இந்து சமய அறநிலையத்துறை 'மொபைல் ஆப்'பில் கோபுரம் சின்னம் இல்லை! இந்து அமைப்புகள் போர்க்கொடி!
சென்னை: இந்து சமய அறநிலையத்துறை 'மொபைல் ஆப்'பில் கோபுர சின்னம் வைக்கப்படவில்லை எனக் கூறி இந்து அமைப்பினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
தமிழக அரசின் பல்வேறு துறைகள் சார்பில் மொபைல் செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள மொபைல் செயலியில் தமிழ்நாடு அரசின் கோபுரம் சின்னம் இடம்பெறாமல் இருந்தது. இதையடுத்து கிளம்பிய சர்ச்சை காரணமாக போக்குவரத்துக் கழகத்தின் மொபைல் ஆப்பில் கோபுரம் சின்னம் இடம்பெற வைக்கப்பட்டது.

ஆனால் அதே வேளையில் இந்துசமய அறநிலையத்துறை மொபைல் ஆப்பில் தமிழக அரசின் சின்னமான ஸ்ரீவில்லிப்புதூர் ஆண்டாள் கோவில் கோபுரம் சின்னம் இடம்பெறவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து இந்துசமய அறநிலையத்துறை மீது இந்து அமைப்பினர் விமர்சனக் கணைகளை வீச ஆரம்பித்துள்ளனர். இது குறித்து விமர்சித்துள்ள இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார், இந்து சமய அறநிலையத்துறை மொபைல் செயலியில் கோபுரம் சின்னத்துக்கு பதில் பிற மதவழிபாட்டுத் தல கோபுரம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
ஸ்ரீவில்லிப்புதூர் ஆண்டாள் கோவில் கோபுரம் சின்னத்தை தமிழக அரசு மெல்ல அழிக்கிறதோ என சந்தேகிக்க வேண்டியுள்ளதாக கூறியுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை தமிழர் சமய அறநிலையத்துறையாக மாற்ற வேண்டும் என்றும் இந்து மத அடையாள அழிப்பை அரசு கை விட வேண்டும் எனவும் கூறியுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை மொபைல் செயலியில் கோபுரம் சின்னத்தை உடனடியாக மாற்றி வைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல் இந்து சமய அறநிலையத்துறை மொபைல் செயலியில் கோபுரம் சின்னம் இடம் பெறாதது இந்து மக்கள் மனதில் வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தும் செயல் என பாரத் இந்து முன்னணி கூறியுள்ளது. இதனிடையே திமுக ஆட்சி தான் இந்து சமய அறநிலையத்துறையின் பொற்காலம் எனக் கூறும் அமைச்சர் சேகர்பாபு இதுவரை எந்த அரசும் செய்யாத எண்ணற்ற பணிகளை திமுக அரசு செய்து முடித்திருப்பதாக பல பேட்டிகளில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications