தெரியாது! தெரியாது! தெரியாது! - தர்மயுத்தத்தின் “தர்மம்” மீதே சந்தேகம் வர வைத்த ஓ.பி.எஸ்.
சென்னை: 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி இரவு... தொலைக்காட்சிகளில் திடீரென பிரேக்கிங் செய்திகள் மின்னின... அனைத்து கேமராக்களும் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஜெயலலிதா சமாதியை ஃபோக்கஸ் செய்துகொண்டிருந்தன...
2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் உயிரிழந்த ஜெயலலிதாவின் சமாதி 2 மாதம் கழித்து மீண்டும் பிரேக்கிங் செய்தியாக வரக் காரணம், அப்போது முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அங்கு நடத்திய தர்ம யுத்தம்.
சின்னம்மா சின்னம்மா என்று 2 மாதங்களாக சசிகலா தலைமையின் சொல்படி நடந்துவந்த ஓ.பன்னீர்செல்வம், திடீரென வீருகொண்டு எழுந்துவந்து ஜெயலலிதா சமாதியில் உதிர்த்த வார்த்தைகளும் சுமத்திய குற்றச்சாட்டுகளும் அதிமுக மட்டுமின்றி தமிழ்நாட்டின் அரசியலையே புரட்டிப்போட்டது.

தர்ம யுத்தத்தில் ஓ.பி.எஸ். பேசியது
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக அதிமுக அடித்தட்டு தொண்டன் முதல் சாதாரண மக்கள் வரை சந்தேகத்தை எழுப்பி வந்த அந்த நேரத்தில், முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வமும் அதை ஆமோதிக்கும் வகையில், "சசிகலாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும், ஜெயலலிதா மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்" எனப்பேசியது, இன்று அவரை ஜெயலலிதா மரண வழக்கை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் நிறுத்தி இருக்கிறது.

ஓ.பி.எஸ்-ஐ முதல் குற்றவாளி என்ற விஜயபாஸ்கர்
அதுவரை மாண்புமிகு முதலமைச்சர் என ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்து வந்த அதிமுக அமைச்சர்களும் சசிகலா, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் "துரோகி" என பட்டம் கொடுத்தனர். அப்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கரோ ஓ.பன்னீர்செல்வம்தான் ஜெயலலிதா மரண வழக்கின் முதல் குற்றவாளி என்று பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்,

சிபிஐ விசாரணைக்காக உண்ணாவிரதம் இருந்த ஓ.பி.எஸ்.
மறுபக்கம் ஓ.பி.எஸும், கடந்த 2017 மார்ச் 17 ஆம் தேதி ஜெயலலிதா மரணத்தில் சிபிஐ விசாரணைகோரி தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதம் இருந்தார். அப்போது பேசிய அவர், "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 24 வது நாளில் ஜெயலலிதா நன்றாக இருப்பதாக சசிகலா என்னிடம் கூறினார். ஜெயலலிதா மாலை 4:30 மணிக்கே இறந்துவிட்டதாக என்னிடம் மாலை 6:30 மணிக்கு தெரிவித்தார்கள்.

விஜயபாஸ்கர்தான் முதல் குற்றவாளி
ஆனால் மருத்துவமனை உறுதிசெய்யவில்லை எனக்கூறி காலம் தாழ்த்தி இரவு 11:30 மணிக்கு காலமானதாக கூறினார்கள். எனக்கு எந்த செய்தியும் முறையாக தெரிவிக்கப்படவில்லை. என்னிடம் இதுகுறித்து விசாரணை நடத்தினால் என்ன நடந்தது என்று நான் சொல்வேன். உண்மை வெளியானால் முதல்குற்றவாளி விஜயபாஸ்கர்தான்." என்று சொல்லி அதிர வைத்தார்.

முடிவுக்கு வந்த தர்ம யுத்தம்
டெல்லியின் தலையீட்டால் 6 மாதத்தில் தர்மயுத்தத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு எடப்பாடி பழனிசாமியுடன் இரட்டைக்குழல் துப்பாக்கிபோல் ஒன்று சேர்ந்தார் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதா மரண வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்காக உண்ணாவிரதம் இருந்த அவர், துணை முதலமைச்சரான பின்னர் சற்று இறங்கி வந்து ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க சம்மதித்தார். 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

ஓ.பி.எஸுக்கு அனுப்பப்பட்ட முதல் சம்மன்
3 மாதங்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவுடன் உருவாக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம், பல முறை கால நீட்டிப்பு பெற்றுக்கொண்டே இருந்தது. நான்கரை ஆண்டுகள் கடந்தும் விசாரணை நிறைவடையவில்லை. 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி அப்போது துணை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியது ஆறுமுகசாமி ஆணையம்.

8 முறை சம்மன் அனுப்பியும் நோ ரெஸ்பான்ஸ்
ஜெயலலிதா மரண வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும், என்னிடம் விசாரித்தால் நடந்ததை சொல்வேன் என தர்ம யுத்தத்தின்போது உரக்கப்பேசிய ஓ.பன்னீர்செல்வம் 8 முறை சம்மன் அனுப்பியும் பல்வேறு காரணங்களை கூறி விசாரணைக்கு ஆஜராவதை தவிர்த்து வந்தார். இதன் பின்னர் அப்போலோ மருத்துவமனை தரப்பில் தொடரப்பட்ட வழக்கால் 2 ஆண்டுகளாக விசாரணை ஆணையம் செயல்படாமல் முடங்கியது.

முதல்முறையாக இன்று விசாரணைக்கு ஆஜரான ஓ.பி.எஸ்.
உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கடந்த சில நாட்களாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையை மீண்டும் தொடங்கி நடத்தி வருகிறது. இந்த நிலையில் 9 வது முறையாக ஆறுமுகசாமி ஆணையம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சம்மன் அனுப்பியது. அதிமுக ஆட்சி காலத்தில் 8 சம்மன்கள் அனுப்பியும் ஆஜராகாத அவர், திமுக ஆட்சியில் முதல் சம்மன் அனுப்பியவுடனே விசாரணைக்கு ஆஜரானார்.

எனக்கே லேட்டாதான் தெரியும்!
அப்போது அவரிடம் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடங்கி தர்ம யுத்தத்தில் அவர் முன்வைத்த கோரிக்கை வரை ஏராளமான கேள்விகள் எழுப்பப்பட்டு உள்ளன."ஜெயலலிதா ஒரு வாரத்தில் வீடு திரும்பி விடுவார் என்றுதான் என்னிடம் மருத்துவர் விஜயகுமார் கூறினார். ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை அறியவே ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதே உதவியாளர் சொல்லிதான் தெரியும்." எனக்கூறி இருக்கிறார்.

விஜயபாஸ்கரை கோர்த்துவிட்ட ஓ.பன்னீர்செல்வம்
இதைத் தவிர தர்ம யுத்தத்தில் யாரை முதல் குற்றவாளி என்று ஓ.பி.எஸ். குற்றம்சாட்டினாரோ அந்த விஜபாஸ்கரை இந்த விசாரணையில் இழுத்துவிட்டுள்ளார். "எம்.ஜி.ஆர். போல ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் செல்ல முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கரிடமும் எஸ்.பி.வேலுமணியிடமும் கூறினேன். ஆனால் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் அதுபற்றி என்னிடம் பேசவில்லை. கேட்டிருந்தால் கையெழுத்து போட்டிருப்பேன். ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை முறை குறித்தும் விஜயபாஸ்கரிடமே கேட்டு தெரிந்துகொள்வேன். அவர் இறப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு கூட உடல்நிலை மோசமானதாக விஜயபாஸ்கர்தான் என்னிடம் சொன்னார்" என ஓ.பி.எஸ். கூறியுள்ளார்.

தெரியாது! தெரியாது! தெரியாது!
இந்த பதில்களை கடந்து ஆறுமுகசாமி ஆணைய வழக்கறிஞர் எழுப்பிய, "ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன? எந்த நேரத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்? காவிரி விவகாரம் தொடர்பாக அதிகாரிகளுடன் மருத்துவமனையில் ஜெயலலிதா ஆலோசனை செய்தது உங்களுக்கு தெரியுமா? சசிகலாவால் அழைக்கப்பட்டு ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க வந்த அமெரிக்க மருத்துவர் ஆஞ்சியோதெரபி சிகிச்சைக்கு பரிந்துரைத்தபோதிலும் எந்த சிகிச்சையும் அளிக்காதது ஏன்?" என்பன போன்ற பெரும்பாலான கேள்விகளுக்கு "தெரியாது" என்ற வார்த்தையே ஓ.பன்னீர்செல்வத்தின் நாவிலிருந்து பதிலாக வந்துள்ளது. ஜெயலலிதா மரண வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும், என்னிடம் விசாரித்தால் நடந்ததை சொல்வேன் என 2017 ஆம் ஆண்டு தர்மயுத்தத்தின்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், இன்று அதற்கே மாறு செய்யும் வகையில் எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் மவுனம் காத்துள்ளது தர்ம யுத்தத்தின் "தர்மம்" மீதே சந்தேகத்தை எழுப்புகிறது என்று அரசியல் விமர்சகர்கள் பலர் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications