அண்ணா, எம்ஜிஆர் போல, ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துபோய் சிகிச்சையளிக்க அமைச்சர்களிடம் கூறினேன்: ஓபிஎஸ்
மருத்துவ சிகிச்சைக்காக ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்துச்செல்லலாம் என்று எஸ்.பி வேலுமணி,விஜயபாஸ்கரிடம் கூறியதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: எம்ஜிஆர், அண்ணா போல ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்துச்செல்லலாம் என அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணியிடம் கூறியதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். ஆறுமுகசாமி ஆணையத்தில் நேரில் ஆஜரான அவரிடம் ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச்செல்ல தடையாக இருந்தது எது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஓபிஎஸ் பதிலளித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய ஓ.பன்னீர் செல்வத்திடம் ஆறுமுகசாமி ஆணையம் இன்று காலை முதலே விசாரணை மேற்கொண்டு வருகிறது. பல கேள்விகளுக்கு எனக்குத் தெரியாது என்றே அவர் பதிலளித்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதிக்குப் பிறகு அவர் ஜெயலலிதாவை பார்க்கவே இல்லை என்று கூறியுள்ளார். மருத்துவ சிகிச்சை முறை பற்றி கூட அப்போதய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்லித்தான் தெரியும் என்றும் சொன்னார். 2 மணிநேரம் நடைபெற்ற விசாரணையில் 20க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு தெரியாது என்ற பதிலே ஆறுமுகசாமி ஆணையத்திற்குக் கிடைத்துள்ளது.

தலைமைச்செயலாளர்
சொந்த ஊரில் இருந்த போது நள்ளிரவில் உதவியாளர் மூலம் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தெரிந்து கொண்டேன் என்று கூறிய ஓபிஎஸ் மருத்துவமனை சென்ற போது தலைமைச் செயலாளரிடமே விவரங்களை கேட்டறிந்தேன். ஜெயலலிதாவுக்கு நீரிழிவு நோய் தவிர வேறு நோய் எதுவும் இருந்ததா என்பது பற்றி எனக்கு தெரியாது.

என்ன மருந்து தரப்பட்டது
2016 செப்டம்பர் 22ஆம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்பது தெரியாது. சர்க்கரை நோய் தவிர்த்து அவருக்கு இருந்த உடல் உபாதைகளைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை தரப்பட்டது? எந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர் என்ற எந்த விபரமும் தெரியாது என்று கூறினார்.

வெளிநாடு அழைத்துச்செல்லாதது ஏன்
உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஓபிஎஸ் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அவரிடம் ஜெயலலிதாவை மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச்செல்ல தடையாக இருந்தது எது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், வெளிநாடு அழைத்துச் செல்வது குறித்து என்னிடம் கேட்டிருந்தால் நான் கையெழுத்து போட்டிருப்பேன் என்றார்.

அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள்
அப்போதைய அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணியிடம் கூறினேன். அப்பல்லோ மருத்துவர்களிடம் பேசிய பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தனர். ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச்செல்வது பற்றி ராமமோகன் ராவ் என்னிடம் எதுவும் கூறவில்லை என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார். அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டியின் மருமகன் விஜயகுமார் ரெட்டியிடமும் இதனைத் தெரிவித்தேன். ஜெயலலிதா ஒரு வாரத்தில் குணமடைந்து விடுவார் என்று விஜயகுமார் கூறினார்.

ஜெயலலிதா விரும்பவில்லையா?
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நேரத்தில் தங்களால் அவரைப் பார்க்க முடியவில்லை என்று அப்போதைய அமைச்சர்கள் குற்றம் சாட்டினர். திட்டமிட்டே அவரை வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லவில்லை என்று பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். சமீபத்தில் சி.வி.சண்முகமும் இதே குற்றச்சாட்டை பகிரங்கமாக முன்வைத்தார். இந்த நிலையில் வெளிநாடு அழைத்து செல்லாதது ஏன் என்ற கேள்விக்கு ஆறுமுகசாமி ஆணையத்தில் பதில் அளித்துள்ளார் ஓபிஎஸ். ஜெயலலிதா உயர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல விரும்பவில்லை என்று அவருக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications