நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை எதிர்த்த வழக்கு.. ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
சென்னை: "நலம் காக்கும் ஸ்டாலின்" திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும், 'நலம் காக்கும் ஸ்டாலின்' சிறப்பு மருத்துவ முகாமை, ஆகஸ்ட் 2 ஆம் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

ஒவ்வொரு சனிக் கிழமைதோறும், கிராமப்புறங்கள், நகர்ப்புறங்களில் பகுதி வாரியாக முகாம் நடத்தப்பட்டு வருகிறது. முகாமில், ரத்த பரிசோதனை, காசநோய், புற்றுநோய் உள்ளிட்ட, பல்வேறு விதமான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், பொது மருத்துவம், இதய மருத்துவம் உள்ளிட்ட, பல்துறை மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.
அதன்படி முதல் நாளில், 44,418 பேர் பயனடைந்தனர். தொடர்ந்து, இரண்டாவது வாரமாக நேற்று மாநிலம் முழுதும் நடந்த முகாம்களில், 48,418 பேர் பயனடைந்து உள்ளனர். இதன் வாயிலாக இரண்டு வாரங்களில், 92,836 பேர் பயனடைந்து இருப்பதாக மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், "நலம் காக்கும் ஸ்டாலின்" திட்டத்திற்கு எதிராக வழக்கறிஞர் சத்தியகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இதே போன்ற வழக்கை ஏற்கனவே உச்சநீதிமன்றம் அபராதத்துடன் தள்ளுபடி செய்துள்ளதாக மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் தெரிவித்தார்.
இதனையடுத்து, மனுவை திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ரூ.1 லட்சம் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதேபோல் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கு எதிரான வழக்கையும் தள்ளுபடி செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரரான அதிமுக வழக்கறிஞர் இனியனுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications