பிஎஃப் ஓய்வூதியதாரர்களுக்கு நற்செய்தி! ரூ.7500 உயர்வு + ஏடிஎம் வசதி! தீவிர பரிசீலனையில் மத்திய அரசு
சென்னை: மே தினத்தை முன்னிட்டு பிஎஃப் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7,500 ரூபாயாக உயர்த்தக் கோரும் பரிந்துரையை மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. தொழிற்சங்கங்களின் நீண்ட கால கோரிக்கையான இதில், நிதி சவால்கள் மற்றும் சம்பள உச்சவரம்பு மாற்றம் குறித்த ஆலோசனைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் இது இன்னும் இறுதி முடிவாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பிராவிடெண்ட் பண்ட் (பி.எப்) பென்ஷன் குறைந்தபட்ச தொகை தற்போது 1,000 ரூபாயாக உள்ளது. இதற்காக ஒருவரின் ஊதியத்தில் 2014-ம் ஆண்டு வரை மாதம் அதிகபட்சம் 541 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டது. ஆனால், இபிஎஸ்-95 (EPS-95) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த 1,000 ரூபாய் ஓய்வூதியம் தற்போதைய விலைவாசிக்கு போதுமானதாக இல்லை என ஐஎன்டியுசி, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றன.

அரசின் பரிசீலனை
இந்நிலையில், தொழிலாளர் தினமான இன்று அதாவது மே 1, 2026, இந்த ஓய்வூதியத் தொகையை 7,500 ரூபாயாக உயர்த்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து மக்களிடையே சில குழப்பங்கள் நிலவுகின்றன.
தற்போது வெளியாகியுள்ளது "அமல்படுத்தப்பட்ட உத்தரவு" கிடையாது.. மாறாக, பாராளுமன்ற நிலைக்குழு அளித்த பரிந்துரையை அரசு "பரிசீலிக்கும்" கட்டத்தில் உள்ளது. அமைச்சரவை ஒப்புதல் அளித்து அரசாணை வெளியான பிறகே இது நடைமுறைக்கு வரும்.
EPFO அமைப்பு எதிர்கொள்ளும் சவால்கள்
7,500 ரூபாய் உயர்வுடன் சேர்த்து, ஓய்வூதியத்திற்கு DA எனப்படும் அகவிலைப்படி வழங்க வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்துகின்றன. தற்போது பிஎஃப் ஓய்வூதியத்திற்கு அகவிலைப்படி நடைமுறை இல்லை என்பதால், இது குறித்து தெளிவான அறிவிப்பை ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஓய்வூதியத்தை உயர்த்துவதில் இபிஎஃப்ஓ அமைப்புக்கு நிதி ரீதியான சவால்கள் உள்ளன. ஓய்வூதிய நிதியத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதால், மத்திய அரசு கூடுதல் மானியங்களை (Subsidy) வழங்கினால் மட்டுமே இந்த 7,500 ரூபாய் இலக்கை எட்ட முடியும். இது குறித்து நிதி அமைச்சகத்துடன் ஆலோசனைகள் நடந்து வருகின்றன.
நிர்வாக மாற்றங்கள் & டெக்னாலஜி
சலுகைகள் மட்டுமன்றி, பிஎஃப் சந்தாதாரர்கள் ஏடிஎம் (ATM) மூலமாகவே ஓய்வூதியப் பணத்தை எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. இது இன்னும் நடைமுறைக்கு வராத போதிலும், வரும் காலங்களில் இதற்கான காலக்கெடு அறிவிக்கப்படலாம். 2025-2026 நிதியாண்டில் 8.3 கோடி விண்ணப்பங்கள் விரைவாகத் தீர்க்கப்பட்டது ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
சம்பள உச்சவரம்பை 15,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாக உயர்த்துவது மற்றும் ஓய்வூதியத்தை அதிகரிப்பது போன்ற திட்டங்கள் இறுதி வடிவம் பெறும்போது, அது சுமார் 6.5 கோடி ஊழியர்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். அரசின் அதிகாரப்பூர்வ இறுதி முடிவுக்காக ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கமும் காத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications