போட்றா வெடிய.. குழந்தைகளுக்கான அரசு பஸ் பயணம்.. கண்டக்டர்களுக்கு தமிழக அரசு மாஸ் உத்தரவு.. இனி ஜாலி
சென்னை: அரசு பஸ்களில், குழந்தைகளுக்கான பயணம் குறித்து நடத்துனர்களுக்கு முக்கிய அறிவுரைகளை போக்குவரத்து துறை வழங்கியிருக்கிறது.
பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அவ்வப்போது, பேருந்து ஓட்டுநர்களுக்கும், நடத்துநர்களுக்கும், போக்குவரத்து துறை அறிவுறுத்தியே வருகிறது.

அந்தவகையில், கடந்த பிப்ரவரி மாதமும், சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அறிவுரை ஒன்றினை வழங்கியிருந்தார்..
பயணிகள்: அதில், மாநகர பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க வேண்டும், அரசு பேருந்துகளில் பயணிகள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், மாணவர்கள் படிகளின் அருகே உள்ள ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கியபடி பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்,
முன் மற்றும் பின் பக்கங்களில் உள்ள படிக்கட்டுகளின் அருகே உள்ள ஜன்னல்களுக்கு கண்ணாடி நிரந்தரமாக பொருத்த வேண்டும், ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தக்க அறிவுரை வழங்க வேண்டும், அறிவுரைக்கு பின்னும் ஆபத்தான பயணம் மேற்கொண்டால், அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு அறிவுரைகளை கூறியிருந்தார்.
குழந்தைகள்: இந்நிலையில், குழந்தைகளுக்கான பயணம் குறித்து போக்குவரத்து துறை முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.. அதில் உள்ளதாவது: "அரசு போக்குவரத்து கழக புறநகர் பஸ்களில், ஐந்து வயது நிறைவடையாத குழந்தைகளை கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். ஐந்து வயதுக்கு மேற்பட்ட 12 வயது நிறைவடையாத குழந்தைகளுக்கு, அரை கட்டணம் வசூலிக்க வேண்டும்.
குழந்தைகளின் வயது குறித்து சந்தேகம் ஏற்பட்டால், பிறந்த நாள் சான்று அல்லது ஆதார் அடையாள அட்டை வாயிலாக உறுதி செய்து கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக 2020 ஜன., 1ம் தேதி பிறந்த குழந்தைகளுக்கு நடப்பாண்டு டிச., 31ம் தேதி வரை பயண கட்டணம் வசூலிக்க தேவையில்லை.
புகார்கள்: இருந்த போதிலும், நடத்துனர்கள் கட்டணம் வசூலிப்பதாகவும், பயணியரிடம் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதாகவும் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. எனவே, நடத்துனர்கள் எவ்வித புகார்களுக்கும் இடமளிக்கா வண்ணம் செயல்பட வேண்டும்... மேலும், இதுகுறித்து புகார்கள் பெறப்பட்டால், சம்பந்தப்பட்ட நடத்துனர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications