சென்னை நங்கநல்லூர் குளத்தில் இடுப்பளவு தண்ணீரில் 5 அர்ச்சகர்கள் மூழ்கியது எப்படி? பகீர் தகவல்கள்
சென்னை: சென்னை நங்கநல்லூரில் இடுப்பளவு தண்ணீரில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் இறந்தது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆலந்தூர் தொகுதிக்குள்பட்ட நங்கநல்லூரில் தர்மலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி தீர்த்தவாரி நிகழ்ச்சி இன்ற காலை 9.30 மணி அளவில் நடந்தது.
இந்த விழாவில் 25 அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர். பொதுவாக தீர்த்தவாரியின்போது உற்சவ மூர்த்திகளையும் அவர்களுக்கான அபிஷேக பொருட்களையும் நீரில் 3 முறை மூழ்கடித்து கொண்டு செல்வது வழக்கம்.

மூவரசம்பட்டு குளம்
அதன்படி கோயில் அருகே உள்ள மூவரசம்பட்டு குளத்தில் தீர்த்தவாரிக்காக உற்சவர்களுடன் 25 அர்ச்சகர்கள் நீரில் இறங்கினர். இவர்கள் இரு முறை மூழ்கி எழுந்தனர். மூன்றாவது முறை மூழ்கி எழும் போது ஒரு அர்ச்சகர் சேற்றில் சிக்கினார். அவர் தண்ணீரில் தத்தளித்த போது அவரை காப்பாற்ற மற்ற 4 பேர் உதவினர்.

5 பேர் மூழ்கினர்
இவர்களின் சடலத்தை பார்த்த மற்ற அர்ச்சகர்கள் கதறி அழுதனர். இறந்தவர்களின் உடல்கள் குரோம்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு நடத்தி வருகிறார்.

தாமோ அன்பரசன்
அது போல் ஆலந்தூர் எம்எல்ஏவும் அமைச்சருமான தாமோ அன்பரசன் நேரில் வந்தார். சட்டசபையில் நிலக்கரி சுரங்கத்திற்கு எதிரான கவன ஈர்ப்பு தீர்மானம் நடந்த நிலையில் தகவலை அறிந்த அவர் முதல்வரின் அறிவுறுத்தலுடன் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். அவர் கூறுகையில், இந்த சம்பவம் மிகவும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்த 5 பேருமே சின்ன வயதினர், நன்கு படித்தனர். தீர்த்தவாரி சேவைக்காக அவர்கள் சேவையாற்ற வந்துள்ளனர்.

அனுமதி பெறவில்லையா
இந்த விழாவுக்கு போலீஸாரிடம் அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. ஆனால் சிலர் அனுமதி பெற்றதாக கூறுகிறார்கள். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார். இந்த சம்பவம் நடந்தது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில் அர்ச்சகர்கள் 2 முறை மூழ்கினர். ஆனால் மூன்றாவது முறை மூழ்கி எழும் போது ஒரு அர்ச்சகரின் கால்கள் சேற்றில் சிக்கின. இதனால் அவரை காப்பாற்ற 4 பேர் முயன்ற போது அவர்களும் நீரில் மூழ்கினர்.

இடுப்பளவு தண்ணீர்
இடுப்பளவு நீரில் எப்படி மூழ்கினார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த குளம் 20 அடி ஆழத்தை கொண்டது. இதில் தண்ணீர் இடுப்பளவு இருந்தாலும் சேறானது அதிக அளவில் இருக்கிறதாம். அந்த சேற்றில் கால்கள் சிக்கியதால் மூழ்கிய ஒரு அர்ச்சகரால் எழுந்திருக்க முடியாமல் தத்தளித்த போது மற்ற 4 பேர் அவரை காப்பாற்ற முயன்று அவர்களும் உயிரிழந்தனர்.












Click it and Unblock the Notifications