"என்கவுண்டரில் போட்ருவோம்னு போலீஸ் மிரட்டியிருக்காங்க”.. ரவுடி நாகேந்திரன் மனைவி கதறல்.. ஐகோர்ட் அதிரடி
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி நாகேந்திரனை என்கவுண்டர் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும், அவ்வாறு என்கவுண்டர் செய்யக்கூடாது என அளிக்கப்பட்ட மனுவை பரீசிலிக்க உத்தரவிடக்கோரியும் ரவுடி நாகேந்திரனின் மனைவி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 7 ஆம் தேதி சென்னை பெரம்பூர் செம்பியம் பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்ந்து தீவிரமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் தொடர்பாக 27 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள், திருவேங்கடம், திருமலை, பாஜக நிர்வாகி செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், ராமு, கோகுல், சிவசக்தி, தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகியாக இருந்த ஹரிகரன், அதிமுக நிர்வாகியாக இருந்த வழக்கறிஞர் மலர்கொடி, திமுக நிர்வாகி மகன் சதீஷ், வடசென்னை பாஜக நிர்வாகி அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிஹரன், ரவுடி நாகேந்திரன், காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி, உள்ளிட்ட 27 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ரவுடி நாகேந்திரன் ஏற்கனவே வேலூர் சிறையில் இருந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அவர் திட்டம் போட்டு கொடுத்ததாக போலீசாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவரை போலீசார் கைது செய்தனர். அவரது மகன் அஸ்வத்தாமன் ஏற்கனவே இந்த வழக்கில் சிறையில் உள்ளார்.
இந்நிலையில், ரவுடி நாகேந்திரனின் மனைவி விசாலாட்சி நாகேந்திரன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தனது கணவருக்கும் எந்த வித தொடர்பும் இல்லை எனவும் அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் இந்த வழக்கை சட்ட ரீதியாக எதிர் கொள்ள தயாராக இருப்பதாகவும் அவரது மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடத்தை காவல் துறையினர் போலி என்கவுண்டர் செய்ததாகவும் அதே போல தனது கணவரையும் போலீசார் என்கவுண்டர் செய்யக்கூடும் என அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் நாகேந்திரனின் மனைவி விசாலாட்சி கூறியுள்ளார்.
இது தொடர்பாக கடந்த மாதம் சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோரிடம் மனு அளித்ததாகவும் ஆனால் அந்த மனு பரிசீலிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். எனவே தனது மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறையில் நாகேந்திரன் பாதுகாப்பாக இருக்கும் நிலையில் எதன் அடிப்படையில் என்கவுண்டர் செய்யப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டதாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், என்கவுண்டர் செய்வோம் என விசாரணையின் போது போலீசார் நாகேந்திரனிடம் கூறியதாக தெரிவித்தார். இதனையடுத்து, எந்த ஆதாரங்களும் இல்லாமல் வெறும் யூகத்தின் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications