இந்தியாவுக்கே நாம்தான் முன்னோடி; முதலிடம் வந்த முதல்வர் காப்பீடு!
சென்னை: முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பலன் பெற்றவர்களில் 50% பேர் அரசு மருத்துவமனைகள் மூலம் சிகிச்சை பெற்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அரசு மருத்துவமனைகள் கோரி இருந்த காப்பீட்டுத் தொகை மூலம் இந்தப் புள்ளிவிவரம் கிடைத்துள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நாட்டிற்கே முன்னோடியாக 2009-இல் தலைவர் கலைஞர் அவர்கள் ஏழை எளியோரின் உயிர் காக்கும் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கி வழிகாட்டினார். 2015-16-இல்தான் ஒன்றிய அரசு இப்படி ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

தற்போது #CMCHIS-இல் நமது அரசு மருத்துவமனைகள் இந்தியாவிலேயே எந்த மாநிலமும் நிகழ்த்தாத சாதனையை நிகழ்த்தியுள்ளன. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தால் பயனடைந்தவர்களில் 50 விழுக்காட்டினர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இது நமது கல்வி, மருத்துவத் துறைகளின் சாதனைகளுக்கான சான்று மட்டுமல்ல; வெற்றி மணிமகுடம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றது முதல் 'மருத்துவமும் கல்வியும் என் இரு கண்கள்' என்று அரசு நிகழ்ச்சிகள்தோறும் பேசி வருகிறார். அவர் சொல்வது வெறும் வார்த்தைக்காக அல்ல; அதை நடைமுறைப்படுத்துவதிலும் தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருக்கிறது.
வேறு எந்த மாநிலமும் சாதிக்க முடியாத அளவில் பல்வேறு திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்தி, இந்த இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் பலதுறைகளை முதல் இடத்திற்கு முன்னேற்றி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அதன் தொடர்ச்சியாக இப்போது 2023-24 ஆம் நிதி ஆண்டில் இதுவரை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் (சி.எம்.சி.சி.ஐ.எஸ்) கீழ், அரசு மருத்துவமனைகள் மூலம் 50% பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். அரசு பொது மருத்துவமனைகள் கோரி இருந்த மொத்த நிலுவைத் தொகைக்கான உரிமை கோரல்களில் மூலம் இந்தத் தகவல் கிடைத்துள்ளது.
தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்தத் திட்டம் (TNHSP) வெளியிட்டுள்ள ஆவண தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டில் இதுவரை ₹723 கோடிக்கான மொத்த உரிமைகோரலுக்கான தொகையில், கிட்டத்தட்ட 361 கோடி ரூபாய் அரசு மருத்துவமனைகளுக்குச் செலுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

2022-23 ஆண்டுக்கான நிதியாண்டில், ரூ1,152 கோடி மொத்தமாகக் கோரப்பட்டிருந்தது. அதில் 48% அதாவது சுமார் ₹554 கோடி ரூபாய் அரசு மருத்துவமனைகள் மூலம் முழுமையாகச் செலுத்தப்பட்டுவிட்டது எனத் தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்தத் திட்ட அறிக்கையானது விளக்கம் அளித்துள்ளது.
பெறப்பட்டுள்ள இந்தத் தொகையானது இந்தியா முழுவதும் உள்ள அரசுப் பொது மருத்துவமனைகள் பெற்றுள்ள பெரிய அளவிலான தொகை இதுவே ஆகும். அந்த வகையில் தமிழ்நாடு மருத்துவக் காப்பீட்டைச் சரியாகச் செயல்படுத்தி தேசிய அளவில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது.

இந்தத் தொகை மூலம் அரசு மருத்துவமனைகளின் வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பட்டுள்ளதுடன், நோயாளிகளின் நலனுக்காக மருந்துப் பொருட்களை வாங்குவதற்காக உதவியுள்ளது என்று அரசின் ஆவணமானது விளக்கம் அளித்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்தியதற்காக இந்தியாவில் சிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை ஒன்றிய அரசு தேர்ந்தெடுத்து சமீபத்தில்தான் விருது வழங்கி இருந்தது.

அதாவது ஒன்றிய அரசின் ஆயுஷ்மான் பாரத்-பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB-PMJAY)-CMCHIS திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியைத் திறம்படப் பயன்படுத்தியதில்' தமிழ்நாடு சிறந்து விளங்கியதற்காக இந்த விருது வழங்கப்பட்டது.
மாநில சுகாதார செயலர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்தத் திட்ட இயக்குநர் எம்.கோவிந்த ராவ் மற்றும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்ட இணை இயக்குநர் எஸ். ரவிபாபு ஆகியோர் ஒன்றிய சுகாதார அமைச்சரிடமிருந்து 2023 ஆம் ஆண்டுக்கான 'ஆரோக்ய மந்தன்' விருதைப் பெற்று வந்தனர்.

