Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேர்தல் பிரச்சாரம் ஸ்டார்ட்.. ஆளுநர் ரவி செயலால்.. பாஜகவிற்குத்தான் சிக்கல்? பாயிண்டை பிடித்த திமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ரவி உரையை நிகழ்த்தாமல் வெளியேறியது பெரிய விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு மீது கடும் புகார்களை ஆளுநர் வழங்கி உள்ளார். அவரின் செயல் தேர்தல் நேரத்தில் பாஜகவிற்கு எதிராக திரும்பலாம் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ஆர். என் ரவி தனது உரையை புறக்கணித்து வெளியேறி உள்ளார். நடப்பு ஆண்டில் முதல் சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கிய நிலையில், தேசிய கீதம் இசைக்கப்படாததால், தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்தார்.

Governor Rn ravi

இதைத்தொடர்ந்து, சட்டமன்ற வெளிநடப்பு குறித்து ஆளுநர் மாளிகை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் ஆளுநரை உரையாற்றவிடவில்லை, ஆளுநர் ரவி உரையாற்றியபோது மைக் ஆஃப் செய்யப்பட்டதாகவும், ஆளுநர் உரையில் பல ஆதாரமற்ற கூற்றுகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவிற்கு எதிராக திரும்பும்

ஆளுநர் ரவியின் இந்த செயல்.. அவரின் தரப்பு நியாயங்கள் அவருக்கு சரியானதாக இருந்தாலும்.. அரசியல் ரீதியாக பாஜகவிற்கு இது எதிராக திரும்பலாம் என்று கூறப்படுகிறது.

அதன்படி, ஏற்கனவே ஆளுநர் ஒருமுறை தமிழக அரசின் முத்திரையை புறக்கணித்ததாக புகார் வைக்கப்பட்டது. அதேபோல் தமிழ்நாடு என்ற சொல்லை எதிர்த்து பேசியதும் சர்ச்சையானது. தமிழகம் என்று பயன்படுத்தும் வகையில் ஆளுநர் ஆர். என் ரவி பேசியது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

அந்த கருத்துக்கள் எல்லாம் கடந்த லோக்சபா தேர்தல் நேரத்தில் கடும் விவாதங்களுக்கு உள்ளானது. முக்கியமாக தமிழ்நாடு முன்னேற்றம் குறித்து ஆளுநர் பேசிய சில கருத்துக்களும் விமர்சனங்களுக்கு உள்ளானது. தேர்தல் களத்திலும் இந்த கருத்துக்கள் எதிரொலித்தது.

இப்படிப்பட்ட நிலையில்தான் ஆளுநர் ரவி இப்போது மீண்டும் சட்டசபையில் வெளிநடப்பு செய்திருப்பது பாஜகவிற்கு எதிராக செல்லும் சூழல். ஆளுநர் தமிழ்த்தாய் வாழ்த்தை எதிர்க்கிறார் என்று ஆளும் திமுக வாதங்களை வைக்கலாம்.. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படுகிறார் என்றும் வாதம் வைக்கலாம். இதெல்லாம் திமுகவிற்கு சாதகமாக மாறும்.

அதோடு அதிமுக, தவெக இதை தட்டி கேட்கவில்லை என்றும் கூட திமுக வாதங்களை வைக்கலாம். இதெல்லாம் களத்தில் பாஜகவிற்கு எதிராக திரும்பும் சூழல்கள் உள்ளன.

ஆளுநர் தமிழ்நாடு விமர்சனம்

ஆளுநர் ஆர்.என். ரவியின் கருத்துகளும் தமிழகப் பொருளாதார யதார்த்தமும்: ஒரு விரிவான பார்வை சென்னையில் பான் ஐஐடி (Pan IIT) முன்னாள் மாணவர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த 'பாரதத்திற்கான தொழில்நுட்பம் 2026' (Technology for Bharat 2026) உச்சிமாநாட்டில் உரையாற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மாநிலத்தின் பொருளாதாரம் குறித்து மிகவும் வெளிப்படையான மற்றும் விமர்சன ரீதியான கருத்துகளை முன்வைத்தார். ஆனால் புள்ளி விவர ரீதியாக அவரின் கருத்துக்கள் சரியானதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

ஆளுநர் ரவி தனது உரையில், தமிழ்நாடு வியக்கத்தக்க அடிப்படைக் கட்டமைப்புகளைக் கொண்டிருந்தாலும், அதன் வளர்ச்சி வேகம் "திருப்திகரமாக இல்லை" (suboptimal pace of growth) என்று ஆளுநர் குறிப்பிட்டார். தமிழ்நாடு ஆண்டுதோறும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பொறியாளர்களை உருவாக்குகிறது, உயர்கல்வியில் அதிக மொத்த சேர்க்கை விகிதத்தைக் (GER) கொண்டுள்ளது மற்றும் நாட்டின் அதிகப்படியான காப்புரிமைகளை (Patents) பதிவு செய்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்த பலங்கள் தானாகவே அதிக முதலீடுகளையும் விரைவான பொருளாதார விரிவாக்கத்தையும் ஈர்த்திருக்க வேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது.

இருப்பினும், அவ்வாறு நடக்கவில்லை என்று கூறிய ஆளுநர், இதற்கு "தொழில் தொடங்குவதில் உள்ள வெளிப்படையான மற்றும் மறைமுகமான செலவுகள்" தான் காரணம் எனக் குற்றம் சாட்டினார். இதனால் முதலீட்டாளர்கள் பிற மாநிலங்களைத் தேர்வு செய்வதாக அவர் தெரிவித்தார். பல தொழில்முனைவோர் தங்களது ஐடியாக்களை தமிழ்நாட்டில் உருவாக்கினாலும், அதை விரிவுபடுத்தும் போது வேறு மாநிலங்களுக்குச் சென்றுவிடுகின்றனர் என்றும், ஏற்கனவே இருக்கும் நிறுவனங்கள் கூட மாநிலத்தில் மேலும் விரிவாக்கம் செய்யத் தயங்குவதாகவும் அவர் கூறினார். இதன் விளைவாக, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி அதன் உண்மையான திறனை விடக் குறைவாகவே உள்ளது என்று அவர் முடித்தார்.

ஆளுநரின் இந்த கருத்துகள் ஒரு வலுவான அரசியல் மற்றும் பொருளாதார விவாதத்தை உருவாக்கியுள்ளன. ஆனால், அதிகாரப்பூர்வ தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, யதார்த்த நிலை முற்றிலும் வேறாக உள்ளது.

ஜிடிபி தரவுகள் உணர்த்தும் உண்மை என்ன?

தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP), 2021-22 நிதியாண்டில் ₹20.72 லட்சம் கோடியாக இருந்தது. இது 2024-25 நிதியாண்டில் ₹31.19 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. வெறும் மூன்றே ஆண்டுகளில் ₹10.5 லட்சம் கோடி கூடுதல் வளர்ச்சி என்பது திருப்திகரமற்ற வளர்ச்சி என்ற ஆளுநரின் கூற்றோடு ஒத்துப்போகவில்லை.

2024-25 நிதியாண்டில், தமிழகம் 16% பெயரளவு வளர்ச்சி விகிதத்தைப் (Nominal Growth Rate) பதிவு செய்துள்ளது. இது இந்தியாவின் முக்கிய மாநிலங்களிலேயே மிக அதிகப்படியானது. அதேபோல், மாநிலத்தின் உண்மை வளர்ச்சி விகிதம் (Real Growth) 2023-24-ல் 9.69%-லிருந்து 2024-25-ல் 11.19%-ஆக உயர்ந்துள்ளது. இது தேசிய சராசரியை விடவும், மற்ற பெரிய மாநிலங்களை விடவும் மிக அதிகமாகும்.

பிற முக்கிய மாநிலங்களுடன் ஒப்பீடு

பொருளாதாரத்தின் அளவைப் பொறுத்தவரை, மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. மிக முக்கியமாக, 2024-25 நிதியாண்டில் மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களை விடத் தமிழ்நாடு அதிக வளர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளது.

மேற்கூறிய மாநிலங்கள் 10-13% என்ற அளவில் பெயரளவு வளர்ச்சியைப் பதிவு செய்தபோது, தமிழ்நாடு 16% என்ற இமாலய வளர்ச்சியை எட்டியுள்ளது. தலா வருமானத்தைப் (Per capita GSDP) பொறுத்தவரை, ₹3.62 லட்சம் என்ற அளவில் தேசிய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இது பொருளாதார வளர்ச்சி என்பது வெறும் எண்களாக மட்டும் இல்லாமல், மக்களின் சராசரி வருமானத்திலும் எதிரொலிப்பதைக் காட்டுகிறது.

முதலீட்டு புகார்களும் பொருளாதார விளைவுகளும்

முதலீட்டாளர்களின் ஆர்வம் குறைந்து வருவதாக ஆளுநர் முன்வைத்த வாதத்திற்கு, மாநிலத்தின் தொடர்ச்சியான இரட்டை இலக்க உண்மை வளர்ச்சி மற்றும் உயர்ந்து வரும் தலா வருமானமே பதிலடியாக உள்ளது.

தொழில் நிறுவனங்கள் மாநிலத்தை விட்டு வெளியேறினாலோ அல்லது விரிவாக்கத்தைத் தவிர்த்தாலோ இத்தகைய அபரிமிதமான வளர்ச்சியை எட்ட முடியாது. ஒரு மாநிலத்தின் பொருளாதாரச் செயல்பாட்டை வெறும் கருத்துகளால் தீர்மானிக்க முடியாது; அதன் முடிவுகளே (Outcomes) தீர்மானிக்கின்றன. அந்த வகையில் தமிழகத்தின் செயல்பாடுகள் நாட்டின் வலுவான மாநிலங்களில் ஒன்றாகவே நீடிக்கிறது.

