ஆளே மாறிட்டாங்களே! ஆளுநர் மாளிகை பொங்கல் விழாவில் வேஷ்டி சட்டையில் அசத்திய ஆர்என் ரவி!கவனிச்சீங்களா
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று ஆளுநர் ஆர்என் ரவி தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முதல் அமைச்சர் ஸ்டாலின் புறக்கணித்த நிலையில் முன்னாள் முதல்வர்களான எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். விழாவில் ஆளுநர் ஆர்என் ரவி தமிழ் பாரம்பரிய முறைப்படி வேஷ்டி, சட்டை அணிந்து தலையில் பரிவட்டம் கட்டி பங்கேற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
தமிழ்நாட்டின் ஆளுநர் மாளிகை சென்னை கிண்டியில் அமைந்துள்ளது. ஆளுநர் மாளிகையில் ஆண்டுதோறும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இது காலம்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்த பொங்கல் விழாவில் பங்கேற்க ஆளுநர் சார்பில் முதல் அமைச்சர், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், ஐஏஎஸ்- ஐபிஎஸ் அதிகாரிகள், நீதிபதிகள் உள்ளிட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவது வழக்கம்.

ஆளநர் மாளிகை பொங்கல் விழா
தற்போது தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்என் ரவி உள்ளார். இந்நிலையில் தான் ஆர்என் ரவி தலைமையில் பொங்கல் விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இதற்கான அழைப்பிதழ் அச்சடித்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்த முறை ஆதீனங்கள், கிறிஸ்துவ பிஷப்புகள், முஸ்லீம் மத குருமார்கள், விளையாட்டு துறையில் சாதனை படைத்த வீரர், வீராங்கனைகள், விவசாயிகள், தமிழ் ஆர்வலர்கள் உள்பட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 1800க்கும் அதிகமானவர்களுக்கு பொங்கல் விழாவில் பங்கேற்க ஆளுநர் ஆர்என் ரவி அழைப்பு விடுத்தார்.

வேஷ்டி சட்டையில் ஆளுநர்
இதையடுத்து இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா தொடங்கியது. இந்த விழாவில் ஆளுநர் ஆர்என் ரவி தமிழ் கலாசார ஆடையை அணிந்திருந்தார். மேலும் வெள்ளை நிறத்தில் வேஷ்டி சட்டை அணிந்து வெள்ளை நிறத்தில் பரிவட்டம் கட்டி அசத்தலாக காட்சியளித்தார். அவரது மனைவி பட்டுப்புடவை அணிந்திருந்தார். ஆளுநர் ஆர் என் ரவி தனது மனைவியுடன் சேர்ந்து விழாவில் பங்கேற்க வந்த அனைவரையும் வரவேற்றார். அதன்பிறகு பொங்கல் விழா ஆளுநர் மாளிகையில் கொண்டாடப்பட்டது.

அதிமுகவினர் பங்கேற்பு
விழாவில் முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள், பாஜக எம்எல்ஏக்கள் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் நாட்டுப்புற கலை விழாக்கள், நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மேலும் விழாவில் பங்கேற்றவர்களுக்கு பாரம்பரிய முறையில் 22 வகை உணவு வழங்கப்பட உள்ளது.

ஸ்டாலின் புறக்கணிப்பு
இந்த பொங்கல் விழாவை முதல்வர் ஸ்டாலின் புறக்கணித்தார். மேலும் தமிழ்நாட்டின் அமைச்சர்கள், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியில் உள்ளவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. தமிழ்நாட்டை தமிழகம் என ஆளுநர் ஆர்என் ரவி கூறியது, சட்டசபையில் ஏற்பட்ட பிரச்சனை மற்றும் பொங்கல் திருவிழா அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற பெயரை தவிர்த்து தமிழகம் என குறிப்பிட்டதோடு, தமிழ்நாட்டின் இலச்சினை புறக்கணிக்கப்பட்டது. இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் பங்கேற்கவில்லை.












Click it and Unblock the Notifications