பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக தமிழக அரசின் புதிய முடிவுக்கு அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திடவும் மாநில அரசின் நிதி நிலைமையையும் பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு புதிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரைப்பதற்காக அதிகாரிகள் குழு அமைத்ததற்குத் தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட குழு அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில் கூறுகையில், "கடந்த 1.4.2003 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே வேளையில் மத்திய அரசுப் பணியாளர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் 1.1.2004 முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் மாநில அரசுப் பணியாளர்களுக்கு தொடர்ந்து பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே தொடர அனுமதிக்கப்பட்டது. எனினும் மாநில அரசுப் பணியாளர்கள் 1.4.2003-க்கு முன்பிருந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டி தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர்.

tn govt notification old pension scheme government employee

இந்த நிலையில், கடந்த மாதம் 24-ந்தேதி மத்தியப் பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எனவே பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட ஒரு குழு அமைத்திட அரசு முடிவு செய்துள்ளது.

மாநில அரசின் நிதி நிலையினையும், பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தத் தக்க உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையினை அரசிற்கு அளித்திட அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி அந்த குழுவில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் முன்னாள் இயக்குனர் கே.ஆர்.சண்முகம், நிதித்துறை துணை செயலாளர் பிரத்திக் தாயள் ஆகியோர் அங்கம் வகிக்கிறார்கள்.
இக்குழு தனது விரிவான அறிக்கை மற்றும் பரிந்துரையை 9 மாதங்களுக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பை பார்க்கும் போது பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்களை ஆய்வு செய்து சட்டசபை தேர்தல் நெருங்கும் சமயத்தில் முக்கிய அறிவிப்பு வெளியிட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் குழு அமைத்ததற்கு அரசு ஊழியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தினர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறுகையில், "பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திடவும் மாநில அரசின் நிதி நிலைமையையும் பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு புதிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரைப்பதற்காக அதிகாரிகள் குழு அமைத்ததற்குத் தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கடும் கண்டனத்தினை தெரிவித்துக் கொள்கிறது.

கடந்த 11.01.2025 அன்று நிதியமைச்சர் சட்டமன்றத்தில் தேர்தல் வாக்குறுதிக்கு முரணாக அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றப்படாது என்கிற தொனியில் 2025ஆம் ஆண்டு பொங்கல் பரிசாக ஒரு அறிவிக்கை வெளியிட்டார்.


முதலமைச்சரின் கனிவான கவனத்திற்கு எங்களின் கோரிக்கை பின்வருமாறு:

தற்போது அமைத்துள்ள அதிகாரிகள் குழு என்பது 2021 சட்டமன்றத் தேர்தலின்போது அளித்த பழைய ஓய்வூதியத் திட்டம் அமல் என்ற வாக்குறுதிக்கு முற்றிலும் முரணாக அமைந்துள்ளது.ஆளுகின்ற அரசின் 2021-2026ன் நான்கு ஆண்டுகள் நிறைவுறும் தறுவாயில், ஐந்தாவதும் இறுதியுமான 2025-2026 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை தாக்கலுக்கு முன்னர் அதிகாரிகள் குழு அமைத்தது என்பது என்பது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல.

குழு என்றாலே ஒரு விஷயத்தினை நடைமுறைப்படுத்தாமல் காலம் கடத்துவதுதான் என்பது அனைவரும் அறிந்ததுதான். அதுவும் அதிகாரிகள் குழுவிற்கு ஒன்பது மாத கால அவகாசம் வழங்கியிருப்பது என்பது, எந்த வகையிலும் பழைய ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றப்படாது என்பதைத்தான் தெளிவாக உணர்த்துகிறது. இதில் மேலும், அரசு ஊழியர்களுக்கு பெரும் ஏமாற்றத்தினை தந்தது என்பது அரசின் செய்தி வெளியீட்டில், பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட எனத் தெரிவித்துவிட்டு, புதிய ஓய்வூதிய முறை குறித்துப் பரிந்துரைப்பது என்பது வெந்த புண்ணில் வேளை பாய்ச்சும் நடவடிக்கையாகும்.மீண்டும் மீண்டும் அதிகாரிகள் குழு அமைப்பது என்பது முதலமைச்சர் மீதான நம்பகத்தன்மையினை முற்றாக அழித்து விட்டது.

tn govt notification old pension scheme government employee

"உங்களது கோரிக்கைகளை மறக்கவில்லை, மறுக்கவில்லை, மறைக்கவில்லை" என்று கூறிய முதலமைச்சர், கோரிக்கைகளை மறக்கவில்லை என்பதை நாங்களும் ஒப்புக் கொள்கிறோம். ஆனால் கோரிக்கைகளை மறக்காமலும்-மறுக்காமலும் நிறைவேற்றாமலும் மறைத்து விட்டு, அந்தக் கோரிக்கைக்கே மறுவடிவம் கொடுத்து தற்போது அதிகாரிகள் குழு அமைத்துள்ளது என்பது, முதலமைச்சர் சொன்ன "மறைக்கல்ல" என்பதன் உள் அர்த்தத்தினை புரிய வைக்கிறது.

எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது 2017 முதல் 2021 வரை நாங்கள் நடத்திய போராட்டங்களில் எல்லாம் எங்களின் ஒருவராகக் கலந்து கொண்டு விட்டு, எங்களது உரிமைகளுக்காக தாங்களும் குரல் கொடுத்து, கழக ஆட்சி மலர்ந்ததும் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று தாங்கள் சொன்னதை யாரும் மறக்கவில்லை. போராட்ட களத்திலும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அளித்த வாக்குறுதிகளை நாங்களும் மறுக்கவில்லை. ஆனால் தற்போது மறைமுகமாக வந்துள்ள இந்த அறிவிப்பு "நீங்கள் சொன்ன மறைக்கவில்லை" என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்வதற்காகத் சாந்தா சீலா நாயர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, பின்னர் ஸ்ரீதர் தலைமையேற்றுத் தயாரித்த அறிக்கையானது, மிகப்பெரிய போராட்டம் நடத்தி, அந்த போராட்ட வழக்கானது நீதிமன்றம் வரை சென்ற பின்னரே, தமிழ்நாடு அரசிடம் அளிக்கப்பட்டது. திராவிட மாதிரி அரசு நான்கு ஆண்டுகளாக அந்த அறிக்கையினை வெளியிடாமல் உள்ளபோது, பழைய ஓய்வூதியம் நடைமுறைப்படுத்த மேலும் ஒரு குழு அமைப்பது எதற்கு?
மேலும் அமைக்கப்பட்டுள்ள அலுவலர்கள் குழுவில் அதனால் பயன்பெறக் கூடிய/பாதிப்பு அடையக் கூடிய அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் தரப்பிலிருந்து ஒருவரைக் கூட நியமிக்காமல் இருக்கும்போதே கண்டிப்பாக இந்தக் குழு எங்களுக்கு எதிரான பரிந்துரைகளை வழங்கும் என்பதில் எங்களுக்குச் சந்தேகமில்லை.

தமிழ்நாட்டிலே இந்நாள்வரை அமைக்கப்பட்ட எந்தவொரு குழுவின் அறிக்கையும் குறிப்பிட்ட காலவரையறைக்குள் வழங்கப்பட்டதில்லை. அந்த வகையில், இந்த குழுவும் கண்டிப்பாகக் கால நீட்டிப்பு கோரி காலத்தைக் கடத்தும் என்பதுதான் திண்ணம். ஒன்பது மாதங்களுக்குள் அறிக்கை அளித்தாலும் அதனை நிறைவேற்றுவதற்கான கால அவகாசம் தற்போதை திராவிட மாதிரி அரசிற்கு இல்லை. 2026 ஆம் ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியில் அமரப்போகும் அரசால் மட்டுமே இந்த பரிந்துரைகளைச் செயல்படுத்துவது குறித்து முடிவு எடுக்க முடியும். பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்துவதற்குக் குழு அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. கொள்கை முடிவினை எடுத்தாலே போதும்.

2024 நாடாமன்ற தேர்தலின்போது, தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக முதலமைச்சர் பாஜக அரசு குறித்து கூறியது... அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் அவர்களின் பொன்வரிகளான "பலரை சில காலமும், சிலரைப் பல காலமும் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது" இவ்வாறு தலைமை செயலக ஊழியர்கள் சங்கத்தினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+