இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம்.. வரவேற்பு தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: இந்தியா - பாகிஸ்தான் 2 நாடுகளும் இன்று மாலை 5 மணியுடன் போர் நிறுத்தம் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன. இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர், பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 26 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடியாக இந்தியா கடந்த மே 7 ஆம் தேதி பாகிஸ்தான் மீதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத தாக்குதல் முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

ஆபரேஷன் சிந்தூர் எனப் பெயரிடப்பட்ட இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதலுக்கு பல்வேறு தரப்பிலும் வரவேற்பு கிடைத்தது. மறுபக்கம் பாகிஸ்தான் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தது. தொடர்ந்து கடந்த 2 நாட்களாக ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட இந்திய எல்லை மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்தியாவும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தாக்குதல் நடத்தியது.
இந்தியா - பாகிஸ்தான் போர் காரணமாக பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் போரை கைவிட்டு அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா பாகிஸ்தானுக்கு கோரிக்கை வைத்தன. இந்நிலையில் அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தையில் இந்தியா - பாகிஸ்தான் 2 நாடுகளும் போர் நிறுத்த உடன்பாடுக்கு ஒப்புதல் தெரிவித்து விட்டதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அவரின் அறிவிப்பை உறுதி செய்யும் விதமாக இந்தியா - பாகிஸ்தான் 2 நாடுகளும் இன்று மாலை 5 மணியுடன் போர் நிறுத்தம் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன. பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராகவும், இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணி சென்னையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. சரியாக 5 மணிக்கு தேசிய கொடியுடன் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பேரணியில் கலந்து கொண்ட நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: " இந்திய ஆயுதப் படைகளுடன் சேர்ந்து தமிழ்நாடு ஒற்றுமையுடன் அணிவகுத்தது. போர் நிறுத்தம் வரவேற்கத்தக்க நடவடிக்கை. அமைதி நிலைத்திருக்கட்டும். நமது எல்லைகளைக் காக்கும் வீரர்களின் துணிச்சலுக்கு எங்கள் மனமார்ந்த வணக்கம்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications