'குடிமகன்'கள் கவனத்திற்கு.. டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.. என்றைக்கு தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் எதிர்பார்த்ததை விட பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் ஒவ்வொரு தொகுதிக்கும் என தனித் தனியாக வியூகம் அமைத்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், மே 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
இந்த நிலையில், தேர்தல் நடைபெறுவதையொட்டி தமிழகத்தில் வரும் ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 6 வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. அதேபோல், வாக்குகள் எண்ணப்படும் மே2ம் தேதி அன்றும் டாஸ்மாக் இயங்காது எனவும் அரசு தெரிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் எந்த வித பிரச்சனையும் இன்றி அமைதியான முறையில் நடப்பதை உறுதி செய்யும் விதமாக டாஸ்மாக் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் திறந்திருப்பதால், தேர்தல் நடத்துவதிலேயே சிக்கல் இருக்குமோ என்று யோசித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் அரசு, டாஸ்மாக்கை ஏன் நடத்த வேண்டும்? என்பதே பலரது கேள்வியாக உள்ளது.