எடப்பாடி பழனிசாமிக்கு விழுந்த அரசியல் அடி.. தவெகவுக்கு தாவ ரெடியாகும் முக்கிய புள்ளி! இதுதான் காரணமா
சென்னை: தமிழக அரசியல் களம் இப்போது அடுத்த டென்ஷனில் இறங்கி உள்ளது.. காரணம், தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கும் கட்சித் தாவல் விவகாரங்கள்தான்.. ஆட்சியில் இருக்கும் தவெகவை நோக்கி மாற்றுக்கட்சியினர் அடுத்தடுத்து படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த அதிரடி மாற்றங்களால், தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவின் பலம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது... இது தொண்டர்களுக்கு கிலியையும், அதிருப்தியையும் உண்டு பண்ணி வருகிறது.
சமீப காலமாகவே அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் மீது, அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல முக்கியப் புள்ளிகள் வெளியேறி வருகிறார்கள்.

அவர்கள் அதிமுகவை விட்டு விலகி, தவெகவில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். ஒரு சிலர் திமுக பக்கமும் சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனால், இங்குதான் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது.
தவெகவுக்கு பறந்து வரும் முக்கிய புள்ளிகள்?
ஊழலற்ற, தூய்மையான மற்றும் வெளிப்படையான ஆட்சி என்ற கொள்கையோடு தவெக இயங்கி வருகிறது. அப்படியிருக்கும்போது, மாற்றுக்கட்சிகளில் இருந்து வரும் நிர்வாகிகள் எந்த எண்ணத்தோடு இந்த புதிய கட்சியில் இணைகிறார்கள் என்ற சந்தேகம் எழுகிறது. தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கிறது. அதனை தொடர்ந்து 2029-ம் ஆண்டு எம்பி தேர்தலும், இடையில் மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான தேர்தல்களும் நடக்க போகின்றன..
அதனால்தான், இந்த தேர்தல்களை மனசில் வைத்து, முக்கியப் பதவிகளை பெறலாம் என்ற எதிர்பார்ப்பில்தான் அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளின் நிர்வாகிகள் தவெகவில் இணைகிறார்கள் என்று அரசியல் வட்டாரத்தில் சலசலக்கப்படுகிறது.
புது தலைகளுக்கு சான்ஸ்?
இந்த சூழல் தவெகவின் ஆரம்பகால தொண்டர்கள் மத்தியில் பெரும் கவலையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. விஜய் ரசிகர் மன்ற காலத்தில் இருந்தே, கட்சியின் வளர்ச்சிக்காக தங்களின் உழைப்பைத் தந்து பயணித்து வரும் தங்களை விடுத்து, இப்போது புதிதாக வந்தவர்களுக்குப் பதவிகள் வழங்கப்பட்டால் எப்படி நியாயமாகும் என்ற கேள்வியை அவர்கள் முன்வைக்கிறார்கள்.
இன்றைக்குப் பதவிகளை மட்டுமே எதிர்பார்த்து தவெகவில் இணையும் நபர்களுக்கு, அவர்கள் நினைத்தது கிடைக்காத பட்சத்தில், அவர்கள் மீண்டும் தங்களுக்குச் சாதகமான மாற்றுக்கட்சிகளை நோக்கி ஓடிவிடுவார்கள் என்றும் தொண்டர்கள் பயப்படுகிறார்கள்.
புதுசா முளைத்த தலைவலி
இதனால் புதிதாக இணைந்தவர்களால் கட்சிக்கு உள்நாட்டுப் பிரச்சனைகள் ஏற்படுமே தவிர, அவர்கள் கட்சியின் வளர்ச்சிக்கு ஏணியாக இருக்க மாட்டார்கள் என்றே தவெகவினர் கருதுகின்றனர். அதனால் மாற்றுக்கட்சியினரைச் சேர்க்கும்போது தவெக தலைமை மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. தவறினால், அதுவே கட்சிக்கு ஒரு புதிய தலைவலியாக மாறிவிடும் என்றும் எச்சரிக்கிறார்கள்.
தமிழக அரசியல் வரலாற்றை பொறுத்தவரை, ஒரு புதிய சக்தி ஆட்சியைப் பிடிக்கும்போதோ அல்லது பலமாக உருவெடுக்கும்போதோ, பலவீனமடையும் மாற்றுக்கட்சிகளில் இருந்து நிர்வாகிகள் அதை நோக்கிப் படையெடுப்பது ஒரு தொடர்கதையாகவே இருந்து வருகிறது. தவெகவில் அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது.. இதில் வியப்படைய எதுவும் இல்லை.
திடீர் வரவுகள் - தவெகவுக்கு பலவீனம்?
ஆனால், பாரம்பரிய கட்சிகளை போல இல்லாமல், "தூய்மையான அரசியல்" என்ற தனித்துவமான முழக்கத்துடன் களம் கண்டுள்ள தவெக, பதவிக்காக வரும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளை தாராளமாக அனுமதித்தால், அது கட்சியின் அடிப்படை நோக்கத்தையே மொத்தமாக சிதைத்துவிடும் என்பதையும் அரசியல் விமர்சகர்கள் அலர்ட் செய்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, ஆரம்பக் காலத்தில் இருந்தே லட்சக்கணக்கான உண்மைத் தொண்டர்கள், தங்களின் உழைப்பை மட்டுமே நம்பி உள்ளார்கள்.
அவர்களின் நிஜமான உணர்வுகளை காயப்படுத்தாமல், புதியவர்களின் வரவை ஒரு வடிகட்டி மூலம் தரம் பிரித்து கையாள்வதே அக்கட்சியின் நீண்டகால அரசியல் எதிர்காலத்திற்கும், அதன் தலைவரின் நம்பகத்தன்மைக்கும் பலம் சேர்க்கும், இல்லாவிட்டால் இந்த திடீர் வரவுகள் கட்சியை, உள்ளிருந்தே பலவீனமாக்கிவிடும் என்பதையும் அரசியல் திறனாய்வாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!


Click it and Unblock the Notifications
