சேவை செய்யவே தேர்தலில் நிற்கிறேன்...நிச்சயம் ஜெயிப்பேன் - டாக்டர் சரவணன் நம்பிக்கை
சென்னை: நான் பிறந்து வளர்ந்த தொகுதி என்பதால் உங்களிடம் உரிமையாக கேட்கிறேன். நம்மில் ஒருவர் என்று நினைத்து தாமரை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச்செய்யுங்கள் என்று மண்ணின் மைந்தர் முழக்கத்தை முன் வைத்து வாக்கு சேகரிக்கிறார் மதுரை வடக்கு சட்டசபைத் தொகுதியில் போட்டியிடும் டாக்டர் சரவணன்.
எனக்கு வருமானம் மருத்துவமனையில் இருந்து வருகிறது. நீங்கள் எல்லோரும் எனது மருத்துவமனைக்கு வந்திருப்பீர்கள். உங்களைப் பற்றி எனக்குத் தெரியும். என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியும். எப்பொழுது வேண்டுமானாலும் நீங்கள் நேரடியாக வந்து என்னை சந்திக்கலாம் என்றும் மக்களிடம் உரிமையோடு பேசி வாக்கு சேகரித்து வருகிறார்
மதுரை வடக்கு சட்டசபைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் டாக்டர் சரவணன் வீதி வீதியாகச் சென்று மக்களை நேரடியாக சந்தித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளார். மதுரை பி.பி.குளம், இந்திரா நகர் பகுதிகளில் தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு கூறி வாக்கு சேகரித்தார். நேதாஜி மெயின் ரோட்டில் தொடங்கி பீ.பி.குளம், முல்லை நகர், இந்திரா நகர், காமராஜ் தெரு அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்கள் டாக்டர் சரவணன் எம்.எல்.ஏ.வுக்கு மலர்கள் தூவி உற்சாகமான வரவேற்பு கொடுத்தனர். மேலும் பல வீடுகள் முன்பு தாமரை கோலம் போட்டு வரவேற்பு அளித்தனர்.

சட்டப்போராட்டம்
வாக்காளர்கள் மத்தியில் பேசிய சரவணன், மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வீட்டுமனைப் பட்டா வழங்க உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப் போராட்டம் செய்து பட்டாவை வாங்கி தருவேன். அதுவரை உங்களுக்கு கட்டடங்களை அகற்ற விடாமல் பார்த்துக்கொள்வேன் என்றார்.

குடிநீர் வழங்கினேன்
இந்தப் பகுதி மக்களுக்கு கொரோனா காரணமாக ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தேவையான காய்கறிகள், அரிசி மற்றும் உணவுப் பொருட்களை வழங்கி உள்ளேன். குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்ட காலங்களில் எனது சொந்த செலவில் லாரி லாரியாக தண்ணீர் வழங்கி மக்கள் தாகத்தை போக்கி இருக்கிறேன்.

மக்களுக்கு சேவை செய்வேன்
இந்த சட்டசபைத் தேர்தலில் நான் வெற்றி பெற்றால் உங்களில் ஒருவனாக இருந்து மக்கள் சேவை செய்வேன். எனக்கு பணம் சம்பாதிப்பது நோக்கமில்லை. எனக்கு வருமானம் மருத்துவமனையில் இருந்து வருகிறது. நீங்கள் எல்லோரும் எனது மருத்துவமனைக்கு வந்திருப்பீர்கள்.

அமோக வெற்றி
உங்களைப் பற்றி எனக்குத் தெரியும். என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியும். எப்பொழுது வேண்டுமானாலும் நீங்கள் நேரடியாக வந்து என்னை சந்திக்கலாம். நான் பிறந்து வளர்ந்த தொகுதி என்பதால் உங்களிடம் உரிமையாக கேட்கிறேன். நம்மில் ஒருவர் என்று நினைத்து தாமரை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச்செய்யுங்கள் என்று உருக்கமாக பேசி வாக்கு சேகரித்தார்.

40 ஆயிரம் வாக்கு வித்தியாசம்
பாஜக வேட்பாளராக களமிறங்கியிருந்தாலும் அதிமுகவினர் ஒத்துழைப்போடு 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கையோடு கூறியுள்ளார் டாக்டர் சரவணன். மண்ணின் மைந்தர் முழக்கத்தை முன் வைத்து களமிறங்கியுள்ள டாக்டர் சரவணனுக்கு மதுரை வடக்குத் தொகுதி மக்களின் ஆதரவு கிடைக்குமா? தாமரை மலருமா என்பது மே 2ஆம் தேதி தெரியவரும்.