பெட்ரோல் குண்டு வீச்சுக்கு பதிலடி கொடுக்க எங்களுக்கும் தெரியும்.. அரை மணி நேரம் போதும்.. அண்ணாமலை
சென்னை: தேசத்திற்கு எதிராக இருக்கக் கூடிய சக்தியை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பாஜக தொண்டர்களுக்கு அரை மணி நேரம் போதும் என தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவையில் சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகம் மீது கடந்த வியாழக்கிழமை இரவு மர்மநபர்கள் சிலர் பெட்ரோல் வெடிகுண்டு வீசினர். அது போல் கோவையில் உள்ள பாஜக, இந்து அமைப்பினருக்கு சொந்தமான துணிக் கடை, வெல்டிங் கடைகள் மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
அது போல் பொள்ளாச்சியில் உள்ள பாஜக நிர்வாகிகளின் வீடுகளின் மேல் பெட்ரோல் குண்டு வீசியதில் அவர்கள் வீட்டு வாசலில் இருந்த இரு கார்கள், இரு ஆட்டோக்களும் சேதமடைந்தன. அது போல் சேலம், கன்னியாகுமரியிலும் ஆர்எஸ்எஸ், பாஜக நிர்வாகிகளின் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டது.
பாஜகவினரே பெட்ரோல் குண்டுகளை அரசியல் லாபத்துக்காக வீடுகளில் வீசியிருப்பார்களோ? சீமான் சந்தேகம்

பாஜக நிர்வாகிகள்
இதற்கு பாஜக நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். சென்னை தாம்பரத்தில் பாஜக ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் மாநில தலைவர் கே அண்ணாமலை பேசியதாவது: தேசிய புலனாய்வு அமைப்பும் மாநில காவல் துறையும் இணைந்து நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 106 பேரை கைது செய்தனர்.

10 பேர் கைது
தமிழகத்தில் மட்டும் 10 க்கும் மேற்பட்டோர் கைதாகியுள்ளார்கள். இந்த நிலையில் கடந்த இரு நாட்களாக பாஜக தொண்டர்கள், அவர்களின் சொத்துகள், பாஜக அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல்கள் நடந்துள்ளன. இன்று கால வரை கோவையிில் மட்டும் பாஜக அலுவலகம் உள்பட 12 இடங்களில் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டுள்ளன.

19 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு
ராமநாதபுரம் திண்டுக்கல் கடலூர் செங்கல்பட்டு திருப்பூரில் தலா ஒரு இடங்களிலும் ஈரோட்டில் இரண்டு இடங்கள் என மொத்தம் 19 இடங்களில் பாஜக தொண்டர்கள், ஆர்எஸ்எஸ், ஹிந்து முன்னணி அமைப்பினர் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. தமிழகம் அமைதிப்பூங்காவாக இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருகிறார்.

தேச விரோத செயல்கள்
ஆனால் இது போல் தாக்குதல் நடத்தி தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வருவோர் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லையே. பெட்ரோல் குண்டு வீச்சை ஏற்கவே முடியாது. இதற்காக பாஜக தொண்டர்கள பதிலடி கொடுக்க ஆரம்பித்தால் என்னவாகும் என திமுக அரசு யோசிக்க வேண்டும். இது போல் தேச விரோத சக்திகளை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பாஜகவினருக்கு அரை மணி நேரம் போதும்.

அமைதியை விரும்புகிறோம்
ஆனால் நாங்கள் அதை விரும்பவில்லை. அமைதியையே விரும்புகிறோம். பெட்ரோல் குண்டு வீசி இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. எனவே இந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின், காவல் துறையினருக்கு முழு சுதந்திரம் அளித்தால் மட்டுமே அவர்களால் கயவர்களை கைது செய்ய முடியும். இன்னும் இரண்டு நாட்கள் பார்ப்போம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.