2 நாட்களுக்கு கனமழை.. 6 மாவட்ட மக்களே உஷார்.. சென்னைவாசிகளுக்கு குட் நியூஸ்
சென்னை: தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். வட தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் பாலச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் பல மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளைய தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வானிலை அறிக்கை
இந்த நிலையில் இன்று வானிலை ஆய்வு மையத்தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில்,
தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இப்போது சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 420 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு வட மேற்கு திசையில் வட தமிழகம் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். மேலும் இது நாளை காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழக்கக் கூடும்.

6 மாவட்டங்களில் கனமழை
இதன் காரணமாக அடுத்து வரும் இரு தினங்களுக்கு வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கனமழையை பொருத்தவரைக்கும் இன்றைய தினம் திருவள்ளூர், சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் மழை
நாளைய தினம் 22ஆம் தேதி காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.

மீனவர்கள் கவனம்
வட தமிழக கடலோர பகுதிகள், தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக் கடல், மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 65 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா கடலோர பகுதிகளிலும் பலத்த காற்றானது மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications