கணவர் தவெக; மனைவி திமுக.. ராமராஜன் முதல் விந்தியா வரை.. சூடு பிடித்த பிரச்சாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திரை நட்சத்திரங்களின் பிரச்சாரத்தால் இந்த 2026 தேர்தல் களம் எந்தளவுக்குச் சூடு பிடித்துள்ளது என்பதைப் பார்ப்போம்.

2026 சட்டமன்றத் தேர்தல் பிரச்சார களம் சூடுபிடித்துள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய்யே தனிக்கட்சி தொடங்கி முதன்முறையாகப் போட்டியிடுகிறார். அவரது புகழ் வெளிச்சத்தால் பல திரை நட்சத்திரங்கள் தேர்தல் களத்தில் பரப்புரையில் ஈடுபட்டு வந்தாலும் அதிகம் கவனம் பெறவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது.

ஜெயலலிதாவின் ஆதரவினால், எம்பி ஆக நாடாளுமன்றம் சென்ற ராமராஜன் யாரும் எதிர்பார்க்காத விதமாக தவெக வேட்பாளருக்கு வாக்குக் கேட்டு வீதி வீதியாகப் பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் அதிமுகவின் தீவிர விசுவாசியாக இருந்தவர். திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியின் அதிமுக முன்னாள் மக்களவை உறுப்பினர்.

Election Campaign

கிராமப்புறங்களில் ராமராஜனின் படங்களுக்கு இன்றைக்கும் ஒரு செல்வாக்கு இருக்கிறது. அவர் நடித்த 'கரகாட்டக்காரன்' தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதிமுகவினால் அரசியல் ஆதாயம் பெற்ற இவர், ஆலங்குடி தவெக வேட்பாளர் விபின் சக்கரவர்த்திக்காகத் தீவிரமாகப் பரப்புரை செய்து வருகிறார்.

வேட்பாளருக்கும் தனக்கும் 30 ஆண்டுகள் உறவு என்று பேசி வரும் ராமராஜன், தனது 'சாமானியன்' படத்தைப் பல திரையரங்குகள் வெளியிட முன்வராதபோது, விபின் சக்கரவர்த்திதான் திரையிட்டு உதவியதாகப் பெருமையாகப் பேசிவருகிறார். ராமராஜனின் பிரச்சாரத்தால் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி களைகட்டியுள்ளது.

அங்கே ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரண்டையும் சாராத புதிய கட்சியின் வேட்பாளர் ராமராஜனின் வருகையால் மக்கள் கவனத்தைக் கவர்ந்துபெற்றுள்ளார். சரி, குடும்ப ரீதியான நண்பருக்கு ராமராஜன் பிரச்சாரம் செய்கிறார் என நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில், "நான் தொடர்ந்து அதிமுக தொண்டனாக இருந்தாலும் விஜய் எனக்குச் சகோதரர் மாதிரி. ஆகவே தவெகவுக்காக பிரச்சாரம் செய்கிறேன்.

விஜய் வெற்றி பெற்றுப் பல உயரங்களை அடைய வாழ்த்துகிறேன்" என்றும் பேசி உள்ளார். தவெகவில் நேரடி உறுப்பினராக இல்லாத ராமராஜன், திடீரென்று விஜய்யை ஆதரித்துள்ளது ஒரு முக்கிய நகர்வாகத் தேர்தல் களத்தில் மாறியுள்ளது. முந்தைய காலங்களில் அதிமுகவுக்காகவும் பாஜகவுக்காகவும் பிரச்சாரம் செய்து வந்த நடிகர் பொன்னம்பலம், இந்தத் தேர்தலில் தவெகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்துவருகிறார்.

கம்பம் வேட்பாளரும் தொழிலதிபருமான ஜெகநாத் மிஸ்ராவுக்காக அவர் பிரச்சாரம் செய்துவருகிறார். "சினிமா உலகில் எனக்கு அடையாளத்தைக் கொடுத்தவர் விஜயகாந்த் தான். ஆனால், அவர் மறைவுக்குப் பிறகு தீய சக்தியான திமுகவுடன் பிரேமலதா கூட்டணி வைத்துவிட்டார். அவர் இதனால் வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைக்கலாம். ஆனால், அது ஒரு நாளும் நடக்கவே நடக்காது" என்று ஆவேசமாகச் சொல்கிறார்.

ராமராஜனின் முன்னாள் மனைவி நடிகை நளினி, திமுகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்து வருகிறார். திருவள்ளூரில் வி.ஜி.ராஜேந்திரனுக்காகத் தீவிரமாக அவர் பரப்புரையில் ஈடுபட்டார். இந்தத் தொகுதியில் தங்கள் கட்சி வேட்பாளர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் எனக் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன என்ற நளினி, "மக்களுக்காக ராஜேந்திரன் நிறையத் திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். ஆகவே அவர் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றி பெறுவார்" என அடித்துப் பேசினார்.

தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணியை ஆதரித்து பம்பரமாகப் பரப்புரை செய்து வருகிறார் கவுதமி. அத்வானி காலத்திலிருந்து பாஜகவிலிருந்து வந்த இவர், தற்போது எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக மாறியுள்ளார். சில வருடங்கள் முன்பு இவரது நிலப்பிரச்சனை பெரிய சர்ச்சையைக் கிளப்பிய போது அவருக்குத் திமுக அரசு பக்கபலமாக இருந்தது. காவல்துறையும் அவர் பக்கம் நின்றது.

ஆனால், அவர் அதிமுக விசுவாசியாக தேர்தல் களத்தில் கம்பு சுற்றி வருகிறார். செங்கல்பட்டு, விருகம்பாக்கம், திருத்தணி எனப் பல இடங்களில் பிரச்சாரம் செய்தார் கவுதமி. ஒரு காலத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து வாழ்ந்தவர். அவரோ இப்போது மநீம சார்பில் திமுக கூட்டணியையும் ஸ்டாலினையும் ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

மதுரை வட்டாரங்களில் நடிகர் வையாபுரி, அதிமுகவையும் எடப்பாடி பழனிசாமியையும் ஆதரித்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார். நடிகை விந்தியா வழக்கமாக ரைமிங்காக பிரச்சாரம் செய்வதில் வல்லவர். அவரது பிரச்சாரத்தை ஜெயலலிதாவே அழைத்துப் பாராட்டி இருக்கிறார். அவர் தற்போது அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இருக்கிறார்.

அவர், விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். "தனது பாதுகாப்புக்கு யாரிடம் மனு கொடுக்கவேண்டும், கட்சியின் கூட்டத்தை நடத்த யாரிடம் மனு கொடுக்க வேண்டும் என்பது கூட தெரியாதவர் எப்படி மக்களைப் பாதுகாக்கப் போகிறார்? அவர் ஊடக வெளிச்சத்தால் பெரிதாகப் பேசப்படுகிறார்" என்று கேள்வி எழுப்பி வருகிறார் விந்தியா.

இவரது பிரச்சாரம் அதிமுகவுக்குப் பலமாகக் கருதப்படுகிறது. போஸ் வெங்கட் திமுகவுக்காகப் பிரச்சாரம் களத்தில் நிற்கிறார். இவரைத் தவிர்த்து நடிகர் கருணாஸ் நேரடியாக வேட்பாளராகவே தேர்தலில் களம் கண்டுள்ளார்.

-கடற்கரய்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+