கையில் ரத்த கறை.. ஆவேசமாக வெளியே வந்த இளைஞர்.. காவலர்கள் சூழ்ந்ததும் செய்த காரியம்! ஷாக் சம்பவம்
சென்னை: கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே மருத்துவரைத் தாக்கிய இளைஞர் அதன் பிறகு என்ன செய்தார்.. தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியைக் காவலர்கள் எப்படிக் கண்டுபிடித்தனர் என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு அரசு மருத்துவமனையில் இன்று காலை அதிர்ச்சியளிக்கும் ஒரு சம்பவம் நடைபெற்றது. அங்கு மருத்துவர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார்.

இதனால் காலையில் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே தாக்குதல் நடத்திய அந்த இளைஞர் குறித்தும் அவர் மருத்துவரைத் தாக்கிய பிறகு என்ன செய்தார் என்பது குறித்தும் சில ஷாக் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கத்திக்குத்து: கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு அரசு மருத்துவமனை இன்று வழக்கம் போல பரபரப்பாகச் செயல்பட்டு வந்தது. நோயாளிகள் பலரும் சிகிச்சைக்காக வந்திருந்த நிலையில், திடீரென கேன்சர் நோய் பிரிவில் அலறல் சத்தம் கேட்டது. அங்கிருந்த செவிலியர்கள், நோயாளிகள் திடீரென கத்தினர். அப்போது தான் புற்று நோய் பிரிவின் சிறப்பு மருத்துவரான பாலாஜியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த மருத்துவர் அப்படியே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவரை மீட்ட மருத்துவர்கள் அதே மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், இப்போது மயக்க நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. கத்திக்குத்து சம்பவத்தில் மருத்துவரின் கழுத்து, தலை உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
போராட்டம் அறிவிப்பு: மருத்துவரைக் கத்தியால் குத்திவிட்டு வெளியே செல்ல முயன்ற நபரை மருத்துவ ஊழியர்களும் அங்கிருந்த மருத்துவமனை காவலர்களும் பிடித்தனர். அவர்கள் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இந்தச் சம்பவம் மாநிலம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க என்று பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். இதற்கிடையே கத்திக்குத்து சம்பவத்திற்குப் பிறகு என்ன நடந்தது என்பது குறித்து வீடியோக்கள் வெளியாகியுள்ளது.
என்ன நடந்தது: அதாவது மருத்துவரைக் கத்தியால் குத்திவிட்டு அந்த நபர் வெளியே வருகிறார். அதில் அந்த நபரின் கையில் கத்தியும் ரத்த கறையும் இருக்கிறது. அந்த நபர் வெளியே வந்த உடனேயே பலரும் அலறத் தொடங்கிவிட்டனர். இதனால் அங்கிருந்த மருத்துவமனை பாதுகாவலர்கள் அவரை பிடிக்க வந்தனர். அப்போது நடந்து செல்லும் போதே திடீரென ஓரமாகச் சென்ற அந்த நபர் கத்தியை வராண்டா அருகே போட்டுவிட்டுச் செல்கிறார். அதன் பின்னர் கொஞ்ச தூரம் சென்ற பிறகே மருத்துவமனை ஊழியர்களும் பாதுகாவலர்களும் சேர்ந்து அந்த நபரைப் பிடிக்கிறார்கள்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கத்தியால் குத்திய நபரின் பெயர் விக்னேஷ் என்பது தெரிய வந்தது. அவரது தாய்க்கு கேன்சர் நோய் இருந்த நிலையில், அதற்கு மருத்துவர் தவறாகச் சிகிச்சை நடத்தியதாக நினைத்து கத்தியால் குத்தியுள்ளார். இந்த விக்னேஷ் கடந்த 6 மாதமாகவே தனது தாய்க்கு இங்கு தான் சிகிச்சை பெற்று வந்து இருக்கிறார். இதன் காரணமாகவே அந்த நபர் காலையில் மருத்துவமனைக்கு வந்து மருத்துவரிடம் பேசும் போது யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை.
கத்தி மீட்பு: போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மருத்துவமனையில் வராண்டா அருகே விக்னேஷ் கத்தியை வீசியதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அங்குச் சென்ற காவலர்கள் அந்த கத்தியைப் பத்திரமாக எடுத்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications