சென்னையில் 24 மணி நேரத்தில் மாறிய காட்சி..தெறித்து ஓடும் சட்டவிரோத பார் ஊழியர்கள்.. விஜய் அதிரடி
சென்னை: 24 மணி நேரமும் மதுபானங்களை விற்றவர்களை தேடி தேடி கைது செய்து வருகிறது தமிழ்நாடு போலீஸ். சென்னை முழுக்க பல்வேறு பகுதிகளில் சட்டவிரோத பார்கள் நடத்தியது தொடர்பாக போலீசார் நேற்று சோதனை நடத்தினார்கள். இந்த வேட்டையில் 16 பேர் கைது செய்யப்பட்டனர். 500 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. நேற்று திருவெற்றியூரில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்க தவறியதாக இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், அடுத்தடுத்து அதிரடியான சம்பவங்கள் நடந்து வருகிறது.
கடந்த காலங்களில் 24 மணி நேரமும் மதுபானங்கள் பல்வேறு பார்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தன. அதனை போலீசார் கண்டு கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. அதேபோல் சந்துக்கடைகள் என்ற பெயரில் சிலர் வீடுகளில் ரகசியமாக விற்றும் வந்தார்கள், பெட்டிகளை கூட சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்யும் இடமாகவும் ஒரு சில இடங்களில் இருந்தது. இவற்றின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு கோரிக்கைகள் பறந்தன. இதையடுத்து 24 மணி நேரமும் மதுபானங்களை விற்றவர்களை தேடி தேடி கைது செய்து வருகிறது தமிழ்நாடு போலீஸ்.

சென்னையை பொறுத்தவரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோடக் உத்தரவின்பேரில், சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களிலும் அந்தந்த துணை கமிஷனர்களின் தலைமையில் சென்னை முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் சட்டவிரோதமாக பார்கள் நடத்தியதாகவும், மதுபாட்டில்களை பதுக்கி வைத்து சில்லரை விற்பனையில் ஈடுபட்டதாகவும் மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 500 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
வேளச்சேரி 100 அடி சாலையில் சட்டவிரோதமாக நடந்த பார் அதிரடியாக மூடப்பட்டது. அந்த பாரின் ஊழியர்கள் பிரபாகரன் (வயது 32), சபரிமுத்து (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதேபோல திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சட்டவிரோதமாக செயல்பட்ட பார் மூடப்பட்டது. இதுதொடர்பாக பார் ஊழியர்கள் கார்த்திக் (36), பிரபாகரன் (40), கணேசா (61), வாஞ்சிநாதன் (43) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
திருவொற்றியூர் எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலை டாஸ்மாக் கடை அருகே சில்லரையாக மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்ட நிதி (38) என்பவர் கைது செய்யப்பட்டார். திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சில்லரையாக மதுபாட்டில்களை விற்றதாக ராஜபாண்டி (42), ரகுபதி (38), லட்சுமணன் (46) ஆகியோர் கைதானார்கள். சென்னை கொண்டித்தோப்பு அம்மன்கோவில் தெருவில் சட்டவிரோதமாக செயல்பட்ட பார் மூடப்பட்டது. அங்கு வேலை பார்த்த மாரியப்பன் (65) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிராட்வே தபால் அலுவலக சாலையில் சட்டவிரோதமாக செயல்பட்ட மதுபார் மூடப்பட்டு, ஊழியர் ரகு (32) என்பவர் கைது செய்யப்பட்டார். புது வண்ணாரப்பேட்டை பாலகிருஷ்ணன் தெருவில் செயல்பட்ட சட்டவிரோத பார் மூடப்பட்டு, ஊழியர் அமுல்ராஜ் (60) என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அதேபோல் சென்னை புதுவண்ணாரப்பேட்டை பாரதியார் நகர் பகுதியில் உள்ள சட்டவிரோத பார் மூடப்பட்டு, ஊழியர் ராஜமாணிக்கம் (57) என்பவர் கைதானார். சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் செயல்பட்ட தனியார் மதுபாரை ஆய்வு செய்தபோது அரசு நிர்ணயித்த நேரத்தை தாண்டி அங்கு மது விற்பனை நடந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அந்த பாரின் உரிமையாளர் கார்த்திக் இளம்பழுதி, மேலாளர் ஸ்டாலின் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அந்த மதுபார் அடுத்த நிமிடமே இழுத்து மூடப்பட்டது.
சென்னை நகர எல்லைக்குள் சட்டவிரோதமாக மதுபார் நடத்துவோர்கள் மீதும், சில்லரையாக மதுபாட்டில்கள் விற்பனை செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர். இதனால் வெறும் 24 மணி நேரத்தில் சட்டவிரோதமாக 24 மணி நேரமும் மதுவிற்றவர்கள், மதுபானங்களை விற்பனை நிறுத்தி உள்ளனர். பல சட்டவிராத பார்கள் மூடப்பட்டுள்ளது. இதே நடவடிக்கையை தமிழ்நாடு முழுக்க முதல்வர் விஜய் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.














Click it and Unblock the Notifications