமெரிக்காவில் விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அப்படி வட்டி விகிதத்தை உயர்த்தும் போது அது தங்கம் விலை சற்று குறையக் காரணமாக இருக்கும்.
ஆனால், இஸ்ரேல் பாலஸ்தீன போரும் இப்போது தங்கம் விலையில் எதிரொலிக்கிறது. இஸ்ரேல் பாலஸ்தீன மோதல் எவ்வளவு காலம் நீட்டிக்கிறது.. அவ்வளவு தூரம் தங்கம் விலை அதிகரிக்கும். இஸ்ரேல் மோதல் முடிவுக்கு வந்தால் மட்டுமே தங்கம் விலை குறையும். எனவே,இஸ்ரேல் ஹமாஸ் போரும் தங்கம் விலையில் எதிரொலிக்கிறது என்பதே அவர் சொல்லும் கருத்தாகும்.
இது பொருளாதார ஆலோசனை இல்லை. சாதாரண செய்தி மட்டுமே.. எந்தவொரு திட்டத்திலும் முதலீடு செய்யும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகருடன் ஆலோசனை பெற வேண்டும்.












Click it and Unblock the Notifications