செம்மஞ்சேரி உட்பட 1 லட்சம் வீடுகளுக்கு குட் நியூஸ்.. ரூ.261 கோடியில் என்னென்ன வசதிகள்?
சென்னை: தமிழகத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது... குடிநீர், கழிவுநீர், மின்சாரம் என அடிப்படை வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு ரூ.261.85 கோடி ஒதுக்கியுள்ளது. குறிப்பாக சென்னையில் செம்மஞ்சேரியில் வசிக்கும் 6,764 குடும்பங்களின் குடிநீர்ப் பிரச்சனைக்குத் தீர்வு காண புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் வேறு என்னென்ன வசதிகள் கிடைக்கப்போகின்றன? அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளன.. இங்கு வசிக்கும் மக்களுக்கு குடிநீர், கழிவுநீர் அகற்றம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

ரூ.261.85 கோடி ஒதுக்கீடு
ஆனால், சில குடியிருப்புகளில் இந்த வசதிகள் சரியாக இல்லை.. குடிநீர்க் குழாய்கள் பழுதடைந்துள்ளன... சில இடங்களில் நீர்த்தேக்க தொட்டிகளும் பழுதாகியுள்ளன. கழிவுநீரை வெளியேற்றுவதிலும் சிக்கல்கள் உள்ளன.. அதனால்தான் இந்தக் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி சட்டமன்றத்தில் இதற்காக ரூ.355 கோடி செலவில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இப்போது ரூ.261.85 கோடி நிதிக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அரசாணையும் நவம்பர் 6-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் 28,375 வீடுகள்
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குடிநீர் மற்றும் கழிவுநீர் வசதிகளை மேம்படுத்த ரூ.47.81 கோடி செலவிடப்பட உள்ளது... இதில் 22 குடியிருப்புத் திட்டங்களில் உள்ள 28,375 வீடுகளுக்குக் குடிநீர் விநியோக வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன.
அதேபோல், 42 குடியிருப்புத் திட்டங்களில் குறுகிய காலத்தில் கழிவுநீர் வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. மேலும், 14 குடியிருப்புத் திட்டங்களில் நீண்டகால அடிப்படையில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
செம்மஞ்சேரியில் 6,764 குடும்பங்கள்
இந்தத் திட்டத்தில் செம்மஞ்சேரி குடியிருப்புப் பகுதிக்கும் ரூ.70 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 870 குடியிருப்புக் கட்டடத் தொகுதிகள் உள்ளன. இதில் 6,764 வீடுகள் இருக்கின்றன. இப்போது இந்த வீடுகளில் வசிப்பவர்களுக்கு பொதுக் குடிநீர்க் குழாய்கள் மூலமாகத்தான் தண்ணீர் வழங்கப்படுகிறது. அதாவது, மக்கள் பொதுக் குழாய்களுக்குச் சென்று தண்ணீரைப் பிடித்து தங்கள் வீடுகளுக்குக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது.
இந்த நிலையை மாற்றுவதற்காக புதிய குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. ஆம், தற்போது பயன்பாட்டிலுள்ள பழைய குடிநீர்க் குழாய்கள் அகற்றப்பட்டு புதிய குழாய்கள் அமைக்கப்பட உள்ளன. அதுமட்டுமல்ல, 35 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் அமைக்கப்பட உள்ளன.
இதுதவிர, ஒவ்வொரு குடியிருப்புக் கட்டிடத்தின் மொட்டை மாடியிலும் 300 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட உள்ளது... இந்தப் பணிகள் முடிந்தால் செம்மஞ்சேரியில் உள்ள 6,764 வீடுகளுக்கும் சீரான குடிநீர் கிடைக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
74,306 வீடுகளுக்கு புதிய வசதிகள்
சென்னை மற்றும் மற்ற மாவட்டங்களில் உள்ள 98 குடியிருப்புத் திட்டங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.144.04 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது... இந்த 98 குடியிருப்பு திட்டங்களில் மொத்தம் 74,306 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் குடிநீர் வசதியை மேம்படுத்த ஆழ்துளைக் கிணறுகள், தண்ணீர் சேமிக்கும் தொட்டிகள், தண்ணீரை மேலே ஏற்றும் அறைகள் போன்றவை அமைக்கப்பட உள்ளன.
முக்கியமாக, கழிவுநீரைச் சுத்தம் செய்யும் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன. அத்துடன் ஏற்கனவே உள்ள கழிவுநீர் வசதிகளும் சீரமைக்கப்பட உள்ளன... கழிவுநீரை வெளியேற்றும் குழாய்கள், செப்டிக் டேங்குகள், உறிஞ்சுக் குழிகள் போன்றவற்றிலும் தேவையான மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
கரண்ட் வசதிகள்
இதை தவிர, மின்சார வசதிகளும் மேம்படுத்தப்பட உள்ளன. மின்சார பலகைகள், ஜெனரேட்டர்கள், எலக்ட்ரிக் ரூம்கள் போன்றவற்றில் தற்போதுள்ள ரிப்பேர்களை சரிசெய்துவிட்டு, தேவையான புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. குடியிருப்பு பகுதிகளில் குப்பைகளை முறையாக சேகரித்து அகற்றுவதற்கான வசதிகளும் செய்யப்பட உள்ளன.
இதன் மூலம் தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர், கழிவுநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications
