களிமண்ணை வைத்து பிள்ளையார் செய்யலாம்.. ஆனா நீங்கள் திருட்டு மணலாச்சே.. அண்ணாமலை விமர்சனம்
சென்னை: களிமண்ணை வைத்து பிள்ளையார் சிலை செய்து புண்ணியம் தேடலாம். ஆனால் திருட்டு மண்ணை வைத்து பாவம் மட்டுமே சம்பாதிக்க முடியும் என அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
பிஜிஆர் என்ற தனியார் நிறுவனத்திற்கு மின்சார வாரியம் பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளதாகவும் இது தொடர்பான ஆதாரங்களை விரைவில் வெளியிடுவேன் என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சந்தித்தார்.

சிறப்பு சலுகை
அப்போது அவர் கூறுகையில் தனியார் நிறுவனத்திற்கு சிறப்பு சலுகை வழங்குவது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து தெரியவில்லை என்றால் தெரிந்து கொண்டு பாஜக தலைவர் அண்ணாமலை பேச வேண்டும். அவரை போல சமூகவலைதளங்களில் மட்டும் பணி செய்பவன் நான் இல்லை. பொது வாழ்வில் 25 ஆண்டுகளாக இருக்கிறேன்.

அரிச்சுவடி கூட தெரியாது
அண்ணாமலைக்கு அரசியலில் அரிச்சுவடி கூட தெரியாது. தலையில் களிமண் மட்டுமே உள்ளது. அரைவேக்காட்டுத்தனமாக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை உளறி வருகிறார். அவருக்கு மண்டையில் சரக்கு ஒன்றும் இல்லை. 24 மணி நேரத்திற்குள் செய்தியாளர்களை சந்தித்து தனது குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை அண்ணாமலை வழங்க வேண்டும்.
|
மண்டையில் களிமண்
இல்லையென்றால் கட்டாயமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார். இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜியின் கருத்துக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை தனது ட்விட்டரில் காட்டமான கருத்துகளை பதிவிட்டுள்ளார். அதில் மணல் திருடும் அமைச்சர்கள் அவர்கள் என் மண்டையில் களிமண் என்கிறார்.

திருட்டு மண்ணை
இருக்கட்டும், எனக்கு பெருமை தான், களிமண்ணை வைத்து பிள்ளையார் சிலை செய்து புண்ணியம் தேடலாம். திருட்டு மண்ணை வைத்து பாவம் மட்டுமே சம்பாதிக்க முடியும்!!! நினைவிருக்கிறதா 11 மணி 05 நிமிடம் வாக்குறுதி என பதிவிட்டுள்ள அண்ணாமலை #ResignEBMin என்ற ஹேஷ்டேக்கையும் போட்டுள்ளார்.
|
செந்தில் பாலாஜி பதிலடி
இதற்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். அதில் மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம், மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம்' என்றார் பெரியார் என்ற கருத்தை குறிப்பிட்டு, படித்ததை உணர்ந்த நாள் என பதிவிட்டுள்ளார். இப்படியாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையே வார்த்தை போர் கடந்த இரு தினங்களாக முற்றி வருகிறது.












Click it and Unblock the Notifications