அண்ணாமலை படத்துடன் டாஸ்மாக்கில் போஸ்டர்.. என்ன எழுதியிருக்கு பாருங்க! கோவை திமுகவினர் செய்த செயல்
சென்னை: தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ.1000 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. டாஸ்மாக் முறைகேட்டை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து பாஜகவினர் சென்னையில் போராட்டம் நடத்தினர். மேலும் டாஸ்மாக் கடைகளில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ வைக்கப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இந்நிலையில் தான் கோவையில் அண்ணாமலைக்கு எதிராக திமுகவினர் டாஸ்மாக் கடை முன்பு ஒட்டிய போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவரது கட்டுப்பாட்டில் தான் மதுபானம் விற்பனை செய்யும் டாஸ்மாக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் மார்ச் 6ம் தேதி முதல் 3 நாட்கள் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டது. சென்னையில் உள்ள டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகளில் இந்த சோதனை என்பது மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனை பற்றி அமலாக்கத்துறை சார்பில் தமிழ்நாடு டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி வரை முறைகேடுகள் நடந்திருப்பதாக அமலாக்கத் துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக 2 நாட்களுக்கு முன்பு தமிழக பாஜக சார்பில் சென்னையில் உள்ள டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. போராட்டத்துக்கு குவிந்த பாஜகவினரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
மேலும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளின் முன்பும் முதல்வர் ஸ்டாலின் போட்டோ மாட்டி வைக்கப்படும் என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். அதன்படி இன்று தென்காசி மாவட்டத்தில் உள்ள சில டாஸ்மாக் கடைகளின் முன்பு பாஜகவை சேர்ந்த பெண் நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் போட்டோவை வைத்தனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தான் பாஜகவினருக்கு எதிராக திமுகவினர் போஸ்டர் ஒட்ட தொடங்கி உள்ளனர். கோவையில் திமுகவினர் நூதன போஸ்டரை ஒட்டினர். அதாவது டாஸ்மாக்கில் முதல்வர் ஸ்டாலின் போட்டோவை வைப்பதாக கூறிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக இந்த போஸ்டரை ஒட்டி உள்ளனர். டாஸ்மாக்கில் அரசு நிர்ணயித்த காசை விட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பது இல்லை என்ற வகையில் போஸ்டர் என்பது ஒட்டப்பட்டுள்ளது.
போஸ்டரில் அண்ணாமலை சவுக்கால் தன்னை தானே அடித்து கொண்ட போட்டோ இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி ‛‛சங்கிகளின் கவனத்துக்கு.. இந்த கடையில் தமிழக அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் விலைக்கு மதுவகைகள் விற்கப்படுவதில்லை'' என்று எழுதப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ இப்போது வெளியாகி இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications