கணிசமாக குறைந்த சுயேச்சைகளின் வெற்றி... நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர் பதவி கைப்பற்றுவதிலும் சிக்கல்
சென்னை: நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் மிகப்பெரிய வெற்றியால், வாகை சூடிய சுயேச்சைகளின் எண்ணிக்கை கடந்த தேர்தலை விட கணிசமாக குறைந்துள்ளது. இதனால் நகராட்சி, பேரூராட்சிகளில் சுயேச்சைகள் தலைவர் பதவியை கைப்பற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2011ம் ஆண்டுக்கு பின் 10 வருடம் கழித்து நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று உள்ளது. பிப்ரவரி 19ல் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் திமுக ஆதிக்கம் செலுத்தி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
திமுகவின் எழுச்சிக்கு ஈடுகொடுக்க முடியாமல் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக செல்வாக்கு உள்ள கொங்குமண்டலம், தேனி மாவட்டம் உள்ளிட்ட இடங்களில் கூட அதிமுக குறைந்த வார்டுகளிலேயே வெற்றி பெற்றுள்ளது. பாஜக, நாம் தமிழர், பாமக, தேமுதிக, அமமுக, உள்ளிட்ட பிற கட்சிகள் தனித்து போட்டியிட்டு தங்களின் செல்வாக்கை சுயபரிசோதனை செய்துள்ளன.

சுயேச்சைகள்
நகர்புற உள்ளாட்சி தேர்தலை பொறுத்தமட்டில் தமிழகம் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் சுயேச்சைகள் அதிகமாக போட்டியிடுவர். குறிப்பிட்ட வார்டில் செல்வாக்கு உள்ளவர்களும், கட்சி சார்பில் சீட் கிடைக்காதவர்களும் சுயேச்சைகளாக களம் இறங்கி வாகை சூடி பெரிய கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிப்பதும் உண்டும். இது காலம் காலமாக நடந்து வருகிறது.

ஹீரோவாக மாறும்...
மேலும் பல மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் நிர்வாகத்தை கைப்பற்ற குறிப்பிட்ட கட்சிகளுக்கு பெரும்பான்மை இல்லாவிட்டால் அங்கு ஹீரோவாக மாறுவது இந்த சுயேச்சைகள் தான். இந்த வகை அதிர்ஷ்டத்தில் சில சுயேச்சைகள் மாநகராட்சி மேயர், துணை மேயர், மாநகராட்சியின் முக்கிய நிலைக்குழு, நகராட்சி, பேரூராட்சி தலைவர்களின் பதவிகளை கேட்டு கைப்பற்றிய வரலாறும் உண்டு.

சுயேச்சை வெற்றி எவ்வளவு
ஆனால் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் 1435 சுயேச்சைகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். இதில் மாநகராட்சியில் 73 பேர், நகராட்சியில் 381 பேர், பேரூராட்சிகளில் 981 பேர் சுயேச்சைகளாக போட்டியிட்டு வெற்றி அடைந்துள்ளனர். இது கடந்த 2011 நகர்புற உள்ளாட்சி தேர்தலை ஒப்பிடும்போது குறைவாகும். ஏனென்றால் 2011ல் சுயேச்சைகளாக போட்டியிட்டவர்களில் 2788 பேர் வெற்றி பெற்றிருந்தனர். இதில் மாநகராட்சியில் 55 பேர், நகராட்சிகளில் 554 பேர், பேரூராட்சிகளில் 2179 பேர் வெற்றி பெற்றிருந்தனர்.

தலைவர் பதவிகளில்
2011ல் சுயேச்சைகளில் 5 பேர் நகராட்சி தலைவர்களாகவும், 65 பேர் பேரூராட்சி தலைவர்களாகவும் பொறுப்பேற்று செயல்பட்டனர். ஆனால் இந்த முறை பெரும்பாலான நகராட்சி, பேரூராட்சிகளில் அதிக வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதனால் 2011யை போல் இந்த முறை நகராட்சி, பேரூராட்சிகளில் சுயேச்சைகளுக்கு தலைவர் பதவி கிடைக்கும் என கூற முடியாது.

மாநகராட்சியில் அதிகரிப்பு
மேலும் கடந்த தேர்தலை ஒப்பிடும்போது தற்போது மாநகராட்சியில் யாரும் எதிர்பாராத வகையில் 20 சுயேச்சை கவுன்சிலர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் நகராட்சியில் 173, பேரூராட்சிகளில் 1198 சுயேச்சை கவுன்சிலர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதற்கு திமுகவின் கை ஒட்டுமொத்த நகராட்சி, பேரூராட்சிகளில் ஓங்கியது தான் காரணமாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications