பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு ஆதரவு பேச்சு- உதயநிதிக்கு "அரசியல் ஆதாயமாம்"- இந்து முன்னணி சாடல்
சென்னை: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை அரசியல் ஆதாயத்துக்காக தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆதரிப்பதாக 'இந்து முன்னணி' கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்தியது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் பாகிஸ்தான் வீரர்களை வெறுப்பேற்றும் வகையில் ஜெய்ஶ்ரீராம் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதற்கு தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக இந்து முன்னணி இன்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கை: இந்திய ரசிகர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று சொன்னது வெறுப்புணர்வை தூண்டும் பேச்சு என்று விளையாட்டு அமைச்சர் உதயநிதி அவர்கள் கூறியுள்ளார். அமைச்சருக்கு ஞாபகம் மறதி கூடுதலாக இருப்பதாகவே தெரிகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெற்ற போது திமுகவின் பி டீம் குரூப்புகளான லெட்டர் பேடு கட்சிகள் சென்னை அணி விளையாடிய போது மைதானத்திற்குள்ளே சென்று வீரர்களை இழிவு படுத்தினர், காலணிகளை கொண்டு எறிந்தனர், அப்போதெல்லாம் உதயநிதி தூக்கத்தில் இருந்தாரா? இல்லை மயக்கத்தில் இருந்தாரா? இல்லை மறந்துவிட்டாரா..?
2017-ல் இந்தியா-பாகிஸ்தான் இடையே போட்டியின் போது இந்திய அணி தோல்வி அடைந்து பவுலியன் திரும்பும்போது பாகிஸ்தான் ரசிகர்கள் இழிவான முறையில் நடந்து கொண்டார்களே அதைப் பற்றி உதயநிதி பேசுவாரா..? 2019 U19 உலக கோப்பை இறுதி போட்டியின் போது பங்களாதேஷ் வீரர்கள் செய்த காரியம் தெரியுமா..?
ஹாக்கி விளையாட்டின் போது பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோற்றவுடன் பாகிஸ்தான் வீரர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் இழிவான ஆபாச சைகைகள் காட்டினார்களே அதெல்லாம் உதயநிதிக்கு தெரியுமா..?
பாவம் பச்சப்பிள்ளை உதயநிதிக்கு அதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை..
ஜெய்ஸ்ரீ ராம் என்று சொல்வது தவறில்லை என்பதும் உதயநிதிக்கு தெரியும். ஓட்டு வங்கி அரசியல் காரணமாக பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆதரவாக பேசினால் தமிழக முஸ்லிம்கள் ஓட்டு போடுவார்கள் என்று கணக்கு போடுவது தான் மாபெரும் இழிவான செயல் என்பதை உதயநிதி புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு இந்து முன்னணி தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications