ஊழல் விவகாரத்தில் சஸ்பெண்ட்டாகும் அரசு ஊழியர்கள்.. சில சலுகைகளை ரத்து செய்ய அரசுக்கு பரிந்துரை!
சென்னை: போக்சோ மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சஸ்பெண்ட் செய்யப்படும் அரசு ஊழியர்களுக்கு, சஸ்பெண்ட் காலத்திற்கான பிழைப்பூதியம் வழங்காமல் இருக்கும் வகையில் சட்டங்களில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
பேரூராட்சிகளில் எத்தனை பேர் ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளனர்? எத்தனை பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்?என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி, பேரூராட்சிகள் ஆணையத்திடம் ஆர்.பெரியசாமி என்பவர் மாநில தகவல் ஆணையத்துக்கு விண்ணப்பித்திருந்தார்.

பாலியல் கொடுமை புகார்கள்
இதேபோல் பாலியல் கொடுமை தொடர்பாக எத்தனை ஆசிரியர்கள்? எத்தனை ஊழியர்கள்? மீது புகார் வந்துள்ளது. எத்தனை பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது? எத்தனை பேர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? எத்தனை பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்? என்று முருகேஷ் என்பவர் பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்துக்கு கேள்வி எழுப்பியிருந்தார்.

60 பேர் சஸ்பெண்ட்
இதற்கு சம்மந்தப்பட்ட துறை பொது தகவல் அதிகாரிகள் சரியான பதில்கள் தராததால் இருவரும் மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த மாநில தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ், பேரூராட்சிகள் ஆணையத்தின் பொது தகவல் அதிகாரி அளித்த தகவலில் பேரூராட்சிகள் ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் 42 பேர் நடவடிக்கை எடுக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதர குற்றங்களுக்காக 60 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரவித்தார்.

அரசு ஊழியர்கள்
பள்ளிக்கல்வி துறை பொது தகவல் அதிகாரி இதுவரை பாலியல் குற்றங்களுக்காக 232 ஆசிரியர்கள், ஊழியர்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். லஞ்ச வழக்குகளிலும், போக்சோ சட்டங்களின் கீழும் நடவடிக்கைக்கு உள்ளாகும் அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படும்போது அந்த காலத்தில் அவர்களுக்கு முதல் 90 நாட்களுக்கு 50 சதவீதம் ஊதியம் பிழைப்பூதியம் என்ற பெயரில் வழங்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய தகவல் ஆணையர்,

அரசுக்கு பரிந்துரை
சஸ்பெண்ட் செய்யப்படுபவர்களுக்கு வழங்கப்படும் பிழைப்பூதியம் அரசுக்கு பெரும் நிதி சுமையை ஏற்படுத்துகிறது என்பதால், ஊழல் மற்றும் போக்சோ குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகும் அரசு ஊழியர்களின் சஸ்பெண்ட் காலத்தில் பிழைப்பூதியம் வழங்குவதிலிருந்து விலக்கு அளிக்கு அளிக்கும் வகையில் தமிழ்நாடு சம்பளம் மற்றும் பிழைப்பூதிய சட்டம் மற்றும் பணி தொடர்பான சட்டங்களில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தகவல் ஆணையர் அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications