கமலின் "மூன்று முடிச்சு".. திமுகவே எதிர்பார்க்கல.. சொதப்பல் ப்ளான்.. ஜெர்க் ஆன கூட்டணி.. கவனித்த பாஜக
சென்னை: மநீம தலைவர் கமல்ஹாசன் யாருடன் கூட்டணி வைக்க போகிறார்? எந்த தொகுதியில் களமிறங்க போகிறார்? என்ற ஆர்வம் எழுந்து வருகிறது.
எம்பி தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன...

அதேநேரம் ஒவ்வொரு கட்சியின் பிரபலங்களும் தங்களுக்கு சாதகமான தொகுதிகளை குறிவைத்து வேலை செய்யத்தொடங்கி விட்டார்கள்... இதில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் களப்பணியும் அதிகரிக்க துவங்கிவிட்டது.
திமுக: எப்படியும் இந்த முறை திமுக கூட்டணியுடன் இணைந்தே மய்யம் தேர்தலை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. திமுக ஆதரவுடன் களம் இறங்கினால் வெற்றி எளிதானது என்று கமல் நினைப்பதாக தெரிகிறது. இதற்கு காங்கிரசும் பெருத்த துணையாக இருந்து வருகிறது.. ஆனால், இந்த கணக்கும் தற்போது டமார் என உடைந்துவிடும் போல தெரிகிறது.
பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு, கமலுக்கு அழைப்பு தரப்படவில்லையாம்.. இதனால், அதிருப்தி அடைந்துள்ளாராம் கமல்.. அதுமட்டுமல்ல, கோவை, மதுரை, தென் சென்னை ஆகிய 3 லோக்சபா தொகுதிகளை, எந்த கூட்டணி தருகிறதோ, அதனுடன் கூட்டணி அமைக்கும் முடிவுக்கும் வந்துவிட்டாராம்..
அதிருப்தி: ஒருவேளை அதிமுக - பாஜக கூட்டணியில் கேட்கும் தொகுதிகள் கொடுத்தால் அங்கே சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.
அதேசமயம், சில தொகுதிகளை அடையாளம் கண்டு, அதில் கமல்ஹாசனை களம் இறக்க திட்டமிட்டுள்ளனர் மநீம நிர்வாகிகள்.. இதற்காக 12 எம்பி தொகுதிகளை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அடையாளம் கண்டு வைத்துவிட்டார்களாம். குறிப்பாக, தென் சென்னை, கோவை ஆகிய 3 தொகுதிகள் முதல் இடத்தில் இருக்கின்றன.. அதனால்தான், இந்த இடங்களை எந்த கூட்டணி தரப்போகிறதோ, அங்கே கூட்டணி என்ற முடிவில் மநீம உள்ளதாக தெரிகிறது.
இந்த 3 தொகுதிகளை தவிர, மத்திய சென்னை, வட சென்னை, பொள்ளாச்சி, ஸ்ரீபெரும்புதூர், திருப்பூர், பொள்ளாச்சி உள்ளிட்ட தொகுதிகளும் இந்த 12 தொகுதிகளுக்குள் வருகின்றன.. இந்த 12-ல் ஏதாவது ஒன்றில் கமலை களமிறக்க போகிறார்களாம்.. ஆனால், "மக்களோடு மய்யம்" என்ற பெயரில் தொகுதி வாரியாக மக்களை சந்தித்து வருகிறார் கமல்..
மதுரை: அந்தவகையில், மநீம உறுப்பினர்கள், கோவை தொகுதியில் கவனம் செலுத்தி, பொதுமக்களின் குறைகளை கேட்டு வருகிறார்கள். இதற்கு அடுத்து தென்சென்னைக்கும், மதுரை தொகுதிகளிலும், செல்வார்கள் என்று தெரிகிறது. இந்த தொகுதிகளை முடித்துக்கொண்டு, மற்ற தொகுதிகளிலும் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மக்களுடன் இந்த சந்திப்பை முடித்துவிட்டுதான், கமலுக்கான தொகுதி எது என்பதும் முடிவாகும் என தெரிகிறது.
சமீபத்தில், தென் சென்னை லோக்சபா தொகுதியில், உறுப்பினர்கள் சேர்த்தல், பூத் கமிட்டி அமைத்தல் போன்ற பணிகள் முழுவீச்சில் நடப்பதாக தகவல்கள் கசிந்தன.. காரணம், கடந்த லோக்சபா தேர்தலில் மய்யம் சார்பில், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ரங்கராஜன், 1.20 லட்சம் ஓட்டுக்களை பெற்றிருந்தார். அதேபோல சட்டசபை தேர்தலிலும், கணிசமான ஓட்டுக்களை பெற்றுள்ளது.. அதனால், தென்சென்னை தொகுதியை குறிவைத்து, கமலின் தேர்தல் வேலை நடப்பதாக கூறப்பட்டது.
வேளச்சேரி: இந்த தென்சென்னை தொகுதியை பொறுத்தவரை, தென் சென்னை மக்களவைத் தொகுதி பெரும்பாலும் திமுக, காங்கிரஸ் வசமே அதிக முறை இருந்துள்ளது.. வேளச்சேரி, தியாகராய நகர், மயிலாப்பூர் பகுதிகளில் பிராமணர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இது தவிர, முதலியார், மீனவர்கள், தலித்துகள் எனப் பலதரப்பட்ட மக்களையும் உள்ளடக்கியது தென் சென்னை தொகுதி..
யாருடைய வாக்குகள்: அதேபோல், அரசு ஊழியர்கள், ஐடி ஊழியர்கள் என்று படித்தவர்கள் எண்ணிக்கையும் இந்த தொகுதியில்தான் அதிகம் உள்ளனர்.. அதனால், வாக்குகள் ஒரே இடத்தில் குவியும் என்று எதிர்பார்க்க முடியாது.. மேலும், அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு சமமான வாக்கு வங்கி இந்தத் தொகுதியில் உள்ளது.. அந்தவகையில், கமல் இங்கு போட்டியிட நேர்ந்தால், யாருடைய வாக்குகளை கமல் பிரிக்க போகிறார் என்பதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கும்.
அதேபோல, இந்த முறையும் கோவை தொகுதியிலேயே கமல் போட்டியிட போவதாக கூறப்படுகிறது... அதற்கேற்றவாறு, கோவை தொகுதி மக்களை கவரும் வகையில் சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட தனியார் பஸ் பெண் டிரைவரை அழைத்து அவருக்கு சொந்தமாக புதிய கார் வாங்கி கொடுத்திருந்தார் கமல்.. இதைத்தவிர, கோவை தொகுதியை குறிவைத்தே, கமல்ஹாசன் களப்பணிகளை மேற்கொண்டு வருவதால், இங்கு போட்டியிடுவது உறுதி என்கிறார்கள்.
இதற்கு நடுவில் ராமநாதபுரம் தொகுதியும் அடிபட்டது.. காரணம், இங்கு பிரதமர் மோடி களமிறங்குவதாக சொல்லவும், திமுக கூட்டணியில் மநீம உறுதியானால், கமலை ராமநாதபுரத்தில் மோடிக்கு எதிராக களமிறக்கும் பிளான் ஒன்றும் இருந்தது. ஆன்மீக தலமாக ராமநாதபுரம் கருதப்பட்டாலும், பாஜக அதிருப்தி ஓட்டுக்கள் + சிறுபான்மையினர் ஓட்டுக்களை கமல் பெறக்கூடும் என்றும் நம்பப்பட்டது. ஆனால், இந்த பேச்சும் அப்படியே அமுங்கிப்போய்விட்டது.
என்னாகும்: ஆக மொத்தம், தென்சென்னையாக இருந்தாலும்சரி, கோவையாக இருந்தாலும்சரி, மதுரையாக இருந்தாலும் சரி, ராமநாதபுரமாக இருந்தாலும் சரி,.. இதில் எந்த தொகுதியில் கமல் இறங்கினாலும், அவரை எதிர்த்து போட்டியிட போவது யார் என்பதே மிகுந்த எதிர்பார்ப்பாக எழுந்துள்ளது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications