நாடாளுமன்ற கூட்டத்தொடர்.. 5 எம்.பி.க்கள் டாப்.. அன்புமணி, வைகோ, ஜி.கே.வாசன் ஏகப்பட்ட ஆப்சென்ட்!
சென்னை: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் தமிழக ராஜ்யசபா எம்.பி.க்கள் எத்தனை நாட்கள் பங்கேற்றார்கள் என்பதை அலசுகிறது இந்த தொகுப்பு.
நடைபெற்று முடிந்த கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் 9 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திலிருந்து 18 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள நிலையில், குளிர்காலக் கூட்டத்தொடரில் அவர்களது வருகைப் பதிவேடு குறித்து இங்கே பார்க்கலாம்.

18 நாட்கள்
கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திட்டமிடப்பட்ட தேதிக்கு முன்னதாக அதாவது நேற்றுடன் கூட்டத்தொடர் நிறைவு செய்யப்பட்டது. மொத்தம் 18 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தொடரில் தமிழகத்திலிருந்து ராஜ்யசபா உறுப்பினர்களாக இருப்பவர்கள் எத்தனை நாட்கள் பங்கேற்றார்கள் என்பதை அறிய பலருகும் ஆர்வம் எழுந்திருக்கக்கூடும்.

மிக நன்று
அந்த வகையில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் முழுவதுமே ஒரு நாள் கூட ஆப்சென்ட் ஆகாமல் 18 நாட்களும் அவை நிகழ்வுகளில் கலந்துகொண்ட தமிழக எம்.பி.க்கள் 5 பேர் ஆவர். அதிமுக உறுப்பினர்களான நவநீதகிருஷ்ணன், விஜயகுமார், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், திமுக எம்.பி.க்களான தொ.மு.ச.சண்முகம், எம்.எம்.அப்துல்லா ஆகிய 5 பேரும் நாள் தவறாமல் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்று அந்தப் பதவிக்குரிய கடமையை செய்திருக்கின்றனர்.

நன்று
இவர்களுக்கு அடுத்தபடியாக கனிமொழி சோமு மற்றும் டி.கே.எஸ்.இளங்கோவன் 17 நாட்களும், வில்சன் மற்றும் திருச்சி சிவா ஆகியோர் 16 நாட்களும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டுள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக அந்தியூர் செல்வராஜ் 15 நாட்களும், வைகோ, ராஜேஷ்குமார், ஆகியோர் 14 நாட்களும் கூட்டத்தொடரில் பங்கேற்றிருக்கின்றனர். ஜி.கே.வாசன் 13 நாட்கள் ராஜ்யசபாவுக்கு சென்ற நிலையில், அதிமுக சீனியர் எம்.பியான தம்பிதுரை, பாமக எம்.பியான அன்புமணி ராமதாஸ் மற்றும் திமுக எம்.பி.என்.ஆர்.இளங்கோ ஆகியோர் குளிர்காலக் கூட்டத்தொடரில் 11 நாட்கள் மாநிலங்களவைக்கு சென்றுள்ளனர்.

சுமார்
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்ற 18 நாட்களில் அதிமுக எம்.பி. சந்திரசேகர் வெறும் 6 நாட்கள் மட்டுமே அட்டெண்டன்ஸ் போட்டிருக்கிறார். இதேபோல் திமுக சீனியர் எம்.பியான ஆர்.எஸ்.பாரதியும் வெறும் 8 நாட்கள் மட்டுமே மாநிலங்களவை பக்கம் சென்றிருக்கிறார். இவர்கள் இருவரை தவிர பெரும்பாலான தமிழக ராஜ்யசபா எம்.பி.க்கள் ஆப்சென்ட் ஆகாமல் கூட்டத்தொடரில் பங்கேற்று தங்கள் பதவிக்குரிய கடமைகளை செய்து முடித்திருக்கின்றனர்.

9 மசோதாக்கள்
நடைபெற்று முடிந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் 9 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் பெண்களின் திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்துவது தொடர்பான மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் சீர்த்திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக 3 வேளாண் சட்டங்கள் திரும்பப்பெற்றுக்கொண்டது இந்தக் கூட்டத்தொடரில் கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications