3 மாதம் முன்பு கோவையில் நடந்த சம்பவம்.. வேலுமணிக்கு நெருக்கமான புள்ளியை தட்டித் தூக்கியது எப்படி?
சென்னை : கோவை அதிமுகவுக்குள் வலையை வீசி, நிர்வாகிகளை அள்ளி இழுத்து வருகிறார் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரான செந்தில் பாலாஜி. வேலுமணியின் கோட்டையான கோவைக்குள்ளேயே புகுந்து, அவருக்கு நெருக்கமானவர்களையே திமுகவுக்கு கொண்டு வருவது அதிமுகவினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
செந்தில் பாலாஜியின் கேம், வரும் நாட்களில் இன்னும் சூடுபிடிக்கும் என்கிறார்கள் கோவை வட்டார திமுகவினர். செந்தில் பாலாஜி கோவை பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டதுமே திமுக - அதிமுக அரசியல் ஆட்டம், வேலுமணி vs செந்தில் பாலாஜி என மாறிவிட்டது என்கிறார்கள்.
அதற்கேற்ப, அதிமுக வலுவாக உள்ள கோவையில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏக்கள், முன்னாள் எம்.பி என திமுக பக்கம் இழுத்து வருகிறார் செந்தில் பாலாஜி. நேற்று, ரியஸ் எஸ்டேட் புள்ளியும், வேலுமணிக்கு நெருக்கமானவருமான செந்தில் கார்த்திகேயனை திமுகவில் இணைத்துள்ளார்.

செந்தில் பாலாஜி கேம்
செந்தில் பாலாஜி, திமுகவிற்கு கொண்டு வந்திருக்கும் செந்தில் கார்த்திகேயன், மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவர். வேலுமணியே, கொங்கு மண்டல திமுகவிற்கு சிம்மசொப்பனமாக இருப்பவர். அவரால் தான், கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றி வாகை சூட முடியவில்லை. அப்படிப்பட்ட வேலுமணிக்கு நெருக்கமான முக்கிய புள்ளியையே தட்டித் தூக்கி இருக்கிறார் என்றால், கோவையில் செந்தில் பாலாஜியின் கேம், இனிதான் சூடு பிடிக்கப்போகிறது என்கிறார்கள் கோவை திமுகவினர்.

ஆகஸ்ட் சம்பவம்
அதற்கு உதாரணமாக ஒரு மேட்டரையும் சொல்கிறார்கள். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வர் ஸ்டாலின் கொங்கு மண்டலத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் அல்லவா? கிணத்துக்கடவில் அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், பொள்ளாச்சியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அந்தப் பொதுக்கூட்டத்தில், செந்தில் பாலாஜியின் ஏற்பாட்டில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ஆறுகுட்டி, முன்னாள் தேமுதிக எம்.எல்.ஏ பனப்பட்டி தினகரன், நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் என ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

அதே நாளில்
முதல்வர் ஸ்டாலின் கோவை மாவட்டத்தில் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அதே நாளில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் கோவைக்கு வருகை தந்திருந்தார். அதிமுகவினர் ஆயிரக்கணக்கானோர் திமுகவில் இணைந்த அதே நாளில் எடப்பாடி பழனிசாமி கோவை வந்தது கோவை புறநகர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் செந்தில் கார்த்திகேயன் இல்ல விழாவில் பங்கேற்பதற்காகத்தான். இந்த விழா முடிந்ததுமே மீண்டும் சென்னை கிளம்பினார் எடப்பாடி பழனிசாமி.

அடுத்த 3 மாதங்களில்
அந்தளவுக்கு எஸ்.பி.வேலுமணி உடனான நெருக்கத்தின் மூலம், எடப்பாடி பழனிசாமிக்கும் நெருக்கமானவராக இருந்தவர் செந்தில் கார்த்திகேயன். அவரைத்தான் அடுத்த 3 மாதங்களில் திமுகவிற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளார் செந்தில் பாலாஜி. வேலுமணி முகாமிற்குள்ளேயே புகுந்துவிட்டார் செ.பா, இனி கோவை அதிமுகவினர் கூண்டோடு திமுகவிற்கு படையெடுத்தாலும் ஆச்சர்யமில்லை என்கிறார்கள் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள்.

கோவை ஸ்வீப்
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவையின் 10 தொகுதிகளையும் திமுக இழந்த நிலையில், கோவையில் திமுகவை பலப்படுத்தும் பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது. செந்தில் பாலாஜியும், தனது சொந்த மாவட்டமான கரூரில் இருப்பதை விட அதிக நாட்கள் கோவையிலேயே இருந்து வருகிறார். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியை ஸ்வீப் செய்து, ஸ்டாலினிடமும் பாராட்டுப் பெற்றார் செ.பா.

பாதுகாத்த வேலுமணி
அதன்பிறகு அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை திமுக பக்கம் இழுக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ள செந்தில் பாலாஜி, முன்னாள் எம்எல்ஏக்கள் ஆறுக்குட்டி, கோவை செல்வராஜ், முன்னாள் எம்.பி நாகராஜன் ஆகியோரை திமுகவிற்கு கொண்டு வந்துள்ளார். சிட்டிங் அதிமுக எம்.எல்.ஏக்களை இழுக்கவும் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது. எனினும், கோவையின் 9 அதிமுக எம்.எல்.ஏக்களையும், 10வது எம்.எல்.ஏவான வேலுமணி, பொத்திப் பாதுகாத்தார்.

கிருபாலினி கார்த்திகேயன்
இந்நிலையில் தான், எஸ்.பி.வேலுமணிக்கும், சிங்காநல்லூர் எம்.எல்.ஏ கே.ஆர்.ஜெயராமுக்கும் மிகவும் நெருக்கமானவரான செந்தில் கார்த்திகேயனை திமுகவிற்கு இழுத்திருக்கிறார் செந்தில்பாலாஜி. செந்தில் கார்த்திகேயனின் மனைவி கிருபாலினி, கோவை மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளர் ரேஸில் இருந்தவர். அப்போதே கோவையின் முதல் பெண் மேயர் என்றெல்லாம் போஸ்டர் அடித்தனர் அவரது ஆதரவாளர்கள். ஆனால், தேர்தலில் அவரும் தோல்வியடைந்து, மாநகராட்சியையும் திமுக கைப்பற்றியது.

எப்படி இழுத்தார்
செந்தில் கார்த்திகேயனை செந்தில் பாலாஜி, எப்படி இழுத்தார் என்பது பற்றி கோவை வட்டாரத்தில் பரபரப்பாக அலசப்படுகிறது. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் செந்தில் கார்த்திகேயனுக்கு தொழில் ரீதியாக சில நெருக்கடிகள் ஏற்பட்டதாகவும், ஆளுங்கட்சியான திமுகவிற்கு வந்தால் அந்த சிக்கல்கள் இருக்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி வாக்குறுதி அளித்து, திமுகவிற்கு கொண்டு வந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

வேலுமணி கோட்டையில் ஓட்டை
எது எப்படியோ, ஒரே வாரத்தில் அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ கோவை செல்வராஜையும், முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான செந்தில் கார்த்திகேயனையும் திமுகவிற்கு கொண்டு வந்து சேர்த்துவிட்டார் செந்தில் பாலாஜி. ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கோவை செல்வராஜ் திமுகவிற்கு சென்றதில் மகிழ்ந்த எடப்பாடி தரப்பு, செந்தில் கார்த்திகேயனும் சென்றிருப்பதால் ஆடிப்போய் இருக்கிறதாம். எஸ்.பி.வேலுமணியும் தனது ஆதரவாளர்கள் திமுக பக்கம் டைவ் அடிக்காமல் தடுப்பதற்கான முயற்சிகளில் இறங்கி இருக்கிறாராம்.












Click it and Unblock the Notifications