வெற்றி! நிலவில் தென் துருவத்தில் இறங்கிய விக்ரம் லேண்டர்! சந்திரயான் 3 சாதனை! எப்படி? நடந்தது என்ன?
சென்னை: நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை படைத்து உள்ளது. இது எப்படி தரையிறங்கியது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.
சந்திரயான் 2 திட்டம் பாதி தோல்வி அடைந்த நிலையில் சந்திரயான் 3 திட்டம் தற்போது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு உள்ளது. விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இரண்டையும் மீண்டும் நிலவில் வெற்றிகரமாக இஸ்ரோ களமிறக்கி உள்ளது.

சந்திரயான் 3 திட்டத்தில் சந்திரயான் 2ல் இருந்தது போல ஆர்பிட்டர் இருக்காது. மாறாக விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இரண்டு மட்டுமே உள்ளது. இதில் ப்ரோபல்ஷன் மாடல் என்ற ஒரு உந்த கூடிய ப்ரோபல்ஷன் என்ற பகுதியும் உள்ளது. இதுதான் இந்த லேண்டர், ரோவரை நிலவிற்கு கொண்டு சென்றது.
எந்த ராக்கெட்டில் சென்றது?: இந்தியாவின் ராக்கெட்டுகளில் பாகுபலி ராக்கெட் என்று அழைக்கப்படும் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் அதாவது Geosynchronous Satellite Launch Vehicle Mark III ராக்கெட். இதை இப்போது எல்விஎம் 3 என்று அழைக்கிறார். இது ஒரு 3 ஸ்டேஜ் ராக்கெட் ஆகும். முதல் இரண்டு சாலிட் பூஸ்டர். அதாவது இரண்டு திட எரிபொருள் கொண்ட பூஸ்டர்கள் இருக்கும். அதன்பின் திரவ நிலையில் இருக்கும் இரண்டாவது எஞ்சின் இருக்கும். முதல் இரண்டு திட திரஸ்ட் பூஸ்டர்கள் தொடக்கத்தில் ராக்கெட் மேலே செல்வதற்கு பயன்படும். இரண்டாவது கட்டத்தில் குறிப்பிட்ட வட்ட பாதையில் ராக்கெட்டை கொண்டு செல்லும் கடைசி கட்ட பயணத்திற்கு திரவ பூஸ்டர் பயன்படுத்தப்படும். அதன்பின் கடைசியாக கிரையோஜெனிக் ஸ்டேஜ் எனப்படும் கடைசி கட்ட ஸ்டேஜ் எஞ்சின் இயங்கும். இது மட்டும் 28 டன் எடைகொண்டது . இது முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கிரையோஜெனிக் எஞ்சின் ஆகும். இதனால் 4 ஆயிரம் கிலோ கிராம் எடையை கூட சுமந்து செல்ல முடியாது. இதுதான் சந்திராயனை பூமியின் வட்டப்பாதையில் கொண்டு சென்று நிறுத்தியது. அதன்பின் சந்திரயான் 3 நிலவை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தது.
என்னென்ன பாகங்கள் உள்ளன?: இந்த சந்திராயன் 3ல் பின்வரும் 2 முக்கியமான பாகங்கள் உள்ளன.
ப்ரோபல்ஷன் மாடுல்: இது சந்திராயன் ராக்கெட்டின் தலை பகுதியில் இருக்கும் மொத்த அமைப்பில் கீழ் உள்ள பகுதி ஆகும். சந்திராயன் 3 பூமி வட்டப்பாதையில் நிறுத்தப்பட்ட பின் அதை நிலவை நோக்கி கொண்டு செல்ல அவ்வப்போது பாதை மாற்ற பயன்படுத்தப்பட்ட சிறிய எஞ்சின்தான் இந்த ப்ரோபல்ஷன் மாடுல். பூமியின் வட்டப்பாதையில் இருந்து நிலவில் இருந்து 100 கிமீ தூரம் உள்ள வட்டப்பாதை வரை சந்திராயன் 3வை கொண்டு சென்றது இந்த ப்ரோபல்ஷன் மாடுல்தான். இது ஒரு பாக்ஸ் போல கீழே ராக்கெட் போன்ற திரஸ்டர்கள் கொண்ட அமைப்பு ஆகும். இதில் திரஸ்டர்களுக்கு சார்ஜ் கொடுப்பதற்காக சோலார் பேனல் இருக்கும். இதில்தான் லேண்டர் பொருத்தப்பட்டு இருக்கும். அதன் உள்ளே ரோவர் இருக்கும். இதில் லேண்டர், ரோவர் தவிர்த்து ஷேப் - Spectro-polarimetry of Habitable Planet Earth (SHAPE) எனப்படும் அமைப்பும் உள்ளது. இது பூமியின் அளவை குறித்த ஆய்வை நிலவின் வட்டப்பாதையில் இருந்து மேற்கொள்ளும்.

சந்திராயன் 3 லேண்டர்: சந்திரயான்-3 விண்கலத்தில் விக்ரம் (சமஸ்கிருதத்தில் "வீரம்") என்ற பெயரிடப்பட்ட லேண்டர் உள்ளது. இது பாக்ஸ் போன்ற தோற்றம் கொண்டது ஆகும். உள்ளே இருக்கும் பிரக்யான் ரோவரை நிலவில் களமிறக்க இதுதான் உதவும். இது தரையிறங்கும் பகுதியில் வெப்ப கடத்துத்திறனைப் பதிவுசெய்யவும் மற்றும் நிலநடுக்கங்களை உணரவும் உதவும். இதில் நான்கு கால் பகுதிகள் இருக்கும். அதேபோல் நான்கில் பக்கமும் திரஸ்டர்கள் இருக்கும். இது 800 நியுட்டன் பவரை கொடுக்க கூடியது.
ரோவர்: இதன் உள்ளேதான் சந்திராயன் 3ன் ரோவர் இருக்கும். பிரக்யான் (சமஸ்கிருதத்தில் "ஞானம்"), விக்ரமில் இருந்து வெளியே வரும். அதன் உள் கேமராக்கள் சந்திரனில் இருக்கும் தடங்கல்களை பார்த்து அதற்கு ஏற்ப கவனமாக நகர்ந்து செல்லும். இது லேண்டர் விக்ரமில் இருந்து விலகி சென்றாலும் எல்லா நேரமும் விக்ரமின் கண் பார்வையில் இருக்கும். நிலவின் தரைப்பகுதி, மண் பகுதியை இது ஆய்வு செய்யும்.
இது ஒரு சின்ன சோதனை கூடம் போலவே செயல்படும். இது நிலவின் மேல் பகுதி ஆய்வு, சாம்பிள் ஆய்வு, சாம்பிள் எடுத்து வைத்துக்கொள்வது, சில புகைப்படங்களை பூமிக்கு அனுப்புவது, உள்ளே இருக்கும் ஜியோலொஜிக்கல், கெமிக்கல் ஆகியவற்றை ஆய்வு செய்யும். இதில் மொத்தம் 6 சக்கரங்கள் இருக்கும்.
எப்படி களமிறங்கியது?: இன்று மாலை 5.45 மணிக்கு விக்ரம் லேண்டரின் உயரம் குறைக்கப்பட்டது. லேண்டர் மாடுல் நிலவை நோக்கி இறக்கப்பட்டது. ரப் பிரேக்கிங் மற்றும் ஆல்டிடியூட் ஹோல்ட் கட்டம் மூலம் இந்த விக்ரம் களமிறக்கப்பட்டது. இதில் 30 கிமீ உயரத்தில் இருந்து லேண்டர் கொஞ்சம் கொஞ்சமாக தரையிறக்கப்பட்டது. 11.5 நிமிடத்தில் விக்ரம் லேண்டர் 7.4 கிமீ உயரம் வரை கொண்டு வரப்பட்டது. 1.68km கிமீ / நொடி என்ற வேகத்தில் இந்த லேண்டர் களமிறங்கியது. அதன்பின் ஆல்டிடியூட் ஹோல்ட் கட்டம் மூலம் இதன் உயரம் 6.5 கிமீ உயரம் குறைக்கப்பட்டது.
அதன்பின் இதன் உயரம் மேலும் ஏஎல்எஸ் மூலம் ஆட்டோமேட்டிக் லேண்டிங் சிஸ்டம் மூலம் திரஸ்டர்கள் உதவியுடன் குறைக்கப்பட்டது. இந்த கட்டத்தில் விக்ரம் லேண்டர் ஆட்டோமேட்டிக் முறையில் இறங்கியது. இதில் இஸ்ரோ எந்த கமெண்டும் கொடுக்கவில்லை. 3 நிமிடங்கள் இது தொடர்ந்தது. 800 மீட்டர் உயரத்தை அடையும் அடையும் வரை கொண்டு செல்லப்பட்டது. அதன்பின் திரஸ்டர்கள் உதவியுடன் இதன் உயரம், வேகம் குறைக்கப்பட்டு ஏஎல்எஸ் மூலம் லேண்டர் மேலும் கீழே இறக்கப்பட்டது.
கடைசியாக 10 மீட்டர் உயரம் இருக்கும் வரை விக்ரம் உயரம் குறைக்கப்பட்டு வந்தது. இந்த பணிகளுக்கு இடையிலேயே கேமரா உதவியுடன் நிலவில் எங்கே இறங்க வேண்டும் என்று லேண்டர் கண்டுபிடித்தது. முதலில் கண்டுபிடிக்கப்பட்ட லோகேஷன் சரியில்லை என்பதால் இரண்டாவதாக மீண்டும் லோகேஷனை தேடியது. கடைசியில் கண்டுபிடித்த 10 மீட்டர் உயரம் வரை கொண்டு செல்லப்பட்ட லேண்டர் அங்கிருந்து ப்ரீ பாலிங் மூலம் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.