ஆளுநர் உரை விமர்சனம்

இன்று காலை 9.30 மணி அளவில் சட்டமன்றத்திற்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பூங்கொத்து கொடுத்து சபாநாயகர் வரவேற்றார். நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் சற்று நேரத்தில் ஆளுநர் உரையுடன் தொடங்க ஏற்பாடுகள் நடந்தது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கலைஞர் கருணாநிதி தொடர்பான புத்தகம் மற்றும் தமிழ் என்கிற புத்தகத்தை சபாநாயகர் வழங்கினார். நடப்பு ஆண்டுக்கான முதல் தமிழக சட்டசபை கூட்டத் தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியுள்ளது. 9.50க்கு இந்த நிகழ்வு நடந்தது அடுத்த 10 நிமிடத்தில் ஆளுநர் அவையில் இருந்து வெளியேறினார்.

அப்போதுதான் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கும் முன் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று ஆளுநர் வலியுறுத்திய நிலையில், பேரவை மரபின்படி தமிழ்த்தாய் வாழ்த்தே பாடப்படும் என்று சபாநாயகர் அப்பாவு பதில் அளித்ததையடுத்து ஆளுநர் வெளியேறினார். மக்கள் சபையை ஆளுநர் அவமதித்துள்ளார் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு என அண்ணா கூறியிருந்தார். ஆளுநர் ஏற்கனவே நடந்து கொண்டதைப் போல இப்போது மீண்டும் நடந்து கொண்டுள்ளார். அரசமைப்பை ஆளுநர் மீறியுள்ளார். உரையை வாசிக்காமல் ஆளுநர் சென்றதை சட்டப்பேரவை ஏற்கவில்லை. மக்கள் சபையை ஆளுநர் அவமதித்துள்ளார் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஆளுநர் வெளியேறிய நிலையில், ஆளுநர் உரையில் உள்ளது மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். அதைத்தொடர்ந்து, உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

ஆளுநர் உரையோடு அவை தொடங்க வேண்டும் என்ற பேரவை விதியை அரசியல் அமைப்பில் திருத்த முயல்வோம். நாடாளுமன்றத்தில் திருத்தம் கொண்டுவர பிற மாநில கட்சிகளோடு சேர்ந்து திமுக நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உரையை வாசிக்காமல் ஆளுநர் சென்ற நிலையில், அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்து வருகிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு என கூறி சட்டமன்றத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு இடையே ஆளுநர் ரவி தரப்பில் இதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டது. அதில், தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை எனக் கூறி சட்டமன்றத்தில் அதிமுகவினர் முழக்கமிட்டு, வெளிநடப்பு செய்தனர்.

அரசு ஊழியர்களின் குறைகளை தீர்ப்பதற்கான அம்சங்கள் உரையில் இல்லை. தமிழக அரசுத் துறையில் கீழ்மட்ட ஊழியர்களிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது என்று ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தற்கொலை தலைநகராக தமிழ்நாடு கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் ஓராண்டில் 20 ஆயிரம் பேர் தற்கொலை செய்துள்ளனர். தினமும் 65 பேர் தற்கொலை செய்து வருகின்றனர் என்று ஆளுநர் மாளிகை தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பல ஆயிரம் கோயில்களில் அறக்காவல் குழுக்கள் அமைக்கப்படவில்லை. சட்டமன்றத்தில் தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது என்று ஆளுநர் மாளிகை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதை மருந்து விவகாரம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. போதை காரணமாக ஓராண்டில் 2 ஆயிரம் இளைஞர்கள் தற்கொலை செய்துள்ளனர். பள்ளி மாணவர்களிடையே போதைப் பழக்கம் அதிகரித்துள்ளது என்று மக்கள் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உரையில் உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்கள் இருந்தன. ரூ. 12 லட்சம் கோடி முதலீடுகள் வந்ததாக என்று கூறுவது தவறானது. முதலீடுகளை ஈர்ப்பதில் 4 ஆம் இடத்தில் இருந்த தமிழ்நாடு இப்போது 6 ஆம் இடத்திற்குச் சென்றுவிட்டது. பெரும்பாலான ஒப்பந்தங்கள் காகிதங்கள் நிலையிலேயே உள்ளன. பெண்கள் பாதுகாப்பு புறக்கணிப்பு, பாலியல் சம்பவங்கள் 33 சதவீதம் அதிகமாகியுள்ளதாகவும் ஆளுநர் மாளிகை விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+