காவி உடை திருவள்ளுவர் படத்துடன் திருவள்ளுவர் தின வாழ்த்துச் செய்தி சொன்ன ஆளுநர் ரவி, அண்ணாமலை!
சென்னை: தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ திருவள்ளுவர் படத்தைப் புறக்கணித்துவிட்டு காவி உடை திருவள்ளுவர் படத்துக்கு மரியாதை செலுத்தி திருவள்ளுவர் தின வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. இதேபோல தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் காவி உடை திருவள்ளுவர் படத்துடன் திருவள்ளுவர் நாள் வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாடு அரசு, திருவள்ளுவர் படம் இதுதான் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து அதனையே பயன்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டுக்கு ஆளுநரான ஆர்.என்.ரவியோ தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் படத்தை புறக்கணித்துள்ளார். அத்துடன் சர்ச்சைக்குரிய காவி உடையுடனான திருவள்ளுவர் படத்தை பயன்படுத்தி ஆளுநர் ஆர்.என்.ரவி தமது திருவள்ளுவர் தின செய்தியை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த செய்தியில், பாரதத்தின் தமிழ் போற்றும் தெய்வப்புலவர் திருவள்ளுவரை தேசம் ஆழ்ந்த நன்றியுடனும்,மற்றும் மிகுந்த பயபக்தியுடனும் நினைவுகூர்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஒவ்வொரு தனிநபருக்கும் அமைப்புக்கும் பொருந்தக்கூடிய ஒப்பற்ற வழிகாட்டியான திருக்குறளை வழங்கினார். பாரதத்தின் சனாதன நாகரிக மரபில், கடவுள் பக்தியின் உன்னதத்தையும், நமது தனிப்பட்ட மற்றும் கூட்டு வாழ்க்கையில் நன்னடத்தையின் ஆழத்தையும் அவர் நமக்குக் கற்றுக் கொடுத்தார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும், ஆட்சியாளர்களுக்கும் ஒரு விரிவான நல்லொழுக்கக் குறியீட்டை அவர் வகுத்தார். இன்று நாம் திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடும் அதே வேளையில், அவர் நமது அன்றாட வழிகாட்டியாக விளங்கி வருகிறார். எனவே அவர் தினமும் நினைவுகூரப்பட்டு கொண்டாடப்பட வேண்டும். திருவள்ளுவரின் சிறந்த பக்தரான பிரதமர் மோடிக்கு நன்றி, திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தமது வாழ்த்துச் செய்தியில்,
பிரதமர் மோடி திருக்குறளை, உலகம் முழுவதும், பல மொழிகளில் மொழிபெயர்க்கச் செய்ததோடு, சிங்கப்பூரில் சர்வதேச திருவள்ளுவர் கலாச்சார மையம், மலேசியா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை, பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை உட்பட, உலக நாடுகளில் திருவள்ளுவர் பெருமையைக் கொண்டு சேர்த்திருக்கிறார். மனிதக் குலத்தின் வாழ்வியல் முறைகளும், பாரதத்தின் கலாச்சாரமும் ஒருங்கே நிறைந்திருக்கும் திருக்குறளைப் படிப்போம். தெய்வப் புலவர் திருவள்ளுவரைப் போற்றி வணங்குவோம் என காவி உடை திருவள்ளுவர் படத்துடன் பதிவிட்டுள்ளார்.













Click it and Unblock the Notifications