எப்படி நடந்தது?: சந்திரயான் 2 லேண்டரில் 5 திரஸ்டர்கள் இருந்தன. ஒன்று செயல் படமால் போனால் பாதுகாப்பிற்கு 5வதாக ஒரு திரஸ்டர் சந்திரயான் 2 லேண்டரில் இருந்தது. ஆனால் கூடுதல் திரஸ்டர்கள் இருப்பது கூடுதல் எடையை ஏற்படுத்தி விபத்திற்கு காரணமாக இருப்பதால் சந்திரயான் 3ல் உள்ள லேண்டரில் 4 திரஸ்டர்கள் மட்டுமே உள்ளன.
முன்பு சந்திராயன் 2ல் எல்லா திரஸ்டர்களும் ஒரே நேரத்தில் கீழே இறங்கும் போது இயங்கும். ஆனால் சந்திரயான் 3ல் முதலில் 2 திரஸ்டர்கள் செயல்படும். அவை செயல் இழக்கும் பட்சத்தில் மற்ற 2 திரஸ்டர்கள் இயங்கும். அப்படித்தான் இன்று திரஸ்டர்கள் திட்டமிடப்பட்டபடி இயங்கியது.
கேமரா இருக்கும்: முன்பு சந்திரயான் 2 சிக்னல்களை மட்டுமே பூமிக்கு அனுப்பும். இதை வைத்தே ரோவர் சரியாக செல்கிறதா இல்லையா என்பதை கண்டுபிடித்தோம். ஆனாலும் சிக்னல் போனால் ரோவருக்கு என்ன ஆனது என்று தெரியாது. மாறாக சந்திரயான் 3ல் கேமரா இருக்கும். இவை ஒவ்வொரு மீட்டருக்கும் புகைப்படம் எடுத்து அனுப்பும்.
இதனால் ரோவர் எங்கே செல்கிறது எப்படி செல்கிறது என்று தெரியும். அதோடு நிலவின் தரைப்பகுதியில் பெரிய கல் இருந்தால் ரோவரை தள்ளி நகர்ந்து தரையிறங்க வைக்க முடியும். கேமரா மூலம் ரோவரை இனி சிறப்பாக கண்காணிக்க முடியும். இந்த முறை சந்திரயான் 3ல் உள்ள சென்சார் மற்றும் கேமரா காரணமாக பாறைகளை தவிர்த்துவிட்டு சமதளத்தில் ரோவர் களமிறங்க முடியும். இதன் மூலம் நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை படைத்து உள்ளது.
எங்கே களமிறங்கும்?: நிலவின் தென் துருவப் பகுதியில் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் தரையிறங்கும். 2 கிமீ வேகத்திற்கும் குறைவாக இது தரையிறங்கும்.கடைசி 10 மீட்டரில் தொப்பென்று விழும் வகையில் இந்த விக்ரம் லேண்டர் தரையிறங்கும். தரையிறங்கிய பிறகு, லேண்டர் 14 பூமி நாட்களுக்கு (ஒரு சந்திர நாள்) மேற்பரப்பில் பொருட்களை இந்த ரோவர் சேகரிக்கும்.

சந்திரயான் 3 மிஷன் ப்ரொபல்ஷன் மாடுல்: 2148 கி.கி
லேண்டர் தொகுதி: 26 கிலோ ரோவர் உட்பட 1752 கிலோ
சந்திரயான் 3 மொத்த எடை: 3900 கிலோ
குறிக்கோள் என்ன?: சந்திரயான்-3 திட்டத்திற்கு இஸ்ரோ மூன்று முக்கிய குறிக்கோள்களை நிர்ணயித்துள்ளது.
லேண்டரை சரியாக நிலவில் தரையிறக்குதல்.
சந்திரனில் ரோவரின் நகரும் திறன்களைக் கவனித்து கண்காணித்தால்.
நிலவின் இரசாயன மற்றும் இயற்கை கூறுகள், மண், நீர் பண்புகளை ஆய்வு செய்தல்.
நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்தல்.
என்ன நடக்கும்?: நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்குவதை பற்றி பலரும் பேசி வரும் நிலையில்.. அது தரையிறங்கிய பின் என்ன நடக்கும் என்று இங்கே விளக்கி இருக்கிறோம்.
நிலவின் மேற்பரப்பில் லேண்டர் தரையிறங்கிய பிறகு, விக்ரமின் ஒரு பக்க பேனல் விரிவடையும், பிரக்யான் ரோவர் வெளியே வருவதற்கு ஒரு சரிவை உருவாக்கும். பிரக்யானின் சக்கரங்கள் மூவர்ணக் கொடி மற்றும் இஸ்ரோவின் லோகோவுடன் பொறிக்கப்பட்டுள்ளன. விக்ரமின் வயிற்றுப் பகுதியில் இருந்து பிரக்யான் வெளியே வந்து.. லேண்டரில் இருக்கும் பேனல் வழியாக சரிந்து ரோவர் வெளியே வரும். இதனால் பிரக்யான் உருளும் போது, சந்திர மேற்பரப்பில் மூவர்ணக் கொடி மற்றும் இஸ்ரோ லோகோவின் முத்திரைகளை பதித்து , இந்தியாவின் அடையாளத்தை உருவாக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications