கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி Lok Poll சார்பில் புதிய கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் திமுக 181முதல் 189 தொகுதிகளில் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அதிமுக கோட்டையாக இருக்கும் கொங்கு மண்டலம் இந்த முறை திமுக வசம் செல்லும் என கூறப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பின்படி மண்டல வாரியாக எந்தெந்த கட்சிகள் எவ்வளவு இடங்களில் வெல்லும் என்ற விவரத்தை இங்கு பார்க்கலாம்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. மே 4 ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, சீமானின் நாம் தமிழர், விஜயின் தமிழக வெற்றிக் கழகம், ராமதாஸ் - சசிகலா கூட்டணி என்று 5 முனை போட்டி நிலவி வருகிறது.

இதில் நேரடி போட்டி என்பது திமுக கூட்டணி - அதிமுக கூட்டணி இடையே தான் உள்ளது. ஆட்சியை தக்கவைக்கும் முனைப்பில் திமுகவும், மீண்டும் ஆட்சியை அமைக்க வேண்டும் என்று அதிமுகவும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. அதேபோல் தனது பலத்தை நிரூபிக்க நாம் தமிழர் கட்சியின் சீமான், அரசியலுக்கு புதிதாக வருகை தந்துள்ள விஜய் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
'லோக்போல்' கருத்து கணிப்பு
இந்நிலையில் தான் லோக்போல் (Lok Poll) சார்பில் தமிழக சட்டசபை தேர்தலையொட்டி கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு தொகுதிக்கும் சுமார் 500 பேர் என்ற அடிப்படையில் மொத்தம் 1,17,000 பேரிடம் கூறிய கருத்துகளின் அடிப்படையில் தற்போது அதன் முடிவுகள் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மண்டலம், டெல்டா மண்டலம், தெற்கு மண்டலம் உள்ளிட்டவை திமுகவின் கோட்டையாக உள்ளது. மேற்கு மண்டலம் (கொங்கு மண்டலம்) மட்டும் அதிமுகவின் கோட்டையாக உள்ளது. இந்நிலையில் தான் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தில் திமுக அதிக தொகுதிகளை வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை
அதன்படி மேற்கு மண்டலத்தில் (கொங்கு மண்டலம்) இந்த முறை திமுக கூட்டணி 44 முதல் 46 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக வெறும் 9 - 10 தொகுதிகளிலும் , தவெக 2 - 3 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என கூறப்பட்டுள்ளது. மேற்கு மண்டலத்தை எடுத்து கொண்டால் தருமபுரி, திண்டுக்கல், கோயம்புத்தூர், கரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் உள்ளன.
இதில் சேலம் என்பது எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமாகும். கடந்த முறை கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில் அதிமுக 9 இடங்களிலும், பாஜக ஒரு இடத்திலும் வென்ற நிலையில் தற்போது கொங்கு மண்டலம் முழுமையாகவே 9 முதல் 10 தொகுதிகளிலும் மட்டுமே அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அதிமுகவிற்கு பேரதிர்ச்சி செய்தியாக அமைந்துள்ளது. கொங்கு மண்டலத்தில் திமுக பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை, முதல்வர் ஸ்டாலின் நியமித்துள்ள நிலையில் அதற்கு கைமேல் பலன் கிடைக்கும் என்று இந்த கருத்து கணிப்பு முடிவு உறுதி செய்துள்ளது.
சென்னை + வடக்கு மண்டலம்
அதேபோல் வடக்கு மண்டலம் என்பது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்டவற்றை உள்ளடக்கியதாகும். இந்த வடக்கு மண்டலத்தில் திமுக 53 முதல் 56 தொகுதிகளில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலத்தில் அதிமுக 11 முதல் 12 தொகுதிகளிலும், விஜயின் தவெக 2 முதல் 3 தொகுதிகளிலும் வெல்லும் என கூறப்பட்டுள்ளது. இந்த மண்டலத்தில் கடந்த 2021 சட்டசபை தேர்தலிலேயே அதிமுகவை விட திமுக தான் அதிக தொகுதிகளை வென்றது. தற்போதும் அதேபோல் திமுக தனது செல்வாக்கை தக்க வைக்கிறது.
டெல்டா மண்டலம்
மேலும் தமிழகத்தில் மத்திய மண்டலம் அல்லது டெல்டா மண்டலம் என, அரியலூர் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் அழைக்கப்படுகிறது. இந்த மண்டலத்தில் டெல்டாவை எடுத்து கொண்டால் திமுக கூட்டணி 39 - 40 தொகுதிளிலும், அதிமுக கூட்டணி 9 -10 தொகுதிகளிலும், தவெக 2-3 தொகுதிகளிலும் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு மண்டலம்
தெற்கு மண்டலத்தை எடுத்து கொண்டால் கன்னியாகுமரி மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்கள் உள்ளன. இந்த மண்டலத்தில் திமுக கூட்டணி 45 - 47 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 9- 10 தொகுதிகளிலும், தவெக 2 தொகுதிகளிலும் வெல்லும் என கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
மீண்டும் திமுக ஆட்சி
அதன்படி, நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும். திமுக கூட்டணி மொத்தமாக 181முதல் 189 தொகுதிகளில் வெற்றி பெறும், அதிமுக கூட்டணி 38 முதல் 42 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. மேலும் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 8 முதல் 10 இடங்களில் மட்டுமே வெல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என 'லோக்போல்' கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications