தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கும் கனமழை.. எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
சென்னை: கனமழை காரணமாக சென்னை, திருவாரூர், நாகை , மயிலாடுதுறை, உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ம் தேதி தொடங்கியது. இதன் காரணமாக கடந்த 4 நாட்களாக தொடர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
கடந்த மாதம் 30ம் தேதியில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையின் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

இரவு முழுவதும் பெய்த கனமழை
தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது. இந்த ஆண்டு சென்னையில் கால்வாய் புனரமைப்பு பணி நடந்த நிலையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தானாகவே வடிந்தது. இருப்பினும் சில இடங்களில் மழைநீர் தேங்கியது. இதையடுத்து மாநகராட்சி சார்பில் மோட்டார் பம்புகள் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை முதல் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் மீண்டும் கனமழை தொடங்கியது.

சென்னையில் விடுமுறை
மாலை 5 மணி முதல் பல இடங்களில் மழை பெய்தது. சென்னை ராயப்பேட்டை, எழும்பூர், நுங்கம்பாக்கம், கீழ்பாக்கம், அயனாவரம், கேகேநகர், வடபழனி, அண்ணாசாலை, பள்ளிக்கரணை, ஈசிஆர் ரோடு உள்பட பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. இந்த மழை இரவு முழுவதும் தொடர்ந்ததால், சென்னையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

நாகை, திருவாரூர் விடுமுறை
இதேபோல் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் இரவு முழுவதும் கனமழை தொடர்ந்ததால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் பெய்த கனமழையால் திருவள்ளூர், ஆவடி, பூவிருந்தவல்லி, பொன்னேரி தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
இதுமட்டுமல்லாமல் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியில் இயங்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை இல்லை
இதனிடையே விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications