சென்னை நீதிமன்ற வளாகத்திலேயே அடிதடி..சட்டையை கிழித்து சண்டையிட்டு கொண்ட வழக்கறிஞர்கள்! ஷாக் வீடியோ!
சென்னை: எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டதில் 7 பேர் காயம் அடைந்துள்ளனர். நாற்காலிகளை வீசி எறிந்து இருதரப்பு வழக்கறிஞர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கறிஞர் செந்தில்நாதன் தரப்பும், வழக்கறிஞர் விஜயகுமார் தரப்பும் இந்த மோதலில் ஈடுபட்டிருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதில் 7 வழக்கறிஞர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் தற்போது சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இது குறித்து போலீசார் கூறுவதாவது, "கொடுங்கையூரைச் சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சி.செந்தில்நாதன். தனது கட்சிக்காரரின் வழக்கு விசாரணைக்காக எழும்பூர் நீதிமன்றத்துக்கு இன்று வந்திருக்கிறார். அப்போது மதியம் 1.10 மணியளவில் இந்த அடிதடி சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது செந்தில்நாதன் அவரது சகோதரர் மற்றும் நண்பர்களுடன் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கார் பார்க்கிங் நோக்கி நடந்து சென்றிருக்கிறார்.
அப்போது அயனாவரத்தை சேர்ந்த விஜயகுமார் தலைமையிலான வழக்கறிஞர்கள் சிலர் இவர்களை வழிமறித்துள்ளனர். தற்போது நீங்கள் எடுத்து நடத்தும் கேஸை இதற்கு முன்னர் விஜயகுமார்தான் நடத்தி வந்தார். ஆனால் அவருக்கு வழங்க வேண்டிய தொகை இன்னும் வழங்கப்படவில்லை. எனவே அதை கொடுத்துவிட்டு வழக்கை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். இதற்கு செந்தில்நாதன் தரப்பு மறுப்பு தெரிவிக்கவே, இது வாக்குவாதமாக வெடித்திருக்கிறது.
இந்த வாக்குவதாம் கொஞ்ச நேரத்திலேயே மோதலாக வெடித்தது. இதில் இரு தரப்பினரும் அருகில் இருந்த சேர், கற்கள் என கையில் கிடைப்பதை எடுத்து எதிர் தரப்பினர் மீது தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் இரு தரப்பிலும் சேர்த்து 7 பேர் வரை காயமடைந்துள்ளனர். காவலர் ஒருவர் இந்த சண்டையை தடுக்க முயன்றார், ஆனால் முடியவில்லை. மறுபுறம் சில வழக்கறிஞர்களும் இந்த சண்டையை தடுத்த நிறுத்த முயன்றனர். இப்படியாக சண்டை முடிவுக்கு வந்திருக்கிறது.
இந்த அடிதடியில் செந்தில்நாதன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும், விஜயகுமார் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர். இரு வழக்கறிஞர்களிடமிருந்தோ அல்லது தாக்குதலில் காயமடைந்தவர்களிடமிருந்தோ எங்களுக்கு இன்னும் முறையான புகார்கள் எதுவும் வரவில்லை" என்று போலீசார் கூறியுள்ளனர்.
நீதிக்காய் போராட வேண்டிய வழக்கறிஞர்களே, கமிஷன் தொகைக்காக ஒருவரை ஒருவர் சட்டை கிழியும் அளவுக்கு நீதிமன்ற வளாகத்திலேயே மோதலில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications