அரையாண்டு விடுமுறை.. கிறிஸ்துமஸ்.. சென்னையில் இருந்து சொந்தஊர் செல்ல சூப்பர் வசதிகள்
சென்னை: டிசம்பர் 23ம் தேதி (செவ்வாய்கிழமை), 24-ம் தேதி (புதன்கிழமை), கிறிஸ்துமஸ் பண்டிகையை (வியாழக்கிழமை) முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் செய்ய ஏதுவாக
சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதேபோல் அரையாண்டு விடுமுறையும் நாளை மறுநாள் முதல் தொடங்குகிறது. எனவே பலரும் சொந்த ஊர் செல்ல ஆர்வம் காட்டுவார்கள். சென்னையில் இருந்து ஒரே நேரத்தில் பல ஆயிரம் பேர் சொந்த ஊர் செல்ல விரும்புவார்கள். அவர்களின் வசதிக்காக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில்,"டிசம்பர் 23ம் தேதி (செவ்வாய்கிழமை), 24-ம் தேதி (புதன்கிழமை), கிறிஸ்துமஸ் பண்டிகையை (வியாழக்கிழமை) முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 23ம் தேதி 255 பேருந்துகளும், 24ம் தேதி 525 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இரு தினங்களுக்கும் மொத்தம் 91 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மாதாவரத்திலிருந்து இரு தினங்களும் மொத்தம் 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், இந்த வாரத்தில் செவ்வாய்கிழமை 20,107 பயணிகளும், புதன்கிழமை 21,206 பயணிகளும், வெள்ளிக்கிழமை 7,578 பயணிகளும் சனிக்கிழமை 5,972 பயணிகளும் ஞாயிறு 14,256 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications