Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

EXCLUSIVE: தமிழ்நாட்டின் தனித்துவ தீபாவளி..இந்துக்களுடன் முஸ்லிம்,கிறிஸ்துவர்கள் கொண்டாடுவது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்க, பலகாரம் சுவைக்க மத நல்லிணக்கம் மணக்க தித்திக்கும் தீபாவளி பண்டிகையை இந்துக்களுடன் சேர்ந்து தாங்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பது பற்றி இஸ்லாமிய, கிறிஸ்துவ மதத்தினர் தெரிவித்த சுவாரஸ்ய கருத்துக்களை பார்ப்போம்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்த பேராசிரியரும் எழுத்தாளருமான இப்ராஹிம் அன்சாரி தெரிவிக்கையில், "நம்முடைய சகோதர உடன்பிறப்புகள் தீபாவளி என்ற அவர்களுடைய முக்கியமான பண்டிகையை கொண்டாட இருக்கிறார்கள். இதை பற்றி பல்வேறு புராண இதிகாச காரணங்கள் இருந்தாலும், ஏற்பது ஏற்காதது என்ற விவாதங்கள் ஒருபக்கம் இருந்தாலும், நம்முடைய தொப்புள் கொடி உறவுகளான சகோதரர்கள், தங்களின் பண்டிகைகளிலேயே, அதிக செலவு செய்து மிகுந்த மகிழ்ச்சியோடு குடும்பங்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடும் தருணமாக இது இருக்கிறது.

How Muslims and Christians celebrate Diwali with Hindus in Tamilnadu

நமதூரில் காலம் காலமாக இந்த பண்டிகை நாளில் அவர்கள் உண்ணக்கூடிய உணவு வகைகளை நமக்கும் அளிக்கிறார்கள். நாமும் அந்த கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும் என மனதார விரும்புபவர்களை சிறு வயதில் இருந்தே பார்த்துக்கொண்டு இருக்கிறேன். முஸ்லிம் வீடுகளுக்கு, சகோதரர்கள் வீடுகளில் இருந்து பலகாரங்கள் வருவதும், அதேபோல் நம்முடைய பெருநாள் நிகழ்வுகளில் நமது வீட்டில் இருந்து அவர்களுக்கு உணவு வகைகளை வழங்குவதும் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விசயமாக உள்ளது. எனவே இது வரவேற்கப்பட வேண்டும்.

நமது சகோதரர்கள், நம்முடன் படிப்பவர்கள், நம்முடன் தொழில் செய்பவர்கள், நமது கடை வாடிக்கையாளர்கள், ஒவ்வொரு விசயங்களுடனும் நம்மோடு இணைந்து பணியாற்றக்கூடிய தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பட்டவர்களோடு இணைந்து வாழக்கூடிய நல்ல சூழல் இங்கு உள்ளது. குறிப்பாக சமூக நல்லிணக்கத்தில் நமது ஊர் சிறந்து விளங்குகிறது. எனவே நம்முடைய தொப்புள் கொடி உறவுகளுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்களை மனதார தெரிவித்துக்கொள்கிறோம். அவர்கள் பொருளாதார சிரமங்கள் இன்றி சிறப்பான முறையில் புத்தாடை அணிந்து குழந்தைகள், உறவு பந்தங்களோடு கொண்டாடி மகிழ வேண்டும் என வாழ்த்துகிறேன்" என்றார்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் நெப்போலியன் தீபாவளி பண்டிகை தொடர்பான தன்னுடைய கருத்துக்களை நம்மிடையே பகிர்ந்துகொண்டார். அதில், "நான் பட்டுக்கோட்டையில் வசித்து வருகிறேன். நான் கிறுத்துவ சமயத்தை சேர்ந்தவன். எங்கள் ஊரில் மத வேற்றுமை என்பதே கிடையாது. மாமா மச்சான், அண்ணன் தம்பி என்று ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். எங்கள் ஊர் பட்டுக்கோட்டை இந்துக்களால் போற்றப்படும் காவல் தெய்வம் நாடி அம்மன். இந்த திருவிழா ஒரு மாதம் நடக்கும். அனைவரும் ஒற்றுமையாக கொண்டாடுவோம்.

How Muslims and Christians celebrate Diwali with Hindus in Tamilnadu

பட்டுக்கோட்டை அருகே வீரக்குறிச்சி என்ற ஊரில் கிறுத்தவர்களின் புனித தலமாகிய புனித அந்தோனியார் கோவில் திருவிழாவின் போது அனைவரும் வேற்றுமை இன்றி கொண்டாடுவோம். இஸ்லாமியர்களின் பண்டிகைளாகிய ரம்ஜான் பக்ரித்தை அனைவரும் ஒற்றுமையாக கொண்டாடுவோம். அவர்களின் பிரியாணி மறக்க முடியாத ஒன்றாக இருக்கும்‌. இஸ்லாமியர்களின் விருந்தோம்பல் தனி சிறப்பு. இருள் நீங்கி ஒளிரும் தீப திருவிழாயாகிய தீபாவளி என்றால் ஒரு சிறப்பான கொண்டாட்டம். நரகாசூரன் கிருஷ்ணனிடம் தன் இறந்த நாளை சிறப்பு செய்ய வேண்டும் என்று கேட்க இறைவன் அதற்கு இசைந்து இது கொண்டாடப்படுகிறது.

பண்டிகையின் போது இந்துக்களால் படைத்து கொடுக்கப்படும் பட்சணங்களுக்காக காத்திருப்பது ஒரு இன்பம். ஒரு தெரு என்று எடுத்து கொண்டால் அங்கு வசிக்கும் முஸ்லிம் கிருத்துவர்கள் வெகு சிலரே. அந்த தெருவில் உள்ள அனைத்து இந்துக்களும் தங்களுடைய வாழ்த்துகளையும் சந்தோசத்தையும் இனிப்பு கொடுத்து பகிர்ந்துகொள்வார்கள். பட்டாசுகளை மத வேறுபாடின்றி ஒவ்வொரு வீட்டிலும் வெடித்து கொண்டாடுவர்கள்‌. துன்பம் நீங்கி இன்பம் வாழ்வில் கொண்டாடப்படும் இனிய பண்டிகை. மத வேறுபாடின்றி எங்கள் ஊரில் கொண்டாடப்படும் பண்டிகை.ஜெய்ஹிந்." என்றார்.

இதுகுறித்து தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த முஹம்மது சாலிஹ் தெரிவிக்கையில், "இந்து சகோதருடன் 35 வருடங்களை தாண்டி நாங்கள் நட்போடு பழகி வருகிறோம். அதிராம்பட்டினம் எங்களது ஊர். இஸ்லாமியர்கள் பெருமளவில் வாழும் இங்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். எனது தந்தையின் ஆசிரியரான நாடிமுத்து வாத்தியார் அவர்களின் குடும்பமும், எங்கள் குடும்பமும் ஒரு தலைமுறையை கடந்து நட்புடனும், சகோதரத்துடனும் பழகி வருகிறோம்.

How Muslims and Christians celebrate Diwali with Hindus in Tamilnadu

பெருநாள் அன்று நாங்கள் உணவு கொடுப்பதும், அதே போல் தீபாவளி அன்று அவர்கள் எங்களுக்கு உணவு கொடுப்பதும் வழக்கமாக உள்ளது. மதத்தால் வேறுபட்டாலும் உடன் பிறவா சகோதரர்களாகவே இன்று வரை இருந்து வருகிறோம், இன்ஷா அல்லாஹ் இனியும் இருப்போம். மத பிரிவினை வாதிகள் ஆயிரம், ஆயிரம் வன்மத்தை கக்கினாலும், எங்களை போன்றோரின் ஒற்றுமை மேலும் அதிகரிக்குமே தவிர, குறையாது." என்றார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்த கிறிஸ்டி தெரிவிக்கையில், "தீபாவளியை இந்து பண்டிகை என்று சொல்வதை விட இந்திய பண்டிகை என்று சொல்வது பொருத்தமானதாக இருக்கும். தீபாவளியை ஒவ்வொரு ஊரிலும் வெவ்வேறு காரணங்களுக்காக மக்கள் கொண்டாடுகின்றனர். தீபாவளியை இந்துக்கள் மட்டுமின்றி மற்ற சமுதாயங்களை சேர்ந்தவர்களும் கொண்டாடுகிறார்கள். காரணம் பெரும்பான்மை சமுதாயத்தினரால் கொண்டாடப்படும் பண்டிகை என்பதால் கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் மத்தியிலும் அதன் தாக்கம் உள்ளது.

How Muslims and Christians celebrate Diwali with Hindus in Tamilnadu

தீபாவளி வணிகம் மிகவும் முக்கியமானது. தீபாவளி என்றாலே பட்டாசுகளையும், இனிப்புகளையும் தவிர்க்க முடியாது. அதை விற்பனை செய்பவர்கள் இந்துக்கள் மட்டுமில்லை. எல்லா மதத்தவர்களும் அவற்றை விற்கின்றனர். தீபாவளியை முன்னிட்டு போடப்படும் பண்டிகைகால பட்டாசு கடைகளால் பொருளாதார ரீதியாக பலர் பயனடைகிறார்கள். அனைத்து மதத்தினருக்கும் இதனால் லாபம். அதேபோல் தீபாவளி என்றால் நம் நினைவுக்கு வருபவை கறிக்கடைகள். கறி வியாபாரத்தை எடுத்துக்கொண்டால் இந்துக்களை விட முஸ்லிம்கள், கிறிஸ்துவர்களே அதிகம் செய்கிறார்கள். எனவே அவர்களுக்கு அதில் நல்ல வருவாய் கிடைக்கிறது.

எனவே 3 மதத்தினருக்கும் இது முன்னேற்றம் தரக்கூடிய ஒரு பண்டிகையாக உள்ளது. அதேபோல் பட்டாசுகள் அனைவராலும் விரும்பப்படுபவை. தீபாவளியை கொண்டாடாதவர்களும் கூட பட்டாசு வெடிக்கும்போது அதை ரசித்து பார்ப்பார்கள். தீபாவளி பண்டிகை வெளியில் அனைவரையும் உற்சாகப்படுத்தும் ஒன்றாக உள்ளது. எனவே மதங்களை கடந்து கொண்டாடப்படும் பண்டிகையாக இது இருந்து வருகிறது. மதங்கள் மக்களை பிரிக்கும் தன்மை கொண்டதாக இருந்தாலும் தீபாவளி அனைவரையும் சேர்க்கும் வகையில் உள்ளது.

எப்படி கிறிஸ்துவ பண்டிகையான புத்தாண்டு அனைவருக்குமான பண்டிகையாக உள்ளதோ, அதேபோல் தீபாவளி இந்தியாவில் அனைத்து மதத்தினருக்குமான பண்டிகையாக உள்ளது. சிறுவயதில் தீபாவளிக்கு புத்தாடைகளை நாங்கள் அணிந்தது இல்லை. ஆனால், அந்த வயதில் எனது உறவினர்களுடன், "தீபாவளி வருகிறது, புத்தாடை வாங்க வேண்டும்." என பேசிக்கொள்வோம். பட்டாசு வெடிப்பதை பற்றி பேசுவோம். பக்கத்து வீட்டில் இருந்து வரும் பலகாரங்களுக்காக காத்திருப்போம். என்னதான் மதங்கள் வேறாக இருந்தாலும் தீபாவளி மீதான எதிர்பார்ப்பு இருந்துகொண்டே இருக்கும். இந்து மத நம்பிக்கைகளை முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் ஏற்காவிட்டாலும், அவர்களின் சமூக, கலாச்சார நிகழ்வுகளில் கலந்துகொள்ளலாம் என்பதில் தெளிவாக உள்ளனர்." என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+