"பொதுச்செயலாளர்..!" அதிரடியாக காய் நகர்த்தும் எடப்பாடி.. அமைதியாக முட்டுக்கட்டை போட முயலும் ஓபிஎஸ்?
சென்னை: அதிமுகவில் உட்கட்சி குழப்பம் தொடரும் நிலையில், எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் என இரு அணிகளும் கட்சியை கைப்பற்றும் முயற்சியில் இறங்கி உள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னரே அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் நடந்தது. அதன் பின்னர் ஒரு வழியாக அது எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் என இரட்டை தலைமையின் கீழ் வந்தது.
இரட்டை தலைமையின் கீழ் அதிமுக பெரியளவில் வெற்றி பெற முடியவில்லை. மக்களவை தேர்தல் தொடங்கி ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரை அனைத்திலும் மோசமான தோல்வியையே எதிர்கொண்டது.

அதிமுக
இந்தச் சூழலில் தான் ஒற்றை தலைமை என்ற பேச்சு கட்சிக்குள் எழுந்தது. இது தொடர்பாக ஜூன் மாதம் நடைபெற்ற பொதுக்குழுவிலேயே தீர்மானம் நிறைவேற்ற எடப்பாடி போட்ட பிளானை முறியடித்தார் ஓபிஎஸ்.. இருப்பினும், அதன் பின்னர் சில நாட்களிலேயே ஜூலை மாதம் மீண்டும் பொதுக்குழுவைக் கூட்ட அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்வானார். மேலும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்தே ஒரே அடியாக நீக்கப்பட்டனர்.

ஓபிஎஸ்
இந்த பொதுக்குழுக் கூட்டத்திற்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கிலும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. சென்னை ஐகோர்டின் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், அந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது. ஓபிஎஸ் கூட்டுத் தலைமை என்று கோரிக்கை விடுத்தாலும், அதைத் திட்டவட்டமாக மறுக்கும் எடப்பாடி, ஒற்றை தலைமை என்பதில் மிக உறுதியாக உள்ளார்.

எடப்பாடி
கட்சிக்குள் தனது செல்வாக்கை அதிகரிக்கும் அதேநேரம், கட்சியின் பொதுச்செயலாளராகத் தேர்வாகவும் சத்தமில்லாமல் நடவடிக்கை எடுத்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. தற்போது எடப்பாடி இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள நிலையில், விரைவில் பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என்பதே அவரது திட்டம். இதற்காகப் பொதுச்செயலாளர் தேர்தலை விரைந்து நடத்தத் திட்டமிட்டு வருகின்றனர். இதற்காகப் பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கும் பணி ஒரு பக்கம் தனியாக நடந்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

பிளான்
மொத்தம் 2,600 பொதுக்குழு உறுப்பினர்கள் அதிமுகவில் உள்ள நிலையில், அதில் சுமார் 2,300க்கும் மேற்பட்டோர் எடப்பாடிக்கு ஆதரவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்களிடம் கையெழுத்து வாங்கி மிக விரைவில் அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தத் திட்டமிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. சமீபத்தில் அவர் டெல்லி சென்றதும் இது தொடர்பான விவகாரத்தில் தானாம்.

தடுக்கும் முயற்சி
இருப்பினும், டெல்லி தலைமை எடப்பாடிக்கு கிரீன் சிக்னல் கொடுக்கவில்லை. அதிமுக விவகாரத்தில் தலையிடப் போவதில்லை என்று கூறிவிட்டதாகத் தெரிகிறது. இருந்தாலும் அப்செட் ஆகாமல் மிக விரைவில் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தும் பிளானில் இறங்கி உள்ளார் எடப்பாடி. ஆனால், எடப்பாடியின் இந்த முயற்சியைத் திரை மறைவில் தடுக்கும் பணியில் இறங்கி இருக்கிறார் ஓபிஎஸ்!

என்ன திட்டம்
அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் என்றும் அந்த இடத்தில் எடப்பாடியை எப்படி வைக்க முடியும் என்று அதிமுக அனைத்து மாவட்ட நிர்வாகிகளிடம் ஓபிஎஸ் தரப்பு போட்டுப் பேசி வருகிறது. அதேபோல நீதிமன்றத்தில் பொதுக்குழு தொடர்பான வழக்கு உள்ளதால் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தக் கூடாது என்ற விஷயத்தை எழுப்பத் திட்டமிட்டு வருகிறது ஓபிஎஸ் தரப்பு.

பலன் தருமா
மேலும், தமிழ்நாடு முழுக்க உள்ள தனது ஆதரவாளர்கள் மற்றும் அதிமுக தொண்டர்களைச் சந்தித்தும் இந்த விவகாரத்தை விளக்க உள்ளார் ஓபிஎஸ். ஜெயலலிதா இருந்த இடத்தில் எடப்பாடியை அமர வைப்பது எந்த விதத்தில் நியாயம் என்பதே ஓபிஎஸ் தொண்டர்களிடம் முன்வைக்கும் வாதமாக உள்ளது. ஒரு பக்கம் விரைவில் கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பிளான் போடும் நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போடும் முயற்சியில் இறங்கி உள்ளது ஓபிஎஸ் தரப்பு.












Click it and Unblock the Notifications