ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்! இனி முகத்தை காட்டி ரேஷன் வாங்கலாமா? தமிழக அரசு புதிய திட்டம்
சென்னை: ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட்நியூஸ் விரைவில் வரப்போகிறது.. பொது விநியோகத் திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் புதிய டெக்னிக்கல் மாற்றங்களை அறிமுகப்படுத்தப் போவதாக தமிழக அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார். அரிசி தரம் உறுதி செய்யப்படும் காலக்கெடு முதல், முக அங்கீகாரம் (Facial Recognition) வாயிலாகப் பொருட்கள் வழங்கும் தொலைநோக்கு திட்டம் வரை அமைச்சர் நிறைய விஷயங்களை தெரிவித்துள்ளார். அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்...!!
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் பொருட்களின் தரத்தை உயர்த்தவும், முறைகேடுகளைத் தடுக்கவும் உணவு வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன், பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

ரேஷன் பொருட்கள்
இதன் ஒரு பகுதியாக, கடந்த 3 நாட்களுக்கு முன்பு தேனி மாவட்டத்தில், ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசியின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.
அந்த ஆய்வின்போது, தேங்காய் விலை வீழ்ச்சியால் தவிக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், விவசாயிகளிடமிருந்து நேரடியாகத் தேங்காய்களைக் கொள்முதல் செய்து, ரேஷன் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து முதலமைச்சருடன் ஆலோசிக்கப்படும் என அமைச்சர் அறிவித்தது விவசாயிகளிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.
அமைச்சர் வெங்கடரமணன்
அதுமட்டுமல்லாமல், மாநில எல்லைகளில் நடைபெறும் கடத்தல்களைத் தடுக்க ஒருங்கிணைந்த கண்காணிப்பு வளையத்தை உருவாக்குவது குறித்தும், இடைத்தேர்தல் அரசியல் சூழல் குறித்தும் அன்றைய தினம் அவர் விரிவாகவே பேசியிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, சென்னையில் தற்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வெங்கடரமணன், பொது விநியோகத் திட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள அடுத்தகட்ட டிஜிட்டல் புரட்சியைப் பற்றிய முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் சொல்லும்போது, "மாநிலம் முழுவதுமுள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். நெல்லை அரிசியாக மாற்றும் அரவை ஆலை உரிமையாளர்களிடம் தரமான அரிசியை வழங்க வேண்டும் என உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட்நியூஸ்
எனவே இன்னும் ஒரு மாதத்திற்குள் ரேஷன் கடைகளில் தரமான அரிசி உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் தடையின்றி பொதுமக்களுக்குக் கிடைப்பது உறுதி செய்யப்படும். அதேபோல், ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு, விண்ணப்பங்கள் நிலுவையில் இல்லாத வகையில், விரைவாக புதிய கார்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல வரும் நாட்களில் ரேஷன் பொருட்களை பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை நீக வேண்டியுள்ளது.. இதற்காக "பேஷியல் ரெககனைசேஷன்" எனப்படும் முக அங்கீகாரம் (Facial Recognition) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். பயோமெட்ரிக் முறையில் ஏற்படும் தடங்கல்களைத் தவிர்க்கவும், முறைகேடுகளை முற்றிலுமாக ஒழிக்கவும் இந்த தொழில்நுட்பம் பெரிதும் உதவும்.
பேஷியல் ரெககனைசேஷன்
இது குறித்து முதலமைச்சர் விஜயிடம் விரிவாகக் கலந்து ஆலோசித்து, அதற்கான தொழில்நுட்பத் தரவுகளை ஆய்வு செய்த பிறகு விரைவில் இத்திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும்" என்று அவர் உறுதியளித்தார்.
அமைச்சர் வெங்கடரமணனின் இந்த அடுத்தடுத்த அறிவிப்புகள், ரேஷன் கடைகளின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, பொதுமக்களுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகளை வெளிப்படையான மற்றும் நவீன முறையில் கொண்டு சேர்க்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, தரமான பொருட்கள் மற்றும் டெக்னாலஜி பாதுகாப்புடன் கூடிய ரேஷன் விநியோக திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது, குடும்ப அட்டைதாரர்களிடையே ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது..!!
அதென்ன பேஷியல் ரெககனைசேஷன்?
ஆனால், அமைச்சர் தெரிவித்துள்ள பேசிஷயல் ரெககனைசேஷன் என்றால் என்ன? எப்படி செயல்படும் தெரியுமா? இந்த "பேஷியல் ரெககனைசேஷன்' (Facial Recognition) என்பது "முக அங்கீகாரம்" தொழில்நுட்பமாகும், இது ரேஷன் கடைகளில் இப்போதுள்ள பயோமெட்ரிக் முறைக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பொதுவாக வயது முதிர்வு அல்லது கடின உழைப்பு காரணமாக நிறைய பேருக்கு கைரேகை சரியாக பதிவாகாமல் போகலாம்.. இதனால் ரேஷன் பொருட்கள் வாங்குவதில் தாமதமும் சிரமமும் ஏற்படுகிறது.. அதனால்தான், இந்த புதிய திட்டத்தின்படி ரேஷன் கடைகளில் உள்ள கேமரா மூலம் பயனாளியின் முகத்தை ஸ்கேன் செய்தே அவரது விவரங்கள் துல்லியமாக உறுதி செய்யப்பட்டு பொருட்கள் வழங்கப்படும்.
ஸ்மார்ட்போன்களில் முகத்தைக் காட்டி லாக் திறப்பதை போலவே, இந்த எளிய தொழில்நுட்பம், போலி கார்டுதாரர்கள் ரேஷன் பொருட்களை பெறுவதை தடுத்து முறைகேடுகளை ஒழிப்பதுடன், கைரேகை தடையின்றி பொதுமக்கள் மிக விரைவாகவும் பாதுகாப்பாகவும் பொருட்களைப் பெற்றுச் செல்ல வழிவகுக்கும்.. எனவே செயல்பாட்டுக்கு வந்தால், நிச்சயம் பொதுமக்களுக்கு பெரும் உதவியாகவே இருக்கும்..!!














Click it and Unblock the Notifications