அந்தச் சாதனையை அடுத்து முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 50% பேர் அரசு மருத்துவமனைகள் மூலம் சிகிச்சை பெற்றுள்ளனர் என்ற இன்பச் செய்தி வெளியாகி உள்ளது. இந்தளவுக்கு மக்கள், அரசுப் பொது மருத்துவமனையின்மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது தெளிவாகியுள்ளது.
முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் கிட்டத்தட்ட 1.44 கோடி குடும்பங்கள் இணைந்துள்ளன. அதில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.5 லட்சம் காப்பீட்டுத் தொகை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக ஆண்டுக்கு ரூ.849 பிரீமியம் தொகை செலுத்தப்படுகிறது.

மேலும் 86.50 லட்சம் குடும்பங்களின் நலனைக் காப்பதற்காக ஒன்றிய அரசின் ஆயுஷ்மான் பாரத்-பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்துடன் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமானது ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின்கீழ் 23 ஜூலை 2009 முதல் 19 செப்டம்பர் 2023 வரை மொத்தம் 1,31,86,958 பேர் பயனடைந்தாக அரசு வெளியிட்டுள்ள ஆவணம் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தப் பயனாளிகளுக்காக ரூ12,219 கோடி செலவிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 2018 முதல் செப்டம்பர் 2023 வரை 17,22,512 பேர் ஆயுஷ்மான் பாரத்-பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் மூலம் மூலம் பயனடைந்துள்ளனர். அதற்காக 2,594 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

கல்லீரல், சிறுநீரகம், இதயம் மற்றும் நுரையீரல் மாற்றுச் சிகிச்சை, எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சை போன்ற பல உயர் சிகிச்சை செலவினங்களைச் சமாளிக்கத் தமிழ்நாடு அரசானது ஒரு கார்பஸ் நிதியை உருவாக்கியது.
முதற்கட்டமாக ரூ.35 கோடியை அரசு வழங்கியிருந்தது. அந்த நிதியைப் பெருக்கி இதைப்போன்ற உயர் சிகிச்சைகளுக்கான தேவைகளுக்கு அரசு தொடர்ந்து செலவிட்டு வருகிறது.
அதன்படி 11 ஜனவரி 2012 முதல் 31 செப்டம்பர் 2023 வரை 13,934 பேர் உயர் சிகிச்சை மூலம் பெற்றுப் பலனடைந்துள்ளனர். இதற்காக அரசு ரூ.1,155.12 கோடியைச் செலவிட்டுள்ளது.

இந்தக் கால வரம்புக்குள் சிறுநீரக கோளாறு காரணமாக டயாலிசிஸ் செய்துகொண்ட நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 13,16,345 பேர். இதற்காக மட்டும் 1,077.99 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
ஹார்ட் அட்டாக் சிகிச்சைக்காக 1,21,585 பேர் இத்திட்டத்தின் மூலம் பலனடைந்துள்ளனர். அதற்காக 816.70 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்கள் 52,904 பேர் என்றும் அதற்காகச் செலவிடப்பட்ட தொகை 511.57 கோடி ரூபாய்.
இதைப்போலவே cancer -chemotherapy சிகிச்சை பெற்றவர்கள் மட்டும் 6,77,652 பேர். அதற்கு 398.82 கோடி செலவிடப்பட்டுள்ளது. சிறுநீரக கல் பிரச்சினைக்காக 1,49,497 பேர் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளனர். அதற்கான மொத்த செலவு 286.99 கோடி.
இதைப்போன்று 50,07,959 பேர் 22 விதமான சிகிச்சைகளை எடுத்துக் கொண்டு பலனடைந்துள்ளனர். அதற்காகச் செலவான மொத்த தொகை ரூ.8,783.96 கோடி என்று ஆவணத்தில் மூலம் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் உள்ள மொத்தம் 1,829 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. அதில் 854 அரசு மருத்துவமனைகள், 975 தனியார் மருத்துவமனைகள் என்பது முக்கியமான தகவல்.

இந்தக் காப்பீட்டுத் திட்டத்திற்குள் மொத்தம் 1,513 விதமான மருத்துவச் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதில் எட்டு உயர் சிகிச்சை நடைமுறைகள், 11 தொடர் சிகிச்சைகள் நடைமுறைகள் மற்றும் 52 முழுமையான நோயறிவதற்காக நடைமுறைகள் அடங்கும்.
இந்த அனைத்து பெருமையும் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியைத்தான் போய்ச் சேரும். அவர்தான் இந்தியாவே வியக்கும் ஒரு முன்னோடி திட்டமான இதை 2009-இல் உருவாக்கினார். அதன் பின்னர்தான் ஒன்றிய அரசு 2015 இல் விழித்துக் கொண்டு தமிழ்நாட்டைப் பின்பற்றி ஒரு காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்தது.












Click it and Unblock the Notifications