இந்த மாதம் அக்டோபர் 30-க்குள் சொத்து வரியை செலுத்தினால்.. லட்டுபோல ரூ.5000 பெறலாம்.. ஹேப்பி நியூஸ்
சென்னை: அக்டோபர் 30ம் தேதிக்குள் சொத்துவரியை செலுத்த வேண்டும் என்று கூறி அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதுகுறித்த சலுகை ஒன்றையும், நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் வெளியிட்டிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் தொடங்கும் முதல் மற்றும் 2-ம் அரையாண்டில் முதல் 15 நாட்களுக்குள் சொத்து வரியை செலுத்திவிட வேண்டும்.. தாமதமாக செலுத்தினால் எந்தவித அபராதமும் விதிக்க முடியாத நிலை முன்பு இருந்தது... அதற்கான சட்ட வழிமுறைகளும் வகுக்கப்படாமல் இருந்தது.

சொத்துவரி: இதன்காரணமாக, வருடத்துக்கு ரூ.1,000 கோடிக்கு மேல் சொத்து வரி வசூலிக்கும் தமிழகத்திலேயே பெரிய மாநகராட்சியான சென்னையில் ஒவ்வோர் வருடமும் சுமார் ரூ.350 கோடிக்கு மேல் சொத்துவரி நிலுவை இருந்தது..
அதற்கு பிறகுதான், முதல் 15 நாட்களுக்குள் வரியை செலுத்தினால் 5 சதவீதம், அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்ற சலுகையை சென்னை மாநகராட்சி அறிவித்தது. இதனால் சொத்து வரி வசூல் அதிகரித்தது. மக்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
திருத்தங்கள்: பின்னர் இதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ஒவ்வொரு அரையாண்டின் முதல் 30 நாட்களுக்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம், அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்" என்ற முறை அமல்படுத்தப்பட்டது.
எனவே, சொத்து வரியை பொறுத்தவரையில், இரண்டு அரையாண்டுகளில் வசூலிக்கப்படுகிறது. முதல் அரையாண்டு ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை... இரண்டாம் அரையாண்டு அக்டோபர் 1 முதல் மார்ச் 31 வரை... இதில், அரையாண்டு துவங்கும் முதல் 30 நாளில் சொத்து வரி செலுத்துவோருக்கு, 5 சதவீதம் அதிகபட்சம் 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
அரையாண்டு: இந்நிலையில் "மாநகராட்சிகளில் வசிப்போர், இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை வரும் 30ம் தேதிக்குள் செலுத்தினால், 5 சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம்" என்று நகராட்சி நிர்வாகத்துறை தற்போது அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறது.
இது குறித்து, நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் சொல்லும்போது: தமிழகத்தில் வரும் 2025 - 26ம் நிதியாண்டு முதல், 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட உள்ளது. அதனால், முறைப்படி சொத்து வரி செலுத்துவோருக்கு, அரசு சலுகைகள் வழங்கி வருகிறது.
அறிவிப்பு: இந்த 2ம் அரையாண்டுக்கான சொத்து வரியை, வரும் 30க்குள் செலுத்தினால், 5 சதவீதம் அல்லது 5,000 ரூபாய் வரை ஊக்கத்தொகை கிடைக்கும். அப்படி செலுத்தாதவர்களுக்கு, 1 சதவீதம் தனி வட்டி என்ற அடிப்படையில், தண்ட வரி வசூலிக்கப்படும். எனவே, நகர்ப்புற உள்ளாட்சிகளில் வசிப்போர், வரும் 30க்குள் சொத்து வரி செலுத்தி பயனடையலாம்" என்று தெரிவித்துள்ளார்கள்.
இதில் சென்னையை பொறுத்தவரை, வழக்கமாக, மாநகராட்சியிலிருந்து, சொத்து உரிமையாளர் தந்திருக்கும் செல்போன் நம்பருக்கு மட்டுமே, நினைவூட்டல் மெசேஜ் (ரிமைண்டிங் மெசேஜ்) அனுப்பப்படும்..
இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால், http://www.chennaicorporation.gov.in என்ற வெப்சைட்டில் சொத்துவரியை செலுத்தலாம். மற்றபடி, மாநகராட்சி பெயரை பயன்படுத்தி வரும், வேறு எந்த இணையதள லிங்க்கையும் யாரும் தொட வேண்டாம், பணமோசடியிலும் சிக்கி கொள்ள வேண்டாம் என்று ஏற்கனவே அதிகாரிகள் அறிவுரை தந்திருந்தனர்.
வார்னிங்: காரணம், சென்னை மாநகராட்சியின் ஊக்கத்தொகை பெறுவதற்காக, அக்டோபர் 30க்குள் சொத்து வரியை செலுத்த வேண்டும் என்று மோசடி கும்பல், மாநகராட்சி பெயரில் மெசேஜ் அனுப்பியிருந்தது.. அப்படி அனுப்படும் மெசேஜ்களில், "1xpl.co/01ASud" என்ற லிங்க்கும் தரப்பட்டிருந்தது.. இந்த லிங்க்கை அழுத்தி உள்ளே செல்ல வேண்டாம் என்றும், மோசடி கும்பல் கைவரிசை காட்டுகிறது என்றும் மாநகராட்சி எச்சரித்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications