உதயநிதி கைது.. ஸ்கிரிப்ட் போட்ட அதிகாரி.. விஜய்க்கு ஐடியா கொடுத்த டாப் போலீஸ்? பின்னணி
சென்னை: உதயநிதி ஸ்டாலின் கைது, ஜாமீன் விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலை வீசியுள்ள நிலையில், இந்த அதிரடி கைது நடவடிக்கைக்குப் பின்னால் உளவுத்துறை மற்றும் ஒரு மூத்த காவல் துறை உயர் அதிகாரியின் பங்களிப்பு குறித்த திடுக்கிடும் பின்னணித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி உரிமைப் போராட்டப் பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய சில கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதனைத் தொடர்ந்து, ஆளுங்கட்சியான தமிழக வெற்றித் கழகத்தின் மகளிர் அணி சார்பில் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளிக்கப்பட்டது.

ஆனால், புகார் அளிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே வழக்கமான சட்ட நடவடிக்கையாக இல்லாமல், மிகவும் திட்டமிடப்பட்ட உயர்மட்ட அரசியல்-காவல்துறை வியூகமாக இது மாறியது.
இரவு நேர ஸ்கிரிப்ட்: வழக்குப் பதிவு முதல் திட்டம் வரை
புகார் வந்தவுடன், சட்டரீதியான சிக்கல்கள் எழும் வாய்ப்புகளைத் தவிர்க்க காவல் துறையின் உளவுப்பிரிவு மற்றும் ஒரு அனுபவமிக்க மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி களமிறக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அன்றைய தினம் நள்ளிரவில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட கணத்திலிருந்தே, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதற்கான 'ப்ளூ பிரிண்ட்' தயாரிக்கப்பட்டது.
பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு வலுவாக்கப்பட்டது. அதேசமயத்தில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ள சூழலில், சட்டப் பூர்வமாக எந்தவித தடையோ அல்லது உடனடியாக முன்ஜாமீன் உத்தரவோ நீதிமன்றத்தில் பெற முடியாதபடி கைது நேரத்தைக் கணக்கிட அந்த அதிகாரி வழிகாட்டியதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிகாலை ஆபரேஷன் நீலாங்கரை
முன்கூட்டியே திட்டமிட்டபடி, செவ்வாய் அதிகாலை 7:20 மணிக்கே தஞ்சாவூர் காவல் துறையின் தனிப்படை சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் இல்லத்தை அடைந்தது. இது ஆனால் காலை 6 மணிக்கே உதயநிதி தரப்பிற்கும் தெரிந்துள்ளது. வழக்கமாக உள்ளூர் காவல் துறை மூலமாகச் சம்மன் வழங்கி விசாரணைக்கு அழைப்பதற்குப் பதிலாக, நேரடியாகக் கைது நடவடிக்கையில் இறங்குவது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்பதைத் தலைமை முன்கூட்டியே கணித்திருந்தது.
நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைக்கு வரும் முன்னரே கைது நடைமுறையை முடித்து வேனில் ஏற்ற வேண்டும் என்ற மூத்த அதிகாரியின் வியூகத்தின்படியே அனைத்தும் மின்னல் வேகத்தில் நடந்தன. காலை 10:40 மணிக்கு உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு, சாலை மார்க்கமாகத் தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தஞ்சாவூர் பயணம் & செங்கிப்பட்டி திருப்பம்
சென்னையிலிருந்து தஞ்சாவூர் வரை சுமார் 350 கி.மீ தூரம் சாலை வழியே அழைத்துச் செல்லும் பாதையில், திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபடக்கூடும் என்பதையும் காவல் துறை முன்கூட்டியே கணித்திருந்தது. அதற்கேற்ப சுமார் 3,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அதேபோல, தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் தொண்டர்கள் திரள்வார்கள் என்பதால், கடைசி நிமிடத்தில் அவரைத் தஞ்சாவூர் நகரத்திற்குள் கொண்டு செல்லாமல், புறநகர்ப் பகுதியான செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு மாற்றியது அந்த அதிகாரியின் மற்றொரு சமயோசித நடவடிக்கை. அங்கு சுமார் 90 நிமிடங்கள் தீவிர விசாரணைக்குப் பிறகு, உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அவருக்கு ஸ்டேஷன் ஜாமீன் வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
மொத்தத்தில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது முதல், அதிகாலை கைது, நெடுஞ்சாலைப் பயணம், செங்கிப்பட்டி விசாரணை, ஜாமீன் வரை அனைத்தும் ஒரு மூத்த காவல் அதிகாரியின் துல்லியமான வழிநடத்துதலின் பேரிலேயே விஜய்யின் ஆக்சன்கள் அரங்கேறியுள்ளதாக கோட்டை வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications
