தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் எத்தனை பேர் இருக்காங்க? கணக்கெடுப்பு செய்ய ரெடியான தமிழக அரசு!
சென்னை: தொழில், உற்பத்தி, சேவைத்துறைகளில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்கும் தமிழ்நாட்டி, வெளிமாநில தொழிலாளர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்று கணக்கெடுக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 'தமிழகத்தில் பணியாற்றும் வெளிமாநிலத்தவர்கள்-2025' என்ற கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ள தமிழக அரசு இதற்காக டெண்டர் விட்டுள்ளது. அடுத்த 6 மாதத்தில் நடத்தி முடிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
நாட்டிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக, தொழில், உற்பத்தி, சேவைத் துறைகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. வேலைவாய்ப்புகளும் அதிகம் இருப்பதனால் தமிழகத்தில் பிற மாநில தொழிலாளர்களும் அதிகம் பணிபுரிந்து வருகிறார்கள். வெளி மாநிலங்களில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

வெளிமாநில தொழிலாளர்கள்
தமிழகத்தில் கட்டிட வேலை, சாலைகள் மற்றும் பாலங்கள் அமைக்கும் கட்டுமான பணிகள், உற்பத்தி நிறுவனங்கள், தொழிற்சாலைகளில், ஜவுளிக் கடைகள் என பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது போக பானிபூரி, சிற்றுண்டி உணவகங்களும் நடத்தி வருகிறார்கள். இப்படி தமிழகத்தில் பணிபுரிந்து வரும் வெளிமாநில தொழிலாளர்கள் எத்தனை பேர் உள்ளனர்? எங்கு தங்கியிருக்கிறார்கள்? எப்போது வந்தனர்? என்ன காரணத்திற்காக வந்தனர் என்பதை கணக்கெடுக்க தமிழக அரசு வெளிமாநில தொழிலாளர்கள் கணக்கெடுப்பை தொடங்க உள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு கடைசியாக நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, தமிழகத்தில் சுமார் 35 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவது தெரியவந்தது. தற்போது 15 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இந்த எண்ணிக்கை அப்படியே இரண்டு மடங்காக அதாவது 70 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தங்கி வேலை செய்து வருவார்கள் என்று கருதப்படுகிறது. எனவே தமிழக அரசு, முதல் முறையாக தொழிலாளர் துறை மூலம் 'தமிழகத்தில் பணியாற்றும் வெளிமாநிலத்தவர்கள்-2025' என்ற கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்து உள்ளது.
கல்வி, சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளன
மேலும் இதற்கான கணக்கெடுப்பை நடந்தும் நிறுவனத்தினை தேர்வு செய்ய டெண்டர் விடப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு கூறியிருப்பதாவது:- தமிழக பொருளாதாரத்தில் புலம் பெயர் தொழிலாளர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது. இந்த தொழிலாளர்கள் பெரும்பாலும் ஒப்பந்த அடிப்படையிலோ, தற்காலிக வேலை வாய்ப்பிலோ பணியாற்றுகிறார்கள். இதனால் வேலை நிலைத்தன்மை இல்லாததாக உள்ளது.
பல தொழிலாளர்கள் சிறிய இடங்களில் தங்கி, சுகாதார வசதி இல்லாமல், குறைந்த தர உணவு உண்டு வாழ்ந்து வருகின்றனர். அவர்களது குழந்தைகளின் கல்வி, சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளன. மாநில, மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டங்கள் இவர்களுக்கு முழுமையாக சென்று சேர வாய்ப்பு இல்லை. அடிப்படை நலத் திட்டங்களின் பயனாளிகளா? என்பது குறித்தும் அரசிடம் தெளிவான ரவுகள் இல்லை.
பாதுகாப்பை மேம்படுத்த
எனவே இந்த கணக்கெடுப்பு மூலம், இவர்கள் எந்த வகை வேலைகளுக்காக வருகின்றனர்? எப்படி தமிழ்நாட்டுக்கு வந்தார்கள்? யார் மூலம் வந்தனர்? குடிபெயர்வு வரலாறு என்ன? அவர்கள் தினமும் எவ்வளவு மணி நேரம் வேலை செய்கின்றனர், வேலை இட வசதிகள், குடியிருப்பு, உணவு, பிற வாழ்வுச் செலவுகள் போன்றவற்றை அறிந்துகொள்ள இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு மதிப்பீடு செய்யப்படும்.
வெளி மாநில தொழிலாளர்களின் வேலை, வாழ்வு, சுகாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை தொழிலாளர் துறை அரசுக்கு வழங்கும். இந்த கணக்கெடுப்பு கட்டுமானத்துறையில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் பிற துறைகளில் உள்ள தொழிலாளர்கள் என இருவகைப்படுத்தி 6 மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications